67 வயதில் மறுமணம் செய்து கொண்ட முதிய தம்பதி !! கேரளாவில் அரசே நடத்தி வைத்த புரட்சித் திருமணம் !!

By Selvanayagam PFirst Published Dec 30, 2019, 7:43 AM IST
Highlights

கேரளாவில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வந்த 67 மற்றும் 66 வயது கொண்ட  ஆண் பெண்ணுக்கு அமைச்சரே முன்னின்று நடத்தி வைத்த மறுமணம் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திரிச்சூர் அருகில்  உள்ள ராமவர்மபுரம் அரசு முதியோர் இல்லத்திலிருந்து நாதஸ்வர மேளச் சத்தம் எழுந்தது. திருமண பட்டு உடுத்தி லட்சுமியம்மா வந்தார். சக இல்லத்து வாசிகள் வாங்கி வைத்திருந்த தாலியை அம்மாவின் கழுத்தில் கொச்சனியன் கட்டினார். அமைச்சர் வி.எஸ்.சுனி ல்குமார் இருவரது கரங்களையும் பிடித்து சேர்த்து வைத்தார். 

இது சாதாரண திருமணம் அல்ல. இது ஒரு மறுமணம்.  கொச்சனியனுக்கு வயது 67. லட்சுமியம்மாவுக்கு வயது  66. அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டனர். இது அரசு முதியோர் இல்லத்தில் வசிப்போருக்கு இடையில் நடக்கும் கேரளத்தின் முதலாவது திருமணம் இது. 

திரிச்சூர் பழைய நடக்காவைச் சேர்ந்த லட்சுமியம்மாள் தனது பதினாறாவது வயதில், 48 வயது கிருஷ்ணய்யர் சுவாமியை திருமணம் செய்து கொண்டவர். அந்த காலத்தில் வடக்கு நாதன் கோயிலில் நாதஸ்வரம் வாசிக்க வந்து சேர்ந்தார் கொச்சனியன். தினமும் கோயிலில் சாமி கும்பிட வரும் கிருஷ்ணய்யரையும் லட்சுமியம்மாளையும் கொச்சனியன் பார்ப்பதுண்டு. 

அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கத்தை தொடர்ந்து நாதஸ்வரத்தை கை விட்டுவிட்டு  கிருஷ்ணய்யருடன் அவரது சமையல் தொழிலுக்கு துணையானார் கொச்சனியன். 20 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணய்யர் மறைந்தார். 

குழந்தைகள் இல்லாமல் தனியாக நின்ற  லட்சுமியம்மாளை மறுமணம் செய்ய  கொச்சனியன் விருப்பம் தெரிவித்த போது மறுத்தார். பின்னர் கொச்சனியன் வேறு திருமணம் செய்துகொண்டார் என்றாலும் மனைவி இறந்து விட்டார். 

இந்நிலையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமியம்மாள் ராமர்மபுரம் முதியோர் இல்லத்துக்கு வந்து  சேர்ந்தார். கொச்சனியன் எப்போதாவது வந்து அவரை பார்த்து செல்வார்.

இதனிடையே குருவாயூரில் தெருவில் மயங்கி கிடந்த கொச்சனியனுக்கு சிகிச்சை அளித்து வயநாடு முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். அங்கு லட்சுமியம்மாள் குறித்து அவர் கூறியதை கேட்ட முதி யோர் இல்ல நிர்வாகிகள் லட்சுமியம்மாளை அணுகி திருமண ஏற்பாடுகளை செய்தனர். 

கேரள அரசின் சமூக நீதித்துறை இருவரது விருப்பம் அறிந்து அரசு சார்பில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தது. திரிச்சூர் மாநகர மேயர் அஜிதா விஜயன் தலைமையில் இந்த திருமணத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். தம்பதியர் வசிக்க  குடியிருப்பு வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.

click me!