இனி இதை பதிவிட்டால் உடனடி கைது... 2 மாதங்களாக சோசியல் மீடியாவை சல்லடை போட்டு அலசும் போலீஸ்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 7, 2021, 12:29 PM IST
Highlights

பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சாதிய மோதலை உருவாக்கும் விதமாக பதிவிடுவோர் கைது செய்யப்படுவர் என தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது. 

ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூ-டியூப் போன்ற சமூக வலைத்தள பக்கங்களை தமிழக காவல்துறை கடந்த 2 மாதங்களாக தீவிரமாக கண்காணித்து வருகிறது. அதன்படி கடந்த மே மாதம் முதல் நேற்று வரை அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக 75 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அத்துடன் எல்லை மீறி கருத்து மற்றும் வீடியோ பதிவிட்ட 16 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண்களை இழிவாக சித்தரித்தல், சாதிய மோதலை உண்டாக்குதல், அரசியல் கட்சியினரை அவதூறாக சித்தரித்து கருத்து பதிவிடுதல் ஆகிய செயல்களில் ஈடுபடுவோர் மீது உடனடி கைது நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் பெண்களை ஆபாசமாக பேசிய வழக்கில் பப்ஜி மதன் என்ற யூ-டியூப்பர், அரசியல் கட்சி தலைவர்களை அவதூறாக விமர்சித்த கிஷோர் கே சாமி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் யூ-டியூப் மூலமாக ஆபாச கருத்துக்களை விதைப்பதாக ஜிபி முத்து, ரவுடி பேபி சூர்யா,இலக்கியா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்களுடைய யூ-டியூப் சேனல்களை முடக்க வேண்டும் என்றும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்தும் உரிய விசாரணைக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

click me!