கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் கடன்... ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 9, 2021, 7:34 PM IST
Highlights

நீலகிரி மாவட்டட்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கொரோனா நெருக்கடி காலத்திலும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவின் தீவிர முயற்சியால் நீலகிரியில் வாழும் 21 ஆயிரத்து 800 பழங்குடிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 100 சதவிகித இலக்கை அடைந்த முதல் மாவட்டம் என்ற பெருமையை நீலகிரி பெற்றது, இதையடுத்து ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை நேரில் அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார். தற்போது நீலகிரி மாவட்டட்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

நீலகிரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து இருந்தால், அவர்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார வளர்ச்சி கழகம் ‘ஸ்மைல்’ என்ற கடன் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஈட்டக்கூடிய நபரின் வயது 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் திட்டத்தொகை அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை இருக்கலாம். திட்ட தொகையில் 80 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரை கடன் வழங்கப்படும். மீதமுள்ள 20 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். ஆண்டுக்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று இறந்ததற்கான ஆவணங்களுடன் ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை வேலை நாட்களில் தொடர்பு கொள்ளலாம்.
 

click me!