மலேசியாவில் ஒரு பெண் தன் குடும்பத்தாரால் ஏற்கப்படாத தனது காதலனை திருமணம் செய்வதற்காக தனது பரம்பரை சொத்துக்களை விட்டுச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள மக்களை ஒன்றாக இணைக்கும் பொதுவான உணர்வுகளில் ஒன்று தான் காதல். காதல் அனைத்து எல்லைகளையும் வேறுபாடுகளையும் கடந்தது. காதலுக்காக எதையும் தியாகம் செய்யும் பலர் இருக்கின்றனர். தாங்கள் நேசித்த நபருக்காக தங்கள் குடும்பத்தை விட்டு வெளியேறவும், தங்கள் துணையுடன் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கவும் தயாராக இருக்கிறார்கள். அந்த வகையில் மலேசியாவில் ஒரு பெண் தன் குடும்பத்தாரால் ஏற்கப்படாத தனது காதலனை திருமணம் செய்வதற்காக தனது பரம்பரை சொத்துக்களை விட்டுச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
ஏஞ்சலின் ஃபிரான்சிஸ் என்ற மலேசியப் பெண் காதலின் சக்தியை அனைவருக்கு உணர்த்தி உள்ளார். ஆம். ஏஞ்சலின் தனது நீண்டகால காதலரான ஜெடிடியா பிரான்சிஸை திருமணம் செய்வதற்காக 300 மில்லியன் டாலர்களை (சுமார் ரூ. 2,484 கோடி) தனது பரம்பரை சொத்துக்களை வேண்டாம் என்று மறுத்துவிட்டார். ஏஞ்சலினா மலேசிய தொழில் அதிபர் கூ கே பெங் மற்றும் முன்னாள் மிஸ் மலேசியா பாலின் சாய் ஆகியோரின் மகள்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஏஞ்சலின் பயின்ற போது தன்னுடன் படித்த சக மாணவரான ஜெடிடியாவை காதலித்ததாக கூறப்படுகிறது. ஏஞ்சலின் தனது காதலை பற்றி பெற்றோரிடம் தெரிவித்த போது அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். , பணம், சொத்து, அந்தஸ்து போன்ற காரணங்களை கூறி ஏஞ்சலின் காதலை அவரின் தந்தை ஏற்கவில்லை. இதன் விளைவாக, அவர் தனது குடும்பத்தை விட்டு வெளியேறி தனது காதலரை திருமணம் செய்து புதிய வாழ்க்கையைத் தொடங்க முடிவு செய்தார். ஏஞ்சலினும் ஜெடிடியாவும் 2008-ல் திருமணம் செய்து கொண்ட நிலையில், தனது குடும்பத்தினரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்..
ஆனால் ஏஞ்சலின் தனது பெற்றோரின் விவாகரத்தின் போது நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டார். அப்போது அவர் மீண்டும் தனது தந்தையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தந்தை பணம் சம்பாதிப்பதில் மும்முரமாக இருந்தபோது, குடும்பத்தை பார்த்துக்கொண்ட தனது தாய்க்கு ஆதரவாக ஏஞ்சலின் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் அவர்கள் மீண்டும் ஒன்றாக வருவார்கள் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில் ஏஞ்சலினின் கதையும் காதலைப் பற்றிய அவரது நேர்மறையான கருத்தும் உலகம் முழுவதும் உள்ள மக்களைக் கவர்ந்துள்ளது. அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைன் கேம் விளையாடும் போது இந்திய நபரை காதலித்த சம்பவம் இந்தியாவிலும் நடந்தது. தன் காதலனுடன் வாழ்வதற்காக எல்லைகளை கடந்து சட்டவிரோதமாக இந்தியா நுழைந்த அந்த பெண் சமூக வலைதளங்களில் வைரலானார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிடித்தவர்களிடம் கூட தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த பயப்படும் ராசிக்கார்கள் இவர்கள் தான்..