கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம்... அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

Published : May 15, 2022, 03:28 PM IST
கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம்... அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சுருக்கம்

நெல்லை கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் காயமுற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா 1 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். 

நெல்லை கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் காயமுற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா 1 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். நெல்லை பொன்னாக்குடி அருகே கல் குவாரி ஒன்று அமைந்துள்ளது. இங்கு தொழிலாளர்கள் நேற்று குவாரி பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கல் குவாரியில் இருந்த பாறை திடீரென சரிந்து விழுந்தது. இதில் 300 அடி ஆழ பள்ளத்தில் 6 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். மீட்புப் பணிகளில் ஹெலிகாப்டர், ராட்சத இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். இதனிடையே நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக உரிமையாளர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் நெல்லை கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் காயமுற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா 1 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (14.5.2022) இரவு சுமார் 11.30 மணியளவில், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், தருவை கிராமம், அடைமிதிப்பான்குளம் என்ற இடத்தில் அமைந்துள்ள கல்குவாரியில் மிகப்பெரிய பாறைகள் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் முருகன், விஜய், செல்வம், முருகன், ராஜேந்திரன், செல்வகுமார் ஆகிய ஆறு பேர் சிக்கியுள்ளனர். அதில் முருகன் மற்றும் விஜய் ஆகியோர் மீட்கப்பட்டு அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த விபத்தில் சிக்கியுள்ள செல்வம், முருகன், செல்வகுமார் மற்றும் ராஜேந்திரன் ஆகியோரை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த துயரமான செய்தியைக் கேள்வியுற்று மிகவும் வேதனை அடைந்தேன்.

மேலும், மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு, துரிதப்படுத்த சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு செல்ல பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலாளர் மற்றும் கனிமவளத் துறை இயக்குநர் ஆகியோரை அறிவுறுத்தியுள்ளேன். இவ்விபத்தில் சிக்கியுள்ள நபர்களை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீட்புப்பணிகளுக்கு உதவிட தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் அரக்கோணத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து குறித்து காவல்துறையினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 1 இலட்சம் ரூபாய் நிவாரண நிதி உதவி வழங்கிட ஆணையிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!
திமுக ஆட்சியில் தலைதூக்கிய துப்பாக்கி கலாசாரம்.. போட்டுத் தாக்கிய அதிமுக!