
இன்றைய நவீன உலகில் செல்போன் உபயோகிக்காத மனிதர்கள் குறைவு, அதேபோன்று, செல்போன் டவர் இல்லாத இடமும் குறைவாகவே உள்ளது. அந்த அளவுக்கு உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி மேலோங்கி உள்ளது. மொத்தத்தில் இன்றைய உலகில் செல்போன், மனிதர்களின் உயிர் நாடியாக இருந்து வருகிறது.
’அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’என்ற பழமொழி நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துவோருக்கும் பொருந்தும். பேசுவதற்கும், பல நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்கும் அவ்வப்போது செல்போன்களைப் பயன்படுத்திக்கொள்வதில் தவறே இல்லை. ஆனால், கால வரைமுறை இல்லாமல் தேவைற்ற செயல்களில் செல்போன்களைப் அதிகப்படியாக பயன்படுத்துவது ஏராளமான பிரச்சினைகளை உங்களுக்கு ஏற்படுத்துகிறது.
அமெரிக்காவில் சமீபத்தில் வெளிவந்த ஆய்வு முடிவில், குழந்தைகளைவிட அதிகமாக செல்போனுக்கு அடிமையாகியிருப்பது அவர்களின் பெற்றோர்கள்தாம் என்பது தெரியவந்திருக்கிறது. பிரச்சனை என்னவென்றால், நாம் செல்போனுக்கு அடிமையாகி இருக்கிறோம் என்கிற புரிந்துணர்வு 50 சதவீகிதம் பெற்றோர்களுக்கு இருக்கிறது. ஆனாலும், அந்தப் பழக்கத்திலிருந்து அவர்களால் வெளியேவர முடியவில்லை. ஆய்வாளர்கள் தரப்பில், செல்போன் உபயோகத்தைக் கட்டுப்படுத்த குழந்தைகளைவிடப் பெற்றோர்களே கூடுதல் அக்கறை காட்ட வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.
பெற்றோர்கள் அதிக நேரம் செல்போன் உபயோகிப்பது குழந்தைகளுக்கு என்ன மாதிரியான பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதை விவரிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
குழந்தைகளுக்கு பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கும் செல்போன் பயன்பாடு, குழந்தைகளுக்கு பெற்றோர்களிடமிருந்து தான் வருகிறது. இன்றைய பிஸியான வாழ்கை முறையில், பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளை சாப்பிட வைப்பதற்கு கூட செல்போனை கையில் கொடுக்கின்றனர்.
இவை, நாளடைவில் செல்போன் பயன்பாடு வளரும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு அவசியமான ஒன்றாகும். அதிலும், இன்றைய இளம் தலைமுறையினர் தொழிநுட்பம் சார்ந்த புதிய புதிய விஷயங்களை கற்று கொள்வதில் அதீத ஆர்வம் உடையவர்களாக இருகின்றனர்.
அதிக நேரம் செல்போன் உபயோகிக்கும் மூன்றில் ஒரு குழந்தை ஆன்லைன் மோசடி நபர்களிடம் மாட்டிக்கொள்கின்றன. அதேபோன்று, நான்கில் ஒரு குழந்தை அதனுடைய 12 வயதில் பாலியல் சார்ந்த ஆபாச வீடியோக்களை ஆன்லைனில் பார்ப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான பெண் குழந்தைகளின் புகைப்படங்கள் சமூக விரோதிகளால் மார்ஃபிங் செய்யப்படுகின்றன. இன்றைய இளம் வயதினர் வெர்ச்சுவல் காதல், வெர்ச்சுவல் சாட்டிங் என்ற பெயரில் நேரத்தை அதிகளவில் வீணாக்குவதோடு, இதனால் பல்வேறு பிரச்சனைகளுக்கும் ஆளாகிறார்கள்.
வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள், வீட்டுக்குச் சென்ற பிறகும் சமூகவலைதளங்களில் அலுவலகத்துடன் தொடர்பிலேயே இருக்கின்றனர். வேலைக்குச் செல்லாத பெற்றோர்கள் சிலரும் கூட வீடியோக்கள் பார்ப்பதில் அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர்.மொத்தத்தில், பெற்றோர்கள் செல்போனை அதிக நேரம் பயன்படுத்துகின்றனர் என்கின்றது ஆய்வு.
ஆய்வில் தெரிய வந்த உண்மைகள்:
பெற்றோர்கள் தூங்கச் செல்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர்வரை செல்போன் பயன்படுத்துவதைப் பெற்றோர்கள் நிறுத்துவதில்லை.
செல்போனில் அதிக நேரம் செலவிடுவதாகக் கூறும் பெற்றோர்களின் எண்ணிக்கை, 2016-ம் ஆண்டைவிட 2019-ம் ஆண்டில் 23 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
60 சதவிகித பெற்றோர்கள், இரவு தூங்கும்போது தங்களின் படுக்கைக்கு மிக அருகே, அதாவது கைக்கு எட்டும் தூரத்தில் செல்போனை வைத்துக்கொள்ளவே விரும்புகின்றனர்.
பெற்றோர்கள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவது, தங்களுடன் நேரம் குறைவாக செலவு செய்வதாக குழந்தைகள் நினைக்கின்றனர்.
எனவே, பெற்றோர்கள் இனி செல்போன் பயன்படுத்தும் போது அதிக கவனத்துடன் இருப்பது அவசியம். இல்லையென்றால் உங்கள் உறவில் விரிசல் தான் எட்டி பார்க்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.