
ஒவ்வொரு குடும்பமும் வெவ்வேறு சூழல் மற்றும் வாழ்வியலைக் கொண்டுள்ளது. உடன்பிறப்புகளில் சிலர் பொறுப்பானவர்களாகவும், சிலர் வேடிக்கையானவர்களாகவும், சிலர் பொறுப்பில்லாதவர்களாகவும் சொல்லப்படுகிறார்கள். ஒவ்வொரு பெற்றோரும் வெளிப்படையாக சொல்லாமலே தங்களுக்கு "பிடித்த குழந்தைக்கு' கொஞ்சம் கூடுதலாக பாராட்டு, பின்பற்ற எளிதான விதிகளை விதிக்கிறார்கள். இது ஒரு சில குடும்பங்களைத் தவிர பல குடும்பங்களில் தொடர்கதையாகி வருகிறது.
மூத்த பிள்ளைக்கு செல்லமும் இளைய பிள்ளைக்கு கண்டிப்பும் இருக்கும் குடும்பங்களும் உண்டு. எது கொடுத்தாலும் சமபங்கு ஆனால் அன்பில் ஒரு பிள்ளைக்கு கொஞ்சம் கூடுதல் கவனம் இருக்கும். இதைக் குழந்தைகள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை பெற்றோர் கவனிக்கத் தவறிவிடுகின்றனர்.
நாளைடைவில் அன்பைப் பெற மறைமுக போட்டி ஏற்படும். ஒரு குழந்தை கவனிக்கப்படும் வேளையில், மற்றொரு குழந்தை எதிர்பார்ப்புகளை விடுத்து வாழ நிர்பந்திக்கப்படுகிறது. 2009ஆம் ஆண்டு த ஜர்னல் ஆஃப் ஃபேமிலி சைக்காலஜி (2009) இதழில் வெளியான ஆய்வில், பெற்றோரால் குறைவாக நேசிக்கப்பட்டதாக உணர்ந்த குழந்தைகள் தங்களுடைய உடன்பிறப்புகள் மீது குறைந்த பிணைப்பும், அதிக மோதல்களும் கொண்டிருந்தது தெரிய வந்தது.
குழந்தைகள் சின்ன விஷயங்களையும் கவனிக்கும் திறன் லொண்டவர்கள். உடன்பிறந்தவருக்கு தன்னை விட அதிக பாசம் அல்லது கவனம் கிடைப்பதாக உணரும்போது எதார்த்தம் மாறுகிறது. அது பெற்றோருடன் உள்ள தொடர்பை மட்டுமின்றி, உடன்பிறந்தோருடன் எவ்வாறு நடத்து கொள்கிறார்கள் என்பதையும் சேர்த்தே பாதிப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
பெற்றோரிடம் தனக்கென சில தனிச்சலுகை கிடைப்பதாக உணரக் கூடிய குழந்தைகள் அதைத் தக்க வைக்க நினைக்கலாம். அந்த அழுத்தம் இருக்கக் கூடும். சில குழந்தைகளுக்கு குற்ற உணர்வு, பதட்டம் இருக்கும். அதே சமயம் அக்குடும்பத்தில் சலுகை பெறாத குழந்தை குறைந்த சுய மதிப்பு அல்லது வெறுப்போடு வளரலாம். பெற்றோரின் பாரபட்சம் மட்டுமின்றி உடன்பிறந்தோர் மோதலுக்கு வழிவகுக்கும். சில குழந்தைகள் உளவியல் சிக்கலுக்கு ஆளாகிறார்கள்.
பெற்றோரின் வேறுபட்ட அணுகுமுறையால் குழந்தைகளிடையே அதிக கோபம், பொறாமை வளர்கிறது. பெற்றோர் தொடர்ந்து ஒரு குழந்தைக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது, அதிகம் மன்னிப்பது, அதிக வாய்ப்புகள், சுதந்திரம் போன்றவை கொடுப்பது இயல்பாக தெரியும். ஆனால் குந்தைகளை ஒப்பிடுவது, ஒருவரை மென்மையாகவும் இன்னொருவரை கடினமாகவும் நடத்துவது மோசமான அணுகுமுறையாகும். இதனால் பெற்றோரின் கவனத்தைப் பெற மற்றொரு குழந்தை கடினமாக போராடத் தொடங்குகிறது. அந்த அங்கீகாரம் கிடைக்காமல் போனால் வெறுப்பு மேலோங்குகிறது.
இந்தச் சிக்கல்களைத் தடுக்க பெற்றோர் ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களுடைய தனித்துவமான திறமைகளின் அடிப்படையில் கவனத்தையும், அங்கீகாரத்தையும் வழங்கலாம். குழந்தைகள் தங்களுடைய பலங்களுக்காக சமமாக மதிக்கப்படுவதாக உணர்ந்தால் அவர்களுக்குள் போட்டி குறைந்துவிடும். பச்சாதாபமும், ஒற்றுமையும் மேம்படும்.
நீங்கள் பாரபட்சம் காட்டும் பெற்றோராக உங்களை அறியாமல் இருந்தால், அதை சரி செய்துகொள்ளுங்கள். கடந்த கால மனக்கசப்புகளை சரி செய்வதும், தவறான புரிதல்களைத் தெளிவுபடுத்துவதும் சில நேரங்களில் உறவுகளை மீட்டுத் தரும். பெற்றோர் குழந்தைகளிடையே பாரபட்சம் காட்டுவதை உணர்ந்தால் அதை உடனடியாக நிறுத்துவதே தீர்வாகும். இல்லையென்றால் உங்கள் குழந்தைகள் முதிர்வயது வரை அதே மனநிலையில் இருக்கக் கூடும். சகோதரப்பாசம் அவர்களுக்குள் இருக்காது என்பதை மனதில் கொள்ளுங்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.