உடலில் திடீர்.... திடீர்...ன்னு மச்சம் வருதா? அலட்சியம் வேண்டாம்...இந்த பாதிப்பாகவும் இருக்கலாம்..!!

By Dinesh TGFirst Published Sep 25, 2022, 4:06 PM IST
Highlights

உடலில் இருக்கும் மச்சம் அழகுக்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஆனால் எல்லா வகையான மச்சங்களையும் அப்படிப்பார்க்க முடியாது. உடலில் ஏற்படும் கரும்புள்ளிகள் மச்சமாக இல்லாமல், ஆபத்துக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். 
 

தோலில் இருக்கும் உயிரணுக்கள் இயல்பை மீறி வளருவதும் பெருவதும் தோல் புற்றுநோய் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தோல் புற்றுநோயில் அடிக்கல புற்றுநோய், செதிட்கல புற்றுநோய், மெலனோமா என 3 வகைகள் உள்ளன. மற்ற புற்றுநோய்களை போல இல்லாமல், இதை தொடக்கக் காலத்தில் கண்டறிவதால், விரைவில் இது குணமடைந்துவிடும்.

புற ஊதா கதிர்களின் பாதிப்பால் தோல் புற்றுநோய் ஏற்படுகிறது. முகத்தில் மட்டுமே அடிக்கல் புற்றுநோய் தோன்றும். இதை கதிரியக்கம் கொண்டு எளிதில் குணப்படுத்திவிட முடியும். புற்றுநோயின் தன்மையை பொறுத்து இதற்கு அறுவை சிகிச்சையும் தேவைப்படுகிறது. செதிட்கல புற்றுநோய் ஓரளவு பரவும் தன்மை கொண்டவை. இதற்கு மருத்துவர்கள் கொண்டு சிகிச்சை முறையை தொடங்கலாம்.

மூன்றாவதாக இருக்கும் மெலனோமா அல்லது கரிநிறமி புற்றுநோய் ஆபத்தானவை ஆகும். இதற்கு இடம்பெயரும் தன்மை உள்ளது. தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. தோலில் கருப்பாக மச்சம்போல தோன்றுவது அல்லது மச்சத்தில் வேறு ஏதாவது மாறுபாடு ஏற்படுவது போன்றவை முக்கிய அறிகுறிகளாகும். 

மச்சத்தின் ஓரங்கள் ஒழுங்கற்றுப் போவது, அதனுடைய ஓரங்கள் சொற சொறப்பாக இருப்பது, மச்சம் பெரிதாகிக் கொண்டே செல்வது போன்றவை மெலனோமா புற்றுநோயின் அடுத்த அறிகுறிகளாகும். ஆண்களுக்கு நெஞ்சு மற்றும் முதுகுப் பகுதியிலும் பெண்களுக்கு கால்களின் கீழ்ப்பகுதியிலும் இந்த புற்றுநோய் பாதிப்பு உருவாகும்.

உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் மச்சம் அல்லது புதியதாக மச்சம் போல உருவாவதில் ஒரு பாதி மறுபாதியுடன் பொருந்தாமல் இருப்பது, மச்சத்தின் ஓரங்கள் சொரசொரப்பாக இருப்பது, இவற்றில் சில நேரம் அரிப்பும் ரத்தக் கசிவு போன்றவை முக்கிய பாதிப்புகளாக உள்ளன.

குறிப்பிட்ட இந்த அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக தோல் மருத்துவரை அணுகுங்கள். முதற்கட்டமாக பரிசோதனை மேற்கொண்டு பார்ப்பது பாதுகாப்பானது. புற்று ஆழமாக ஊடுருவி விட்டது என்றால், சிகிச்சை கடினமாகிவிடும். உடலில் தோன்றும் மாற்றங்களை கவனிக்காமல் அலட்சியப்படுத்தக்கூடாது. உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

click me!