
குழந்தைகள் உணவுகளை விட தின்பண்டங்களை அதிகம் விரும்புவர். இனிப்பு வகைகள், பிஸ்கெட்ஸ் அவர்களுக்கு பிடித்தமானவையாக இருக்கும். பல பெற்றோர் வீட்டில் பிஸ்கெட் பாக்கெட்டுகள் வாங்கி குவித்து வைத்திருப்பர். ஆனஅல் குழந்தைகளுக்கு பிஸ்கெட்டுகள் அவ்வளவு ஆரோக்கியமானதல்ல. அதில் உள்ள அதிகபடியான சர்க்கரை, உப்பு, பாமாயில், மைதா, பாதுகாப்பற்ற சுவை மற்றும் நிறமூட்டிகள், பதப்படுத்தும் பொருட்கள் எதுவுமே குழந்தைகளுக்கு ஏற்றதல்ல. கிரீம் பிஸ்கெட்களை முற்றிலும் தவிர்க்கலாம்.
இந்தப் பதிவில் குழந்தைகளுக்கு பிஸ்கெட் தினமும் கொடுக்கலாமா? எந்த மாதிரியான பிஸ்கெட்களை கொடுக்க வேண்டும்? வயதுகேற்றபடி எத்தனை பிஸ்கெட்டுகள் கொடுக்கலாம் என பல தகவல்களை காணலாம்.
வயதுக்கேற்ற அளவு!
6-8 மாதங்கள்:
ஆறு முதல் எட்டு மாத குழந்தை என்றால் கட்டாயம் கொடுக்கக் கூடாது. இந்த வயதில் குழந்தைகளுக்கு இட்லி, பழங்களில் செய்த உணவு வகைகள், மசித்த காய்கறிகள் தான் நல்லது.
8-12 மாதங்கள்:
இவர்களுக்கு வீட்டில் செய்த பிஸ்கெட்கள் கொடுக்கலாம். சர்க்கரை சேர்க்க வேண்டாம். இனிப்புக்கு பேரீட்சை அல்லது வாழைப்பழம் சேர்க்கலாம். ராகி, ஓட்ஸ் பிஸ்கட்கள் நல்லது.
2 முதல் 3 வயது:
பாக்கெட் பாக்கெட்டாக வாங்கி கொடுக்கக் கூடாது. 1 அல்லது 2 சிறிய பிஸ்கட்கள் போதுமானது. பெரும்பாலும் குறைந்த சர்க்கரை, தானியங்களில் செய்த பிஸ்கெட்களை கொடுங்கள். ஆனால் தினசரி கொடுக்க வேண்டாம்.
4 முதல் 6 வயது:
2 சிறிய பிஸ்கெட்கள் போதுமானது. ஆரோக்கியமானதாக இருந்தால் அதிகபட்சம் 3 கொடுக்கலாம். அதுவும் மாலை மட்டுமே. தினமும் உண்ணக் கூடாது.
6 முதல் 10 வயது:
2 முதல் 3 பிஸ்கெட்கள் போதும். ஒரு வாரத்தில் 3 முதல் 4 முறை கொடுக்கலாம். தினமும் கொடுக்கக் கூடாது.
10 வயதுக்கு மேற்பட்டவர்கள்:
அதிகபட்சம் 3 முதல் 4 பிஸ்கெட்கள் கொடுக்கலாம்.
எந்த பிஸ்கெட் வாங்க வேண்டும்?
பிஸ்கட் வாங்கும்போது சில பொருட்கள் சேர்க்கப்பட்டிருந்தால் அதை வாங்குவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் பிஸ்கெட் பாக்கெட்டில் மைதா சேர்க்கப்பட்டிருந்தால் அதை வாங்க வேண்டாம். மைதாவில் எந்த சத்துக்களும் கிடையாது. இது எளிதில் ஜீரணமாகாது. நார்ச்சத்து இல்லாமல் இருப்பதால் மலச்சிக்கலும் ஏற்படும். அதிகளவு குளுக்கோஸ், சர்க்கரை சிரப் ஆகியவை சேர்க்கப்பட்ட பிஸ்கெட்களை வாங்க வேண்டாம். இவை உடல் பருமன், பற்சிதைவு போன்றவற்றை ஏற்படுத்தும். பாமாயில், ஹைட்ரஜனேற்றப்பட்ட கொழுப்புகள் போன்றவை சேர்க்கப்பட்டிருந்தால் அதை வாங்குவதை தவிர்க்கவும். செயற்கை நிறமூட்டிகள், செயற்கை சுவையூட்டிகள் போன்றவை சேர்க்கப்பட்டிருந்தாலும் வாங்க வேண்டாம். சோடியம் உப்பு அதிகமாக சேர்க்கப்பட்டிருந்தால் அதை வாங்குவதை தவிர்க்க வேண்டும். இந்த (Preservatives E320, E330, etc.) சேர்மானங்கள் இருந்தாலும் தவிர்க்க வேண்டும்.
எதை கொடுக்கலாம்?
ராகி பிஸ்கெட்கள்:
இதில் இரும்புச்சத்து உள்ளன. வீட்டில் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள். ஆரோக்கியமும் கிடைக்கும். வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக அளவாக கருப்பட்டி சேர்க்கலாம்.
வாழைப்பழம் & ஓட்ஸ்:
இந்த வகை பிஸ்கெட்டுகள் எளிமையாக தயாரிக்கலாம். வெள்ளை சர்க்கரை வேண்டாம். வாழைப்பழம் போதுமானது.
உலர் பழ லட்டு
இது நிச்சயம் குழந்தைகளுக்கு பிடிக்கும். உலர் பழங்கள், நட்ஸ் போன்றவையுடன் பேரீட்சை சேர்த்து பிஸ்கெட் மாதிரி தயார் செய்யலாம்.
மாற்று வழி
உங்களால் வீட்டில் பிஸ்கெட் செய்து கொடுக்க முடிந்தால் வீட்டிலேயே செய்து கொடுக்கலாம். செய்ய முடியாதவர்கள் முழு தானியங்களில் செய்யப்பட்ட, மைதா சேர்க்கப்படாத பிஸ்கெட்டுகளை வாங்கி கொடுக்கலாம். ஆனால் அதை தினமும் செய்யக்கூடாது.
தினசரி பிஸ்கெட் கொடுக்காமல் வேகவைத்த சோளம், பழத்துண்டுகள், பாதாம், பிஸ்தா ஆகிய நட்ஸ், கடலைகள், பயிர் வகைகள் போன்றவை கொடுக்கலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.