
மார்கழி மாதச் சிறப்பாக அதிகாலை நேரத்தில் கோயில்களில் பாடி வழிபட, திருப்பாவை, திருவெம்பாவை 5ஆம் நாளில் பாடக் கூடிய பாடல்கள் இதோ...
திருப்பாவை - பாசுரம் (5)
**
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.
பாசுர விளக்கம்:
***
திருப்பாவையின் நான்காம் பாசுரத்தில் கண்ணன் கருணையால் மழை பொழிந்து செழிப்பு மிகும் என்று கூறிய ஆண்டாள், அவ்வாறு அவன் கருணைப் பார்வை நம் மீது விழ வேண்டுமானால், அவனைப் புகழ்ந்து பாட வேண்டாமோ என்று கூறி, கண்ணனின் தன்மைகளையும் புகழையும் தோழியர்க்குக் கூறி, அவர்களையும் கண்ணனை அடிபணிந்து உய்யுமாறு இந்தப் பாசுரம் மூலம் வேண்டுகிறார்.
கண்ணன் - மாயச் செயல்களை உடையவன்; இறையருள் நிலையாகப் பெற்ற அந்த வடமதுரையின் தலைவன்; ஆழம் உடையதாகவும் மிகத் தூய்மையான நீரைக் கொண்டதாகவும் விளங்கும் யமுனை ஆற்றை உடையவன்; ஆயர் குலமாகிய இடையர் குலத்தில் தோன்றி அந்தக் குலத்தை
மேன்மையுறச் செய்பவன்; மங்கள தீபத்தைப் போல் பிரகாசிக்கும் அணிவிளக்கு; தாயாகிய தேவகிப் பிராட்டியின் திருவயிற்றை விளங்கச் செய்வதற்காக அவதரித்தவன்...
இத்தகு பெருமை வாய்ந்த கண்ணபிரானை, அவனுக்கு அடிமை செய்கிறவர்களான நாம் முதலில் தூய்மைப் படுத்தி கொள்ள வேண்டும்.
பின்னர் தூய்மையான மலர்களைக் கொய்து வந்து தூவ வேண்டும். அவனை வணங்கி வாயாரப் பாட வேண்டும். நெஞ்சார தியானம் செய்ய வேண்டும்.
அதன் பின்னர் ஆண்டான்-அடிமை மனோபாவமும் ஞானமும் தோன்ற, நாம் முன்னர் செய்த பாவங்களும், பின்னாளில் நம்மையும் அறியாமல் நாம் செய்யப்போகும் பாவங்களும் தீயில் இட்ட பஞ்சைப் போலே எரிந்து உருமாய்ந்து போகும்.
எனவே அந்தப் பெருமானின் திருநாமங்களைச் சொல்வாய்! - என்று இந்தப் பாசுரம் மூலம் தோழியர்க்கு ஞானம் உண்டாகச் செய்கிறார் ஆண்டாள்.
***
திருவெம்பாவை 5ம் பாடல்
மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று)
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய். 5
பாடல் விளக்கம்:
மஞ்சத்தில் படுத்துக் கொண்டிருக்கும் பெண்ணிடம் அவளின் தோழியர்... "திருமாலும் நான்முகனும் காண முடியாத மலையை நாம் அறிவோம்" என்று உணர்ந்தவர்களைப் போன்று பொய்யாகவே பேசிக் கொண்டிருக்கும் பாலும் தேனும் போன்ற இனிய சொற்களைப் பேசும் வஞ்சகியே, கதவைத் திற ... என்று கூறுகிறார்கள்.
மேலும், இவ்வுலகமும், விண்ணுலகமும், பிற உலகங்களும் அறிவதற்கு அரிய பெருமானுடைய திருக்கோலமும், அவர் நம்மை ஆட்கொண்டு குற்றங்களை நீக்கும் பெருமையையும் பாடி "சிவனே! சிவனே!" என்று நாங்கள் ஓலமிட்ட போதும், சற்றும் உணர்ச்சியில்லாமல் இருக்கிறாயே !
மணம் நிறைந்த கூந்தலை உடையவளே, இதுவோ உனது தன்மை ?! என்று அவளிடம் கேட்கின்றார்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.