
சென்ற டிசம்பர் மாதம் சனி பெயர்ச்சி ஆனது. கடந்த செப்டம்பரில் குரு பெயர்ச்சி ஆனது. குரு ஒரு வருடமும் சனி இரண்டரை வருடமும் ஒரு ராசியில் நின்று பலன் தருகிறார்கள். குரு, சனிக்கு அடுத்து ராகு கேது எனும் சாயா கிரகங்களின் பெயர்ச்சியை முக்கியமானதாகப் பார்ப்பர்கள். நவகிரகங்கள் அனைத்தும் பெயர்ச்சி ஆகி நகர்ந்து கொண்டே போனாலும், இந்த நான்கு கிரகங்களுக்கு அடுத்து, உன்னிப்பாகப் பார்க்கப் படுவது புதன், சுக்ரன் ஆகியோரின் பெயர்ச்சிகள்தான். சற்றேறக்குறைய மாதா மாதம் சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் பெயர்ச்சி அடைகின்றன. புதனின் இந்த மாதப் பெயர்ச்சியை வைத்து பலாபலன்களைப் பார்க்கலாம்.
ஜனவரி 6ம் தேதியான நாளை, புத பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். புதன் தரும் பலன்கள் பன்னிரண்டு ராசிக்காரர்களுக்கும் முக்கியமானதுதான். புதன், அறிவுக்கு அதிபதி. புத்தியைத் தூண்டுபவர் புதன். கல்வி, ஞானம் மட்டுமல்ல, கல்வி சார்ந்த பணிகள், கலைகளுக்கு புதனின் அம்சம் நன்றாக இருக்க வேண்டும். அவ்வாறு, இந்தப் பெயர்ச்சி மூலம் 12 ராசிகளுக்குமாக பலன்களை சுருக்கமாக இங்கே பார்த்து, உங்களுக்கான பலன்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசியினருக்கு 9ஆம் இடத்தில் அமர்கிறார் புத பகவான். இவரது இந்தத் தன்மையால் உங்களுக்கு பணி இடங்களில் உத்தியோக உயர்வு கிடைக்கும். பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்படலாம். நீங்கள் ஏதாவது வேண்டுதல்களை வைத்துக் கொண்டு ஆலயங்களுக்குச் செல்ல முற்படும்போது தடங்கல்கல் வரக் கூடும். இருப்பினும் முயன்று அவற்றை செயல்படுத்துவீர்கள். தொழில் செய்யும் இடத்தில் கவனக்குறைவுக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்காதீர்கள்.
ரிஷப ராசியினருக்கு புதன் 8ஆம் இடத்தில் அமர்கிறார். இவரது எட்டாம் இடத்தால் திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டு. புதனின் தன்மையால் ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். பண வரவு திருப்திகரமாய் இருக்கும். உங்கள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உங்கள் வாரிசுகள் புகழ் சேர்ப்பார்கள்.
மிதுன ராசியினருக்கு புதன் 7ஆம் இடத்துக்கு வந்து அமர்கிறார். மிதுனத்துக்கு ஆட்சி நாதன் புதன். எனவே ஏழாம் இடத்தில் அவர் அமர்வதால், தொழில் வியாபாரம் சிறக்கும். வண்டி, வாகனங்களால் லாபம் உண்டு. பயணங்களின் போது கவனத்துடன் இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் அதிகம் வாக்கு வாதத்தில் ஈடுபடாமல், வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பங்குதாரா்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கடக ராசிக்கு புதன் இப்போது 6ஆவது இடத்துக்கு வருகிறார். கடகத்துக்கு 3, 12 வீடுகளுக்கு அதிபதி புதன். 6வது இடம் என்பது, ரண ருண ரோக ஸ்தானம். அதாவது நோய், கடன்களைக் குறிக்கும் இடம். எனவே, புதனின் தன்மையால் தோல் நோய்கள் ஏற்படலாம். பண வரவு அதிகரிக்கும் என்றாலும் கடன்கள் விவரத்தில் கவனம் தேவை. இன்பச் சுற்றுலாக்கள் செல்வீர்கள். புகழ் பெறுவீர்கள்.
சிம்ம ராசிக்கு 5 ஆம் இடத்துக்கு வருகிறார் புதன். சிம்மத்துக்கு 2, 11 வீடுகளுக்கு அதிபதியான புதனா உங்களுக்கு பணம் வரும் வாய்ப்புகள் கூடும். நண்பர்கள், உயர் அதிகாரிகள் வகையில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை விஷயத்தில் கவனம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் எதாவது பிரச்னை ஏற்படலாம். தெய்வ வழிபாட்டால் அது சரியாகும்.
கன்னி ராசியினருக்கு ராசி நாதனான புத பகவான் இப்போது 4ஆவது இடத்துக்கு வந்து அமர்கிறார். கன்னிக்கு 1,10 ஆம் வீடுகளுக்கு அதிபதியான புதனால், உடல், மன ரீதியான மாற்றங்களைப் பார்ப்பீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். வாகன யோகம் உண்டு. பதவி உயர்வு ஏற்படும். அந்தஸ்து உயரும். உற்றார் உறவினர் சேர்க்கை உண்டு. பணம் வரவு அதிகாித்தாலும் செலவுகளும் அதிகாிக்கும்.
துலா ராசியினருக்கு 3 வது வீட்டில் வந்து அமர்கிறார் புத பகவான். துலா ராசிக்கு 9, 12ஆம் வீடுகளுக்கு அதிபதியான புதனால் நீங்கள் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். வேலை தொடர்பாக வெளிநாடுகளுக்கு செல்வீர்கள். நண்பா்கள் உற்றார் உறவினர் உதவுவர். பணியிடங்களில் பிரச்னைகள் ஏற்பட்டாலும், சமாளிப்பீர்கள். பண வரவுக்கு பஞ்சமிருக்காது என்றாலும், கடன் தொல்லையும் கூடலாம். செலவு செய்வதில் கவனம் தேவைப்படும்.
விருச்சிக ராசியினருக்கு 2 ஆவது இடத்துக்கு வருகிறார் புதன். விருச்சிகத்துக்கு 8, 11ஆம் வீடுகளுக்கு அதிபதியான புதனால், உங்கள் வாழ்க்கையில் உற்சாகம் கூடும். சகோதரர்கள், நண்பர்கள் உதவுவர். அவர்களால் நன்மை உண்டு. பணியிடங்களில் உற்சாகமாக இருப்பீர்கள். சம்பள உயர்வு உண்டு. சொத்துப் பிரச்னை தீரும். பணவரவு உண்டு. உதவிகள் கிட்டும். இருப்பினும் உடல் நலனில் மட்டும் அக்கறை செலுத்துவது நல்லது. பொது வெளியில் விவாதங்களில் ஈடுபடாதீர்கள்.
தனசு ராசியினருக்கு புதன் ராசியிலேயே வந்து அமர்கிறார். தனுசுக்கு 7,10 ஆம் வீடுகளுக்கு அதிபதியான புதனால், வியாபாரத்தில் லாபம் கூடும். பதவிகளில் உள்ள பெண்களுக்கு பதவி உயர்வு கிட்டும். முயற்சிகள் வெற்றி அடையும். கணவன் மனைவிக்கு இடையே சிறிய அளவில் பிரச்னைகள் தலை தூக்கலாம். பணி இடத்தில் சிலருக்கு கெட்ட பெயர் ஏற்படலாம். வாக்கில் கவனத்துடன் இருந்தால் பிரச்னைகளை சரி செய்து கொள்ளலாம்.
மகர ராசியினருக்கு விரய ஸ்தானமான 12 ஆம் வீட்டில் வந்து அமர்கிறார் புதன். மகரத்துக்கு 6,9 ஆம் வீடுகளுக்கு அதிபதியான புதனால், குடும்பத்தில் தம்பதியருக்கு இடையே வாக்குவாதங்கள் வந்து சரியாகும். கவனத்துடன் இருக்கவும். வெளிநாடு செல்ல வாய்ப்புகள் வரும். பணியிடத்தில் எதிரிகளால் சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக் கூடும். உடல் நிலை சிறிது பாதிக்கப் படும். எனவே ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வம்பு வழக்குகளில் ஈடுபடாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
கும்ப ராசியினருக்கு தொழில் ஸ்தானமான 11ம் இடத்தில் வந்து அமர்கிறார் புதன். கும்பத்துக்கு 5, 8 ஆம் வீடுகளுக்கு அதிபதியான புதனால், வருமானம் அதிகரிக்கும். காதல் முயற்சிகளில் வெற்றி உண்டு. எதிர்பார்த்த நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். நல்ல யோகமான காலகட்டம் இது. பண வரவு உண்டு. நல்ல அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். பொன் பொருள் சேரும். மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
மீனத்துக்கு பத்தாம் இடத்துக்கு வருகிறார் புத பகவான். 4, 7ஆம் வீடுகளுக்கு அதிபதியான புதனால், நிலம், வீடு வாகன சேர்க்கை உண்டு. பொதுவாக உயர்வு ஏற்படும். பண வரவு உண்டு. வழக்குகள் வெற்றி அடையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. பொதுவாக மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.