அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்து வேலூர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை வேறு நீதிபதி தான் விசாரிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அமைச்சர் பொன்முடி தரப்பும் வாதிட்டனர்.
திமுக ஆட்சியான 2006 முதல் 2011 ஆம் ஆண்டு காலத்தில் உயர் கல்வி மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி, அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தொடர்ந்து நடைபெற்ற அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கு, வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணை பல ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், குற்றச்சாட்டுக்களுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை கடந்த ஜூன் 28ம் தேதி விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
இந்நிலையில், அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்து வேலூர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, பொன்முடி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகினர்.
அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்கும் முன்பு லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பு விளக்கத்தை கேட்கவில்லை. கடந்த ஜூன் மாதம் தான் வேலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், மேல் முறையீடு செய்ய அவகாசம் இருந்ததை கருத்தில் கொள்ளாமல், முன் முடிவெடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஏற்கெனவே முன்கூட்டியே தீர்மானித்து எடுத்ததுபோல் உள்ளது. பொதுவாக தாமாக முன்வந்து விசாரணக்கு எடுக்கப்படும் வழக்குகளை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்க வேண்டும். அந்த வழக்கை எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்பதை தலைமை நீதிபதிதான் முடிவு செய்வார். எனவே இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும்என வாதிடப்பட்டது.
பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கு விசாரணை விழுப்புரத்தில் இருந்து வேலூர் மாற்றப்பட்டதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார். இதையடுத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கை தானே விசாரிப்பதா அல்லது வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைப்பதா என்பது குறித்து செப்டம்பர்14-ம் தேதி முடிவு செய்யப்படும் என தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.