தாம்பத்ய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியா? " மெனோபாஸ்"..! இதோ ஓர் ஆச்சர்ய தகவல்..!

By ezhil mozhiFirst Published Jan 26, 2020, 3:26 PM IST
Highlights

மெனோபாஸ் காலகட்டத்திலும் கணவன் மனைவிக்கான தனிமைகள் அவசியம். இந்த காலகட்டத்திலும் மகிழ்ச்சியான தாம்பத்யம் கொண்டாட முடியும்.

தாம்பத்ய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியா? " மெனோபாஸ்"..! இதோ ஓர் ஆச்சர்ய தகவல்..!

மாத மாதம் ஏற்படும் மாதவிடாய் நின்றுபோகும் நிலையே மெனோபாஸ். இதை பல பெண்கள் தாம்பத்தியத்துக்கான முற்றுப்புள்ளி என்று நினைத்துக் கொள்கிறார்கள். இது தவறு. இது குழந்தைப் பிறப்புக்கான முற்றுப்புள்ளி தானே தவிர, தாம்பத்திய உறவுக்கல்ல. மெனோபாஸ்க்குப் பிறகு முன்பைவிடவும் அதிகமாக தாம்பத்திய சந்தோஷத்தை அனுபவிக்கிறவர்களும் உண்டு.

மெனோபாஸ் காலகட்டத்திலும் கணவன் மனைவிக்கான தனிமைகள் அவசியம். இந்த காலகட்டத்திலும் மகிழ்ச்சியான தாம்பத்யம் கொண்டாட முடியும். ஆண், பெண் இருவருக்குமே அந்த காலகட்டத்தில் ஏற்படும் சோர்வைப் போக்கி மனதை உற்சாகமான நிலையில் வைத்துக் கொள்ள தாம்பத்யம் அவசியமானது என்கிறார்கள் மருத்துவர்கள்.

மெனோபாஸ் பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமானது. அதைப் பற்றிக் கவலை கொள்கிற பெண்களே அதிகம். ஆனால், பெண்கள் பூப்பு சுழற்சி நிற்றலையும் மகிழ்ச்சியாக எதிர்கொள்ளலாம். தொடர்ந்து 12 மாதவிடாய் வராமலிருந்தால் அந்தப் பெண் மெனோபாஸ் அடைந்துவிட்டாள் என்று அர்த்தம். ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன் சுரப்பு குறைவதால் பெண்ணுடலில் பூப்பு நிற்றல் நிகழ்கிறது. இத்துடன் பெண்ணின் இனப்பெருக்கம் முடிவுக்கு வருகிறது. பெண்ணின் 45 வயது முதல் 54 வயதுக்குள் நிகழும். 

பெண் உடலில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தி குறைவதால் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும். மாதவிடாய் நிகழ்வில் மாற்றம் ஏற்படும். மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும்போது சில மாதம் முன்பும், பின்பும் பல உடல் மற்றும் உளவியல் மாற்றங்கள் பெண்ணுக்குள் நிகழ்கின்றன. இவை அவர்களின் சமூகச் சூழலுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. உணவுப் பழக்கங்கள், பாலியல் நடத்தைகள், மரபியல் போன்ற காரணங்களால் அவை மாறுபடுகின்றன.

மெனோபாஸ் காலத்தில் சில அசவுகரியங்கள் தான் தாம்பத்ய உறவின் மீது ஆர்வமின்மை அல்லது வெறுப்பை ஏற்படுத்தலாம். குறிப்பாக, பெண்ணுறுப்பு வறண்டு போவதால் தாம்பத்தியத்தின்போது திடீரென்று வலி ஏற்படும். இதற்கு சரியான தீர்வு தேங்காய் எண்ணெய். சிறிதளவு அதைத் தடவினால் போதும். இதனால் எழும் அச்ச உணர்வு, உறவின் மீது வெறுப்பை ஏற்படுத்தும். இதற்கு மருத்துவரிடம் சென்று தக்க ஆலோசனை பெறுவதில் தவறில்லை. 

மெனோபாஸ் வந்துவிட்டால் உடல் ஒத்துழைக்காது. செக்ஸ் உணர்வுகள் வற்றிப்போய்விடும் என்பதெல்லாம் கற்பனையே. கூர்ந்து கவனித்தால் மாதவிடாய்க்கு முந்தைய காலம், மாதவிடாய் முடிந்த பின்னர் என பெண் மனதில் தாம்பத்ய உறவுக்கான வேட்கை இருக்கும். பெண்ணின் மன நிலையை ஆண்கள் புரிந்து கொண்டு ரொமான்டிக்காகவே இருங்கள். தனக்கு செக்ஸ் உணர்வு வராது. குழந்தைகள் வளர்ந்துவிட்டால் இதெல்லாம் தேவையா என்ற எண்ணங்கள் பெண்களை இறுக்கமான மனநிலைக்குத் தள்ளுகிறது.

இக்காலகட்டத்தில் பெண்கள் சந்திக்கும் மற்றொரு பிரச்னை உடல் வலி, மூட்டு வலி போன்ற வலிகள். மனதில் ஆர்வம் இருந்தாலும், வலிகளால் உடலில் ஆர்வம் இருக்காது. உடலை வலுவாக்கும் உணவுகளும் உடற்பயிற்சிகளும் வலிகளில் இருந்து நிவாரணம் அளிக்கலாம். இப்பிரச்னைகள் இயல்பானவை என்று நீங்கள் புரிந்துகொண்டு, உங்கள் துணைவரும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கையில் இனிமையான தாம்பத்யத்தை நீங்கள் தொடர முடியும். 

வயதானாலும், ஹார்மோன் கண்ணாமூச்சியாடினாலும் ரொமான்டிக்காக உணருங்கள். காதலில், காமத்தில் பேரன்பை பகிருங்கள். மெனோபாஸ் ஒருபோதும் மகிழ்ச்சிக்கான ஸ்பீட்பிரேக்கர் கிடையாது.

click me!