
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று (20-ந்தேதி) துவங்கி, வரும் மார்ச் 1-ந் தேதி வரை நடைபெறுகிறது.
அதன்படி, இன்று இரவு புன்னை மர வாகனம், 21-ந்தேதி காலை சேவு வாகனம், இரவு சிம்ம வாகனத்தில் வீதி உலா வருகிறார். 22-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு கருட சேவை நடைபெறுகிறது. பகல் 12 மணிக்கு ஏகாந்த சேவை நடக்கிறது. இரவு 7.45 மணிக்கு அம்ச வாகனம், 23-ந்தேதி காலை சூரிய பிரபை, இரவு சந்திர பிரபை வாகனத்திலும், 24-ந்தேதி காலை பல்லக்கில் நாச்சியார் திருக்கோலத்திலும், இரவு அனுமந்த வாகனத்திலும் சாமி வீதி உலா நடக்கிறது.
இதையொட்டி, தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமிக்கு விலை உயர்ந்த ஆபரணங்கள் சாத்தப்பட்டு பல்வேறு வாகனங்களில் பெருமான் எழுந்தருளி கோவிலை சுற்றியுள்ள தென் மாடவீதி, துளசிங்கப் பெருமாள் கோவில் தெரு, சிங்கராச்சாரி தெரு, தேரடி தெரு மற்றும் திருக்குளத்தை சுற்றியும் திருவீதி புறப்பாடு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மேலும், 25-ந்தேதி அதிகாலை 5.15 மணிக்கு சூர்ணாபிஷேகம் நடக்கிறது. காலையில் ஆனந்த வாகனத்திலும் இரவு யானை வாகனத்திலும் சாமி வீதி உலா நடக்கிறது.
7-ம் நாள் திருவிழாவான 26-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று அதிகாலை 2.15 மணிக்கு திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 7 மணிக்கு பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு தோட்டத் திருமஞ்சனம் நடக்கிறது.
27-ந்தேதி காலை பல்லக்கில் வெண்ணை தாழி கண்ணன் திருக்கோலத்திலும் இரவில் குதிரை வாகனத்திலும், 28-ந்தேதி காலை ஆளும் பல்லக்கிலும், இரவு கண்ணாடி பல்லக்கிலும் வீதி உலா நடக்கிறது. அன்று பகல் 11 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. மார்ச் 1-ந்தேதி அவரோ ஹனம், துவாதச ஆராதனம், சப்தாவர்ணம்- சிறிய திருத்தேர் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் வரலாறு:
புராண காலத்தில் இத்தலம் “பிருந்தாரண்ய க்ஷேத்ரம்” என அழைக்கப்பட்டது. மகாபாரத யுத்தத்தின் போது பஞ்ச பாண்டவர்களில் “பார்த்தனாகிய” “அர்ஜுனனுக்கு” அவனின் ரதத்தை செலுத்தும் “சாரதியாக” பகவான் “கண்ணன்” ஏவல் புரிந்தார். அந்த கண்ணனே இங்கு கோவில் கொண்டுள்ளதால் இந்த இறைவனுக்கு “பார்த்தசாரதி” பெருமாள் என பெயர் ஏற்பட்டது.
இக்கோவிலின் மூலவரான பார்த்தசாரதி பெருமாளின் சிலை “9” ஆடி உயரம் கொண்டது. அனேகமாக பாரதத்தில் இந்த கோவிலின் பெருமாள் மட்டுமே முகத்தில் மீசையுடன் காட்சி தருகிறார்.
இங்கு பார்த்தசாரதி பெருமாள் தன் மனைவி மற்றும் சகோதரர் என குடும்பம் சகிதமாக இருக்கிறார். பொதுவாக எல்லா பெருமாள் விக்கிரகங்களும் கையில் ஏதேனும் ஒரு ஆயுதம் ஏந்தியிருப்பதை காணலாம். ஆனால் இத்தல கடவுளான பார்த்தசாரதி பெருமாள் தனது கையில் ஆயுதம் ஏதும் இன்றி இருப்பது கூடுதல் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.