வெறும் ஆயிரம் ரூபாய் செலவில் சுஜித் உயிரை காப்பாற்றி இருக்கலாம்... விழித்துக்கொள்ளுங்கள் மக்களே..!

By Thiraviaraj RMFirst Published Oct 30, 2019, 3:46 PM IST
Highlights

ஆழ்துளை கிணறுகளை அமைக்கும்போது கேசிங் பைப்களை அமைத்தால் எந்த குழந்தைக்கும் ஆபத்தில்லை என  ரிக் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  
 

ஆழ்துளை கிணறு தோண்டிய பிறகு தண்ணீர் வந்தாலும் வரவில்லை என்றாலும் ஒரு குறிப்பிட்ட ஆழத்திற்கு கேசிங் பைப்பை இறங்கி மூடிப்போட்டு விட்டு அப்பொழுதே வாடிக்கையாளர்களிடம் உறுதிப்படித்தி கையொப்பம் பெற்றிடுங்கள். நம் கண்முன்னே இச்செயலை செய்து விட்டால் இனி ஒரு சுஜித்தை நாம் இழக்க மாட்டோம் என கேட்டுக் கொண்டு வருகின்றனர். 

சிலர் பணம் செலவாகும் என நினைத்து, கேசிங் பைப்பை அதிக ஆழத்துக்கு இறக்க மாட்டார்கள். ஆனால், பாறை மட்டம் வரை கேசிங் பைப் இறக்க வேண்டும். அப்போதுதான் போர்வெல்லுக்குள் மண் சரிவு ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். இல்லாவிடில், மண் சரிந்து நீர் மூழ்கி மோட்டார்களை குறிப்பிட்ட ஆழத்துக்கு கீழ் இறக்க முடியாமலோ... அல்லது எடுக்க முடியாமலோ போய்விடும்.

வீடு மற்றும் விவசாய தேவைக்கு, 4.5 முதல் அதிகபட்சம், 6.5 அங்குலம் அகலத்திலும் தொழிற்சாலைகளில் 10 அங்குலம் வரை ஆழ்துளை கிணறு அமைக்கப்படுகிறது. இரண்டு முதல் மூன்று அடுக்கு  லேயர்  என கணக்கிட்டு குழி தோண்டப்படுகிறது. மொத்த ஆழத்துக்கு ஏற்ப, 20 முதல் அதிகபட்சம் 100 அடி வரை முதல் லேயர். இதில் மண்ணும் இரண்டாவது லேயரில் ஓடை நீரோட்டமும் இருக்கும்.  கேசிங் ஆழ்துளை கிணறு அமைக்கும்போது, கேசிங் எனப்படும் அவுட்டர் பைப் வைக்கப் படுகிறது. 

தண்ணீர் இருந்தால், அடுத்தடுத்த குழாய் பதித்து மின் மோட்டார் மூலம் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இல்லாத பட்சத்தில் குழி அப்படியே விடப்படுகிறது. அவுட்டர் பைப், கான்கிரீட் அமைக்காததால், மழை நீர் கொஞ்சம், கொஞ்சமாக உள்ளே சென்று, நாளடைவில் அது அகலமாகிறது. 4.5 அங்குல குழி, 10 அங்குலம் வரை அதிகரிக்கிறது.

அவுட்டர் பைப்பான கேசிங் வைக்காமல் ஆழ்துளை கிணறு அமைக்க கூடாது என்பதை உள்ளாட்சி அமைப்பினர் வீட்டின் உரிமையாளர்களிடம் கடுமையாக வலியுறுத்த வேண்டும். குழாய் பதிக்காத போர்வெல் வாகன அனுமதியை ரத்து செய்ய வேண்டும். 3 அடி உயரம் பயன்பாட்டில் இருக்கும் ஆழ்துளை கிணற்றை சுற்றி கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும். தரைமட்டத்தில் வைக்கப்படும் குழாயின் உயரம் குழந்தைகள் தாவி குதிக்காதவாறு 3 அடி உயரம் இருக்க வேண்டும். கேசிங் பைப் அமைப்பதற்கான செலவும் குறைவு தான். ஆகையால் கேசிங் பைப் அமைத்தால் இனி ஒரு சுஜித்தை நாம் இழக்க நேரிடாது.
 

click me!