
குழந்தையாக இருக்கும்போது பல் விழுந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால் வளர்ந்த பின்பு அது சாத்தியமில்லை. குறிப்பிட்ட வயதுக்கு பின் பற்கள் விழுந்தால் அவை மீண்டும் முளைப்பதில்லை. அதை செயற்கை முறையில் தான் சரிசெய்ய வேண்டும். ஆனால் ஜப்பான் விஞ்ஞானிகள் அதற்கு தீர்வு கண்டறிந்துள்ளனர். அவர்கள் செய்த ஆய்வில் பல் வளர்ச்சியை தூண்டும் மரபணு மீது மருத்துவ பரிசோதனை செய்ய தொடங்கியுள்ளார்கள். இந்த ஆய்வு ஜப்பான் ஒசாகாவில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கிடானோ மருத்துவமனையின் டாக்டர் கட்சு தகாஹாஷி (Dr. Katsu Takahashi) தலைமையில் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த ஆய்வுகள் கடந்த 2021இல் சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸில் வெளியான ஆய்வின் அடிப்படையிலானது. அந்த ஆய்வு முடிவுகள் எலிகளுக்கு USAG-1 மரபணுவைக் குறைத்தால் அதன் மூலம் புதிய பற்கள் உருவாகும் எனக் கூறியது. இந்த USAG-1 என்ற மரபணு பல் வளர்ச்சியை தடுக்கும் புரதத்தை உற்பத்தி செய்கிறது. இந்த புரதத்தை தடுத்தால் எலிகளுக்கு பற்கள் மீண்டும் உருவாகும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இதன் அடிப்படையில் ஜப்பான் விஞ்ஞானிகள் மனிதர்களிடமும் இதை முயற்சி செய்து பார்க்கலாம் என முடிவு செய்தனர்.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் மனிதர்களுக்கு 3ஆம் செட் பற்களை உருவாக்கும் ஆற்றல் ஏற்கனவே உள்ளது என்பதுதான். பொதுவாக மனிதர்களுக்கு பால் பற்கள் மற்றும் நிரந்தர பற்கள் ஆகியவை தான் இருக்கும். ஆனால் சிலருக்கு ஹைப்பர்டோன்ஷியா என்ற நிலையில் இயற்கையாகவே கூடுதல் பற்கள் வளரும். இது சாதாரண விஷயம் அல்ல. மனிதர்களின் உடலில் உள்ள கூடுதல் தொகுப்புக்கான உயிரியல் கட்டமைப்பைக் காட்டுகிறது.
புதிய பற்கள் வளர மரபணு-இலக்கு சிகிச்சையைப் பயன்படுத்த முடியும். இதனால் மறைந்திருக்கும் பல் மொட்டு தூண்டப்பட்டு பற்களில் மறு வளர்ச்சி ஏற்படலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஜப்பானிய ஆராய்ச்சிக் குழு இது தொடர்பான மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்கிவிட்டது.
வருகிற 2030க்குள் இந்த மருந்து பொது பயன்பாட்டிற்கு வரும் என நம்பப்படுகிறது. இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றால் பல் சிகிச்சை மேம்படுத்தப்படும். பற்களை இழக்கும் அபாயம் குறையும். பற்களை இழந்தவர்கள் பயன்பெறுவார்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.