
தாங்கள் நிறைவேற்றும் தீர்மானத்தை கவர்னர் ஏற்காத போது தாங்கள் ஏன் கவர்னரை ஏற்க வேண்டும் என்று இந்து அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார். திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளதை அடுத்து திமுக ஓராண்டு சாதனை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் வடசென்னைக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டையில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக எம்.பி.தயாநிதி மாறன், இந்து அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், கொரானாவிலும் மழையிலும் உங்கள் வீட்டு வாசலில் வந்து நின்ற முதல்வர் மு.க.ஸ்டாலின. காலில் விழுந்தவர்கள் இருந்த இடத்தில் கம்பீரமாக வந்து ஆட்சி நடத்திக் கொண்டிருப்பவர் முதல்வர் ஸ்டாலின். பதவியேற்றவுடன் உடனடியாக விவசாயகடனையும், நகைக்கடன் 1000 கோடியையும் தள்ளுபடி செய்தவர் முதல்வர் ஸ்டாலின்.
மற்ற மாநிலத்தில் வேலை செய்த ரேடார் கருவி தமிழகத்தில் செயல்படாமல் இருந்ததால் அதற்கும் நிதி ஒதுக்கியவர் ஸ்டாலின். இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு 200 கோடி ஒதுக்கியவர் நம் முதல்வர். பெண்கள் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என உணர்ந்து கல்வியில் முன்னேற்றம் காண செய்கிறார் முதல்வர் ஸ்டாலின். பெட்ரோல் டீசல் விலையை பற்றி கவலைப்படாமல் விதவிதமான ஆடைகளை அணிந்து குஜராத்தியர்களைத தவிர வேறு யாரும் தொழில் செய்ய முடியாது என்பதை போல் மோடி செயல்பட்டு வருகிறார். பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளான அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கனவை இந்த ஆட்சியில் அமைச்சர் சேகர்பாபு சட்டமாக்கியது மட்டுமலலாமல் தமிழக கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை என மாற்றியுள்ளார்.
எனக்கு இந்தி தெரியாது ஆனால் இந்தியாவை பற்றி தெரியும் என்பதாலையே கருணாநிதி என்னை மத்திய அமைச்சராக்கினார் என்று தெரிவித்தார். அவரை தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, திமுக பதவியேற்றதிலிருந்து என்ன வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்கள் என எதிர்கட்சிகள் கேட்கிறார்கள். இதுவரை 363 வாக்குறுதிகள் ஓராண்டிலேயே நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசால் நியமிக்கப்பட்டிருக்க கூடிய கவர்னரால் தமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணித்து வருகிறது. தலைக்குமேல் எச்சம் இடுவதையே எதிர்க்கிறோமே தவிர காகத்தை எதிர்க்கவில்லை. நாங்கள் நிறைவேற்றும் தீர்மானத்தை கவர்னர் ஏற்காத போது நாங்கள் ஏன் கவர்னரை ஏற்க வேண்டும். தருமபுரம் ஆதினத்தை கையில் எடுத்து திமுக ஆட்சியை இந்து விரோத ஆட்சியாக காட்ட எதிர்கட்சிகள் முற்பட்டது. தருமபுரம் ஆதினமே இது ஆன்மீக ஆட்சி என்று கூறிவிட்டது என்று தெரிவித்தார்.