
இந்தப் கொரோனா பெருந்தொற்று சூழ்நிலையால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, சமூக அழுத்தங்கள் நம்மை மோசமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. நீண்டகாலம் தனிமைப்படுத்தல் நிலையில் இருப்பது, மன அழுத்தம், கடன் பிரச்சனை, உணர்வுகள் பாதிப்பு, மனச்சோர்வு, தூக்கமின்மை, பதற்றம், எரிச்சல், வெறுப்பு போன்றவற்றை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ள மற்றொரு முக்கிய காரணியாகக் கருதப்படுகிறது. எனவே, இவற்றிலிருந்து நம்மை தற்காத்து கொள்வது அவசியம். இதற்காக, உணவு கட்டுப்பாடு, ஆரோக்கியமாக வாழ்வதற்கு உடல் எடை குறைப்பு போன்றவற்றை தொடர்ந்து வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவை, என்ன என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்வோம்.
உடல் எடையைக் குறைப்பதற்கு, உடலுக்குத் தேவையான அளவு கலோரியை மட்டும் எடுத்துக்கொள்வது, அதிகப்படியாக சேமிக்கப்பட்டுள்ள ஆற்றலை பயன்படுத்துவது என இரண்டு முக்கிய வழிகள் உள்ளன. நாம் உண்ணும் உணவே, நம் உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது.
உணவில் இருந்து கிடைக்கும் ஆற்றலில் செலவழிக்கப்பட்டது போக, மீதி உடலில் அப்படியே தங்கிவிடும். இவ்வாறு தங்கும் அதிகப்படியான ஆற்றல் கொழுப்பாக மாறும். எடைக் குறைப்பு முயற்சியில் உணவுக் கட்டுப்பாடு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு உடற்பயிற்சியும் முக்கியம். அதிக கலோரிகளைக் குறைப்பதற்கு உடற்பயிற்சியே சிறந்த வழி.
எந்த வகையான உடற்பயிற்சி மேற்கொள்ளும் போதும், உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தில் மாற்றங்கள் நிகழும். இவை நம் உடலில் உள்ள கலோரிகளின் அளவைக் குறைப்பதற்கு உதவும். இதன் மூலம் உடல் எடை வெகுவாக குறையும்.
உடற்பயிற்சி என்றவுடன் கடுமையாக உடலை வருத்தி பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது ஏரோபிக்ஸ், ஜும்பா, உடலை வலுப்படுத்தும் ஆசனங்கள், ஆரம்ப கட்ட தசைப்பிடிப்பு தளர்வு பயிற்சிகள், இதயத்தை பலமாக்கும் பயிற்சிகள், போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யலாம். இது உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை கணிசமான அளவு குறைக்கும். வயதான காலத்தில் மட்டும்மல்ல எப்பொழுதுமே உடல் நன்றாக இருக்கவும், இயங்கவும், உடற்பயிற்சி, சைக்கிள், பயிற்சி, யோகா மற்றும் நடைபயிற்ச்சியை நமது உடல் வாகு மற்றும் வயதுக்கு ஏற்றவாரு தினசரி செய்து வர வேண்டும்.
தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும்போது, உடலில் சேமிக்கப்படும் கலோரிகள் அதிக அளவில் எரிக்கப்படுகிறது. இதனால் உடலின் வளர்சிதை மாற்றம் சீராகும். உடல் எடையைக் குறைக்கவும், கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் இயலும். தவிர, இதயம் சார்ந்த நோய்களும், பிரச்சினைகளும் ஏற்படுவதை தடுக்கும். உடலின் சீரான ரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலின் உள் உறுப்புகள் அனைத்துக்கும் தேவையான அளவு ஆக்சிஜன் கிடைக்க வழி வகுக்கும்.
இன்சுலின் சுரப்பை மேம்படுத்தி, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவும். தசைகள் மற்றும் எலும்புகள் வலுவடையும். புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும். தடைகளற்ற சீரான தூக்கத்துக்கு வழிவகுக்கும். உடலையும், மனதையும் இளமையாக வைத்திருக்க உதவும்.
உடற்பயிற்சி செய்யும்போது உடலில் ஏற்படும் வேதி மாற்றங்கள் உடல் மற்றும் மனநலனில் நன்மை பயக்கும் மாற்றங்களை ஏற்படுத்தும். இதன் மூலம் உடல் மற்றும் மனதளவில் ஏற்படும் அழுத்தம், சோர்வு நீங்கி புத்துணர்வு பெற செய்யும். சிந்தனைத் திறனை மேம்படுத்தி, எளிதில் சரியான முடிவெடுக்கும் தன்மையை ஊக்குவிக்கும்.
உணவில் மாற்றம்:
உணவில் காய்கள், கீரைகள், பழக்கள், தானியங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். சரியான நேரப்படி உணவு அருந்துவது நல்லது.
உணவில் ஒரேவிதமான தானியத்தை சேர்த்துக் கொள்வதைத் தவிர்த்து கம்பு, கேப்பை, கோதுமை, சிகப்பு அரிசி என வெவ்வேறு தானியங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். நமது மாறிப்போன உணவுமுறை காரணமாக உடல் சூடு பிரச்சனை அதிகரித்துவிட்டது. தினமும் சிறிது அளவு கம்பு கூழ் குடித்து வந்தால் உடல் சூடு தணியும். தவறான உணவு பழக்கங்களின் விளைவாக மலசிக்கல் பிரச்சனை அதிகமாகிவிட்டது.
எனவே, நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் கவலைகள் இருக்கக் கூடாது. மன அழுத்தம் தரும் விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். உடனடியாக மாற்று செயல்களில் ஈடுபடுவதன் மூலம் கவலையைத் திசை திருப்பி மீண்டும் புத்துணர்ச்சியாக செயல்பட முடியும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.