குழந்தைக்கு முயற்சிக்கும் பெண்களா நீங்கள்? அப்படியான...இனி இந்த விஷயத்தில் கவனமா இருங்கள்!

By manimegalai aFirst Published Jan 13, 2022, 12:50 PM IST
Highlights

உலகம் முழுவதிலும் குழந்தையின்மை பிரச்சனையால், 15 சதவீத தம்பதிகள் அவதிப்படுவதாக தெரியவந்துள்ளது.

திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடங்கி, பிறகு தாய்மை அடைவது பெண்கள் வாழ்க்கையில் பெருமைக்குரிய விஷயம். ஆனால், இன்றைய மேற்கத்திய கலாசாரத்தில் குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து காணப்படுகிறது. திருமணமாகி ஓரிரு ஆண்டுகளுக்கு குழந்தை பற்றிப் பெரும்பாலான தம்பதியினர் சிந்திப்பதே இல்லை. அதன் பிறகு குழந்தை பெற்றுக்கொள்ள முயலும்போது, முறையில்லாத உணவு பழக்கங்களால் சிக்கல் ஏற்படுகிறது. இதன் காரணமாக, கருவுறுதல் இயற்கை முறையில் நிகழாததால், செயற்கை கருத்தரிப்பு முறையினை நோக்கி பெரும்பாலான தம்பதியினர் செல்கின்றனர்.

இதனைத் தவிர்த்து, நீங்கள் உங்கள் வாழ்க்கை முறையில் ஆரோக்கியமான சில பழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம் இயற்கை முறையில் கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யலாம். பெண்கள், ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் முத்திரைப் பதித்து வருகின்றனர். இருப்பினும் குழந்தையின்மையால் ஆண்களைவிட, பெண்களே அதிக அளவில் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர்.

வளரும் நாடுகளில் நான்கு தம்பதிகளில் ஒருவர் குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் கூறுகிறது. உலகம் முழுவதிலும் குழந்தையின்மை பிரச்சனையால், 15 சதவீத தம்பதிகள் அவதிப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கர்ப்பம் தரித்து குழந்தையை பெற்றெடுப்பது வரை கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் சில இருக்கின்றன.
 
மகப்பேறு மருத்துவரை சந்தித்து கர்ப்பம் தரிப்பதற்கு ஏற்ற வகையில் தனது உடல்நிலை இருக்கிறதா? என்பதை பரிசோதித்துக்கொள்வது நல்லது. குறிப்பாக உடல் எடை, ரத்த அழுத்தம் சரியான அளவில் இருக்கிறதா? நாள்பட்ட நோய் பாதிப்பு ஏதேனும் இருக்கிறதா? அப்படி இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து, மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும்.

 இரும்புச்சத்து குறைபாடு:

இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகையை ஏற்படுத்தும், இது கருத்தரிக்கும் வாய்ப்புகளைப் பாதிக்கும். எனவே, தினமும் உணவில் பச்சைநிறக் காய்கறி அல்லது கீரை வகைகளை சுழற்சி முறையில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், இந்த உணவுகள் கருவுறுதலுக்குத் தேவையான இரும்புச்சத்து, ஃபோலிக் ஆசிட் மற்றும் சில பைட்டோநியூட்ரியன்ட்டுகளை வழங்கும் திறன் கொண்டவை. இரத்த ஓட்டத்தில் போதுமான அளவு இரும்புச்சத்து இருப்பின், அண்டவிடுப்பின் மலட்டுத்தன்மையின் அபாயத்தைக் குறைக்கும்.

அதிக மன அழுத்தம்:

சில சமயங்களில், உடல்நிலை சரியாக இருந்தாலும், மன அழுத்தம் அதிகமாக இருந்தால் கருத்தரித்தல் தாமதமாகும். மன அழுத்தம் என்பது, இன்றைய நவீன காலகட்டத்தில் முக்கியப் பிரச்சினையாக மாறிவிட்டது.  குறிப்பாக, மன அழுத்தம் இனப்பெருக்க ஹார்மோன்களைப் பாதிப்பதால் கருத்தரித்தல் தடைப்படும். குழந்தையின்மையால் ஏற்படும் மன அழுத்தம் பெண்களுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. இதுபோன்ற சூழலில், யோகா மற்றும் நடை பயிற்சி செய்வது அவசியம். குறிப்பாக, கிராமப்புறங்களைக் காட்டிலும், நகர்ப்புறங்களில் வாழும்  பெண்களே மன அழுத்தம் காரணமாக அதிக அளவில் பாதிப்படைவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

உடல் எடை:

பெண்கள் கருத்தரிக்க உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியமானது. உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். அவை உடலுக்கு அழுத்தம் கொடுக்காத எளிமையான பயிற்சிகளாக இருந்தாலே போதுமானது. காலை வேளையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். ஒருபோதும் மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடாது. தீய பழக்கவழக்கங்களுக்கும் இடம் கொடுத்துவிடக்கூடாது.

ஹார்மோன் சமநிலை பிரச்சனை:  

இன்றைய பெண்கள் கருத்தரிக்க மிகப்பெரிய தடையாக இருப்பவற்றில் மிக முக்கியமானது `பிசிஓடி’ (PCOD) ஆகும். இளம் பெண்களிடையே பரவலாகக் காணப்படும் இந்தப் பிரச்சனைக்கு உடல் எடை அதிகரிப்பு முக்கியக் காரணமாக இருக்கிறது. இதனை முறையான நடைப்பயிற்சி, உணவு பழக்கங்கள் மூலம் சரி செய்யலாம். முடியாத பட்சத்தில் மாத்திரைகள் மூலம் சரியாக்கலாம்.

ஆரோக்கியமான தாம்பத்திய உறவு:
 
தாம்பத்திய உறவு என்பது எந்தவித நிர்பந்தங்கள் இல்லாததாக இருக்க வேண்டும்.அந்த சமயத்தில் மகிழ்ச்சியான மன நிலை நிலவ வேண்டும். உறவுக்கு பிறகு மல்லாந்த நிலையில் படுத்திருப்பது  கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் என்பது பாலியல் நிபுணர்களின் கருத்தாகும். குறைந்த பட்சம் ஐந்து நிமிடமாவது அப்படி படுத்திருப்பது உயிரணுவானது கருமுட்டையை தேடி அடைய உதவும்.

 கருத்தரிக்க பெண் உடல் ரீதியாக மட்டுமின்றி, உணர்வு ரீதியாகவும் தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். தனது முழு கவனத்தையும் மகப்பேறு மீது செலுத்தியாக வேண்டும். குழந்தையைப் பெற்று வளர்ப்பது என்பது சவாலும், பொறுப்பும் சேர்ந்த வேலை என்பதை உணர வேண்டும்.  

click me!