
விநாயகர் சதுர்த்தி என்றாலே நாம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது மோதகம் கொழுக்கட்டை. வெளியே வெள்ளை நிறத்திலும் உள்ளே பொன்னிறத்தில் நாவில் எச்சில் ஊற வைக்கும் பூரணத்தை வைத்து செய்யப்படும் இந்த மோதக கொழுக்கட்டையானது ஒருவித தனித்துவமான ருசியை கொண்டது. வாயில் வைத்ததும் கரையக்கூடிய இந்த சுவையான மோதக கொழுக்கட்டையை சுலபமாக செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
மோதகம் கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள் :
பச்சரிசி - 200 கிராம்
புழுங்கல் அரிசி - 200 கிராம்
வெல்லம் - 100 கிராம்
ஏலக்காய் - 2-3
தேங்காய் எண்ணெய் - 1/2 ஸ்பூன்
உப்பு - 1/4 ஸ்பூன்
தேங்காய் துருவல் - தேவையான அளவு
பாசிப்பருப்பு - 1 கப்
செய்முறை :
விநாயகருக்கு பிடித்த மோதகம் கொழுக்கட்டை செய்ய முதலில் பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசி இவை இரண்டையும் நன்கு கழுவி சுமார் 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தண்ணீரை நன்கு வடித்த பிறகு ஒரு துணியில் போட்டு காய வைக்க வேண்டும். நன்கு காய்ந்த பிறகு அரிசியை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு கடினமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் அரிசி மாவை போட்டு வதக்கவும். மாவில் ஈரப்பதம் நீங்கியவுடன் அதை வேறுறொரு பாத்திரத்தில் கொட்டி ஆற வைக்கவும். பிறகு வறுத்த மாவை இடித்து பின் சல்லடையில் போட்டு சலித்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் கொழுக்கட்டை செய்வதற்கான மாவு ரெடி!
இப்போது தேங்காய் துருவி, வெல்லத்தை பொடியாக்கி கொள்ளுங்கள். பாசிப்பருப்பையும் வேக வைத்துக் கொள்ளுங்கள் ஏலக்காயை தூளாக்கவும். பிறகு இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அவ்வளவுதான் பூரண கலவையும் தயார்.
இப்போது கொழுக்கட்டை மாவில் சிறிதளவு உப்பு சேர்த்து சூடான தண்ணீர் ஊற்றி கிளறி மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளுங்கள். பின் எலுமிச்சை சைஸில் மாவை எடுத்து அதை உருட்டி கிண்ண வடிவில் செய்யுங்கள். அதில் கொஞ்சமாக பூரண கலவையை வைத்து மூடி உருண்டையாக பிடிக்கவும். ஒருவேளை உங்களிடம் கொழுக்கட்டை அச்சு இருந்தால் அதைக் கூட பயன்படுத்தலாம். கொழுக்கட்டையை உருட்டும்போது பூரண கலவை வெளியே வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். இப்படியே எல்லா மாவையும் கொழுக்கட்டைகளாக தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக அடுப்பில் ஒரு இட்லி பாத்திரம் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சூடானதும் அதில் தட்டில் கொழுக்கட்டையை அடுக்கி வைத்தி, ஆவி வரும் வரை நன்றாக வேக வைத்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் வாயில் வைத்ததும் கரையக்கூடிய ருசியான விநாயகர் சதுர்த்தி மோதக கொழுக்கட்டை ரெடி!!
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.