மார்கழியில் பக்தி மணம் கமழ... இதோ செந்தமிழ்ப் பாடல்கள்! 

 
Published : Dec 20, 2017, 10:28 PM ISTUpdated : Sep 19, 2018, 01:42 AM IST
மார்கழியில் பக்தி மணம் கமழ... இதோ செந்தமிழ்ப் பாடல்கள்! 

சுருக்கம்

margazi vazhipadu day 6 songs and explanations

மார்கழியில் சிறப்பாக பாடப்படுவது திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்கள். தொன்று தொட்டு வரும் இந்தப் பழக்கத்தை ஒட்டி, நாமும் அதிகாலை இவற்றைப் பாடி பரமனருள் பெறுவோம்.
***
திருப்பாவை - 6 ஆவது பாசுரம்
***
புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்தங் கரிஎன்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

பாசுரத்தின் விளக்கம்: 

திருப்பாவையின் ஐந்தாம் பாசுரத்தில் கண்ணனின் பெருமைகளைச் சொன்ன ஆண்டாள், இத்தகு பெருமை வாய்ந்தவனை நாம் காணச் செல்ல வேண்டாமோ என்று வினவி, அதிகாலைக் கண்ணுறக்கம் கொண்ட பெண் ஒருத்தியை இந்தப் பாசுரத்தில் துயில் எழுப்புகிறார்.

இரையைத் தேடுவதற்காக வெளியே வந்த பறவைகள் ஆரவாரம் செய்து நிற்கின்றன. அது உன் காதில் விழவில்லையோ? பறவைகளின் தலைவன் பெரியதிருவடி ஸ்ரீகருடாழ்வாரின் சுவாமியான பெருமாளின் சந்நிதியில் வெண் சங்கு ஒலிக்கின்றது. அனைவரையும் அழைக்கும் விதத்தில் அந்த வெண் சங்கு பேரொலி எழுப்புகின்றது. அதனை நீ கேட்கவில்லையோ? எம்பெருமான் திருவடித் தொடர்பு குறித்த சுவை அறியாத பெண்ணே... விரைந்து எழு! 

பூதனையின் முலையில் தடவிக் கிடந்த விஷத்தை, அவள் ஆவியுடன் சேர்த்து உண்டவன் கண்ணன். வஞ்சகம் கொண்டு வண்டியின் சகடச் சக்கரமாக வந்த அசுரன் மாயும்படி தன் திருவடி வித்தையைக் காட்டியவன் கண்ணன்.

திருப்பாற்கடலில் பாம்பாகிய திருஅனந்தாழ்வான் மீது கண்வளரும் வித்தகன் அவன். உலகத்தின் தோற்றத்துக்குக் காரணமானவனும் அவனே. அத்தகைய பெருமானை தமது உள்ளத்தில் இருத்தியபடி, யோகிகளும் முனிவர்களும் எப்போதும் தியானித்துக் கிடக்கிறார்கள். அவர்களின் உள்ளத்தே எம்பெருமானும் எழுந்தருள்கிறான். அவர்களும் மெள்ள எழுந்து, ஹரி ஹரி என்ற ஒலியாலே பேரரவம் எழுப்புகின்றனர். இந்த ஒலியானது உள்ளத்தில் புகுந்து குளிரச் செய்கின்றது. பெண்ணே... நீ இது கேட்டும் எழுந்திருக்காது இருக்கலாமோ? எழுந்திரு என்று ஒரு பெண்ணை துயில் எழுப்புகிறாள் ஆண்டாள்.
***
திருவெம்பாவை பாடல்  எண் 6 
***
மானே நீ நென்னலை நாளை வந்துங்களை 
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே 
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ 
வானே நிலனே பிறவே அறிவரியான் 
தானே வந்தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும் 
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய் 
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும் 
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய். 

பாடல் விளக்கம்:
மஞ்சத்தில்  உறக்கத்தில் கிடப்பவளிடம் தோழியர் சொல்கிறார்கள்...  மான் போன்று அழகியவளே! நீ நேற்று "நாளை உங்களை நானே வந்து எழுப்புகிறேன்" என்று கூறிவிட்டு, இன்று வெட்கமே இல்லாமல்  எங்கே போய்விட்டாய் ? இன்னுமா  உனக்குப் பொழுது புலரவில்லை ? 

வானுலகும், பூமியும், பிற எல்லாமும் அறிதற்கு அரிய பெருமான், தானே வந்து கருணையோடு நோக்கி நம்மை ஆட்கொண்டருளுகிறான். அவனுடைய வான் என நெடிய கழலடிகளைப் பாடி வந்த எமக்கு பதில் சொல் ! உடல் உருகத் தொழாது இருக்கின்றாய் ! இது உனக்குத்தான் பொருந்தும் ! எங்களுக்கும் ஏனைய எல்லாருக்கும் தலைவனான சிவபெருமானை நீ பாடு ! -  என்று கூறி துயிலெழுப்புகிறார்கள்.  

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்