அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய கோடைக்கால "சிறப்பு டிப்ஸ்"...!

By ezhil mozhiFirst Published Apr 3, 2020, 8:39 PM IST
Highlights

கோடைகாலத்தில் காமாலை நோய் உடலில் ரத்தத்தில் பித்த நிறமி அதிகம் கலப்பதால் ஏற்படும் . மது பழக்கம் அதிகம் உள்ளவர்களுக்கு பெரும்பாலும் ஏற்படும். ஆகையால் மதுவினை தவிர்ப்பது நல்லது. கல்லீரல் குளிர்ச்சியாக்க கரிசாலை கீரையினை கோடைக்காலம் முழுவதும் எடுத்து கொள்ளலாம். 

அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய கோடைக்கால "சிறப்பு  டிப்ஸ்"...! 

கோடைக்காலம் துவங்கி வெயில் நம்மை சுட்டெரித்து கொண்டிருக்கிறது. மாறிவரும் இயற்கை சூழலும், காற்றின் மாசு நாளுக்கு நாள் அதிகரிப்பதாலும், மரங்கள் அதிகம் வெட்டப்பட்டு கட்டிடங்கள் அதிகமானதால் வெப்பம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. தர்பூசணி, எலுமிச்சை, முலாம் போன்ற நீர்ச்சத்து மிக்க பழங்களையும்,மோர்,கேழ்வரகு, கூழ் போன்ற உணவுகளையும் வெப்பத்தால் பாதிக்கப்பட்ட  உடலை குளிர்ச்சி செய்யும் பொருட்டு எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் அத்தனையும் தாண்டி வெப்பக்கால நோய்கள் அங்கங்கே வந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்த நோய்கள் எவை? அவற்றில் இருந்து காத்துக்கொள்வது எப்படி ? 

வெய்யிலின் தாக்கத்தால் காமாலை, அம்மை நோய், கண் நோய்கள், சிறுநீரகப்பாதை தொற்று நோய்கள்,தோல் நோய்கள், வெப்பு அதிர்ச்சி தாக்குதல்  முதலியன பொதுவாக உண்டாகும் . முக்கியமாக நீர் மற்றும் உணவு சுகாதார கேட்டினால் வைரஸ் காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல், காலரா , ஹெபாடைடிஸ்   `எ’  & ‘பி’ ஏற்படும் அபாயம் உள்ளது. ஆதலால் நீரினை கொதிக்க வைத்து பயன்படுத்துதல் அவசியம். பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்ட குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது. 

கோடைகாலத்தில் காமாலை நோய் உடலில் ரத்தத்தில் பித்த நிறமி அதிகம் கலப்பதால் ஏற்படும் . மது பழக்கம் அதிகம் உள்ளவர்களுக்கு பெரும்பாலும் ஏற்படும். ஆகையால் மதுவினை தவிர்ப்பது நல்லது. கல்லீரல் குளிர்ச்சியாக்க கரிசாலை கீரையினை கோடைக்காலம் முழுவதும் எடுத்து கொள்ளலாம். கீழாநெல்லி முழு செடியினையும் அரைத்து காலை வெறும் வயிற்றில் மோருடன் எடுத்து கொள்ளலாம். நெருஞ்சில்முள் கல்லீரல், சிறுநீரகம் ஆகிய இரண்டு உறுப்பிற்கும் நல்லது. ஆகையால் அதனை வெய்யில் தாக்கம் அதிகம் உள்ள காலங்களில் நீரில் கொதிக்க வைத்து எடுத்து கொள்ளலாம் .

நம் உடலின், கண்கள் பித்தத்தின் உறுப்புக்கள்.  பித்த காலமாகிய கோடைக்காலத்தில் கண்கள் பாதிக்கபடுவது எளிது. கண்களை குளிர்ச்சியாக்க உள்ளங்கால்களில் இரவில் நல்ல எண்ணெய் தடவி விடலாம் . கண் வலிக்கு சீரகத்தை பாலில் பொட்டலம் கட்டி வேக வைத்து கண்ணுக்கு ஒற்றடம் இடலாம். ரோஜாப்பூ இதழ்களை நீரில் ஊற வைத்து அந்த நீரில் கண்களை கழுவி வர கண்ணிற்கு குளிர்ச்சி தரும். பித்தத்தை குறைக்கும் எலுமிச்சை,மாதுளை , நாரத்தை பழங்களை எடுத்து கொள்ளலாம் .

அதிக வெயிலை தொடர்ந்து நடுவே,  மழை பெய்து குளிர்ச்சியாக்கும் போது தட்டம்மை , சின்னம்மை நோய்கள் பரவும். அம்மை நோய் வராமல் தடுக்க தாழம்பூ மணப்பாகினை எடுத்து கொள்ளலாம். அம்மை நோய் வந்தவர்களை தனிமைப்படுத்துதல் பரவாமல்  தடுக்கும். வந்தவர்களுக்கு வேப்பிலையுடன், அதிமதுரம் சேர்த்து வெறும் வயிற்றில் மோருடன் தரலாம். வேப்பிலை பித்தத்தையும் குறைக்கும், வைரஸ் கிருமியின் வீரியத்தையும் குறைக்கும் . 

சிறுநீரகப்பாதை நோய்களான கல்லடைப்பு, அதில் தொற்று கிருமிகள் , சிறுநீர் எரிச்சல் முதலிய குறிகுணங்கள் வெயில் காலத்தில் அதிகம். நம் குடிக்கும் நீரானது தோலில் இழக்கக் படுவதால், சிறுநீரகத்தில் வறட்சி ஏற்பட்டு மேற்க்கூறிய குறிகுணங்கள் ஏற்படும் . அவரவர் உடல் ஏடைக்கு ஏற்றார் போல நீரினை பருக வேண்டும் .நீர் எரிச்சல் உள்ளவர்கள் வெள்ளரி விதை, முலாம் பழ விதை, தர்பூசணி விதை இவற்றை சேர்த்து நீரிலிட்டு காய்ச்சி  அருந்தலாம். முள்ளங்கியோடு அதன் கீரையும் உணவில் சேர்க்கலாம் .கல்லடைப்புக்கு  நெருஞ்சில் முள், சிறுபீளை இவற்றை குடிநீரிட்டு பருகலாம். சிறுநீரகத் தொற்றுக்கு மூக்கிரட்டை கீரையை நீரிலிட்டு காய்ச்சி வெள்ளரி விதை பொடி சேர்த்து குடிக்கலாம் .

தோல் ஒவ்வாமை வெயில் காலங்களில் பொதுவாக ஏற்படும் ஒன்று. வெயிலில் அலைந்து பணி செய்பவர்கள் முழு சட்டை அணிதல் நல்லது. இலேசான காற்றோட்டம் மிக்க ஆடைகளை குழந்தைகளுக்கு உடுத்துவது நல்லது. சூரியனின் புற ஊதா  கதிர் வீச்சு அதிகம் இருக்கும் என்பதால் வியர்க்குரு, ஒவ்வாமை அதிகம் ஏற்படும் அபாயம் உள்ளது .ஏற்கனவே தோல் நோய் உள்ளவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவர். அவர்கள் கோடைக்காலத்தில் பருத்தி உடைகளை அணிவது சிறந்தது. தோல் வறட்சி வராமல் தடுக்க வெட்டிவேர் சேர்ந்த குளியல் பொடியினை வாங்கி பயன்படுத்தலாம் . நீண்ட நேரம் குளியலை தவிர்த்து , குளித்து முடிந்த பின் ஈரப்பதத்தை தக்க வைக்க களிம்புகளை பயன்படுத்தலாம் . தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய். ஆமணக்கு எண்ணெய் , சூரியகாந்தி  எண்ணெய் இவற்றில் ஒன்றை பயன்படுத்தலாம்.

உடல் வெப்பநிலை 105  டிகிரியை தாண்டும் போது  வெப்ப அதிர்ச்சி தாக்குதல் ஏற்படும். இதனால் உடல் சோம்பல், தலை சுற்றல், மயக்கம், படபடப்பு, மூச்சு சுவாசம் அதிகரித்தல் , மன குழப்பம் , உடல் உள் உறுப்புகள் சேதாரம் , சுய நினைவை இழத்தல் போன்ற தீவிர குறிகுணங்கள் உண்டாகும் . இதனை தடுக்க நீர் அதிகம் குடித்தல் , இருமுறை குளித்தல், வியர்வை வெளிப்படும் படியான தளர்வான ஆடைகளை அணிதல் அவசியம். 

குளிர்பானங்களில் உள்ள நிறமூட்டவும் சுவைகளுக்காகவும் சேர்க்கப்படும்  பல வேதி பொருட்கள் புற்று நோய் தூண்டும் காரணிகளாக உள்ளன. அதில் உள்ள இனிப்பு சத்தும், அமில சத்தும் ,கார்பன்  டை ஆக்சைடு மெல்ல மெல்ல நம் பல்லீறு, குடல் பகுதியினை அரிக்கும் தன்மை உடையது. இதனால் பின் நாட்களில் வயிற்று புண், நீரிழிவு, உடல் பருமன், எலும்பு தேய்மானம், புற்று நோய்  ஏற்பட  வாய்ப்பு அதிகம். சில குளிர்பானங்களில் கிருமிகள் சேராமல் பாதுகாக்க சேர்க்கப்படும் உப்பு சத்துக்களால் (benzoate ) புற்று நோயினை உண்டாக்கும் அபாய நிலை உள்ளது .மேலும் குளிர்பதன பெட்டிகளில் உணவு பொருட்களை பதப்படுத்தி வைத்து பயன்படுத்துவது உடலுக்கு கேடு தரும். 

ஆகையால் இயற்கையான முறைகளில் பழங்களையும், குளிர்ச்சி தரும் காய்களையும், உணவு வகைகளையும், எடுத்து  கொண்டு  இயற்கையான முறையில் வாழ்ந்தால் கோடை வெய்யிலின்தாக்கம் மட்டுமில்லாமல் ,பல்வேறு  நோய்நி-லைகளின் தாக்கமும்  இல்லாமல்  நெடுநாள் வாழலாம் என்பதில் ஐயமில்லை.

click me!