'மலைகளின் குட்டி இளவரசி'; ஆண்டு முழுவதும் 'ஜில்' கிளைமேட்; மதுரைக்கு பக்கத்தில் சூப்பர் Hill Station!

By Rayar r  |  First Published Jan 12, 2025, 7:34 PM IST

மதுரைக்கு அருகில் இருக்கும் சிறுமலை சூப்பரான மலைவாசஸ்தலமாக உள்ளது. இந்த சிறுமலை எங்குள்ளது? சிறப்புகள் என்ன? என்பது குறித்து பார்ப்போம்.
 


சிறுமலை 

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி நாளை மறுநாள் முதல் கிட்டத்தட்ட 6 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. பொங்கல் முடிந்தபிறகு காணும் பொங்கல் நாளில் மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்வது வழக்கம். அந்த வகையில் மதுரை, திண்டுக்கல் பகுதி மக்கள் சுற்றுலா செல்வதற்கான ஒரு சூப்பர் மலைவாசஸ்தலத்தை பற்றிதான் இந்த செய்தியில் கூற போகிறேன். 

Tap to resize

Latest Videos

மதுரை, திண்டுக்கலுக்கு அருகே என்றால் 'மலைகளின் இளவரசி' கொடைக்கானல் தானே என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. அதுதான் இல்லை; 'மலைகளின் குட்டி இளவரசி' என்றழைக்கப்படும் சிறுமலை தான் நான் சொன்ன சூப்பரான மலைவாசஸ்தலம். சிறுமலை என்பது திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய மலைவாசஸ்தலமாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,200 மீட்டர் (3,937 அடி) உயரத்தில் அமைந்துள்ள சிறுமலை பொதுமக்களால் அதிகம் அறியப்படாத, அமைதியான ஒரு அட்டகாசமான மலைப்பகுதியாகும்.

ஆண்டு முழுவதும் ஜில் ஜில் காற்று 

கொடைக்கானல், ஊட்டியை போன்றே சிறுமலையிலும் ஆண்டு முழுவதும் ஜில் என்ற குளிமையான காலநிலை நிலவும். குளிர்ந்த காற்றை அனுபவித்தபடி, மரங்கள், செடி, கொடிகளுடன் மனம் விட்டு பேசும்போது உங்கள் மன அழுத்தம், கவலை எல்லாம் பறந்தோடி விடும். அத்துடன் அங்கு மலைவாழ் மக்களால் விளைவிக்கப்படும் வாழை, மிளகு, பலாப்பழம் போன்றவற்றை பார்த்து, மலைவாழ் மக்களின் வாழ்வியலையும் கண்டு ரசிக்கலாம்.

சிறுமலை பாதையில் மொத்தம் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதில் 4 அல்லது 5வது கொண்டை ஊசியை அடைந்து விட்டாலே அசுத்தமில்லாத இயற்கையான குளிர்ந்த காற்று உங்களை தழுவிக் கொள்ளும். வானுயர நிற்கும் மரங்களுக்கு நடுவே வளைந்து நெளிந்து செல்லும் சாலையில் பயணிப்பது உங்களை பரவசத்தில் ஆழ்த்தி விடும். சிறுமலையில் குரங்குகள் மட்டுமின்றி காட்டுமாடு, கடமான், கேளையாடு , முயல், கழுதை, காட்டு அணில் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் காட்டு மாடுகளின் தரிசனம் கிடைக்கும்.

சிறுமலையில் பார்க்க வேண்டிய இடங்கள்:

சிறுமலை ஏரி

சிறுமலை ஏரி மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரியாகும். இங்கு படகு சவாரி உண்டு. இயற்கை அழகை சுவாசித்தபடி ஜாலியாக படகு சவாரி செய்யலாம்.

சந்தான கிருஷ்ணர் கோயில்

சந்தன மரத்தால் ஆனதாகச் சொல்லப்படும் கிருஷ்ணரின் தனித்துவமான சிலைக்கு பெயர் பெற்ற ஆன்மீகத் தலமாக இது விளங்கி வருகிறது. இயற்கையின் அழகை கண்டுரசித்து விட்டு கிருஷ்ணரை தரிசனம் செய்யலாம். இதேபோல் அங்கு பசுமையான வனங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயமும் பிரசித்தி பெற்றதாகும். சிறுமலைக்கு செல்பவர்கள் அன்னையின் ஆசி பெற தவறுவதில்லை. 

அகஸ்தியர்புரம் காட்சிமுனை (டவர்)

இந்த அகஸ்தியர்புரம் காட்சிமுனையின் நின்று பள்ளத்தாக்கின் பிரமிப்பையும், வனங்களின் மொத்த அழகையும் கண்டு ரசிக்கலாம். உங்களின் செல்போன்கள், கேமராக்கள் மூலம் சிறுமலையின் அழகை புகைப்படம், வீடியோக்கள் எடுக்க இது சிறந்த இடம்.

சிறுமலையின் சிறப்புகள் 

ஊட்டி, கொடைக்கானல் போன்று மனித நெருக்கடி இல்லாமல் இருப்பதால் சிறுமலையின் அழகை முழுமையாக கண்டு ரசிக்க முடியும். மரங்கள் மட்டுமின்றி வனவிலங்குகள், பல்வேறு விதமான பறவைகளை பார்த்து ரசிக்கலாம். சிறுமலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகைகள் உள்ளதால் சுத்தமான காற்றை சுவாசிக்கும்போது உங்கள் உடலுக்கு அது நல்ல அருமருந்தாக செயல்படும். டிரக்கிங் செல்ல விரும்புவர்களுக்கு ஏற்ற இடம். சிறுமலை பலாப்பழம், வாழைப்பழங்களுக்கு மிகவும் பிரசித்தி பெற்றது. சிறுமலை செல்லும்போது மறக்காமல் இந்த பழங்களை ருசி பாருங்கள். 

எப்படி செல்வது?

சிறுமலை திண்டுக்கல்லில் இருந்து 25 கிமீ தொலைவில் உள்ளது. மதுரையில் இருந்து 90 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் மற்ற இடங்களில் இருந்து திண்டுக்கல் சென்று நத்தம் சாலையில் உள்ள மேம்பாலத்தை கடந்து சுமார் 5 கிமீ வலது புறமாக சென்று சிறுமலை நோக்கி பயணிக்க வேண்டும்.

பேருந்து வசதி உள்ளதா? 

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் குறிப்பிட்ட நேர இடைவெளியில் சிறுமலைக்கு அரசு பேருந்துகள் உள்ளன. ஆனால் பைக், கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்றால் சிறுமலையின் மொத்த அழகையும் அனுபவிக்க முடியும்.

ரயில், விமானத்தில் எப்படி செல்வது?

சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் மற்ற இடங்களில் இருந்து திண்டுக்கல் ரயில் நிலையம் சென்று அங்கு இருந்து கார்களை வாடகைக்கு எடுத்தும் சிறுமலைக்கு செல்லலாம். சென்னையில் இருந்தும், மதுரையில் இருந்தும் திண்டுக்கலுக்கு ஏராளமான ரயில்கள் உள்ளன. சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தும் அங்கு இருந்து வாகனங்களில் சிறுமலை செல்ல முடியும். 

ஹோட்டல்கள், லாட்ஜ்கள் உள்ளதா?

சிறுமலையில் லாட்ஜ்கள் முதல் ரிசார்ட்டுகள் வரை உள்ளன. நீங்கள் தங்கும் இடத்தை பொறுத்து கட்டணம் மாறுபடும். சிறுமலையில் ஹோட்டல்களும் இருப்பதால் உணவுக்கும் பிரச்சினை இருக்காது. மதுரை, திண்டுக்கல் மக்கள் அதிகாலையில் கிளம்பினால் சிறுமலையை சுற்றிபார்த்து விட்டு இரவில் வீடு திரும்பிவிட முடியும். 

மலைகளின் ராணி, மலைகளின் இளவரசி போன்று விளம்பர பிரியையாக இல்லாமல், மிகவும் அமைதியாக தன்னுடைய இயற்கை அழகை வெளிக்காட்டும் இந்த மலைகளின் குட்டி இளவரசியை ஒருமுறை பார்த்து விட்டு தான் வாருங்களேன்.

click me!