
ஐந்து எண்ணெய்களை சேர்த்து செய்யப்படும் ஒரு எண்ணெய் தான் ஐங்கூட்டு எண்ணெய். இது வாதம், மூட்டு வலி, தோல் நோய்கள், பக்கவாதத்தால் ஏற்பட்ட பிரச்சனைகள் ஆகியவற்றை சரி செய்ய உதவும் என்று மருத்துவர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இதை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி? அதன் பயன்கள் என்ன? என்பது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். ஐங்கூட்டு எண்ணெய் என்பது ஐந்து வெவ்வேறு எண்ணெய்களை ஒன்றாக கலந்து காய்ச்சி செய்யப்படும் ஒரு மருந்தாகும். இது கடைகளிலும் கிடைக்கும் என்ற போதிலும் வீட்டிலேயே எளிமையான முறையில் தயாரிக்கலாம்.
இந்த எண்ணெய் தயாரிப்பதற்கு ஐந்து எண்ணெய்கள் தேவை. வேப்ப எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், புன்னை எண்ணெய், புங்கள் எண்ணெய் ஆகிய எண்ணெய்களை வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த ஐந்து எண்ணெய்களையும் சம அளவு எடுத்துக் கொள்ளலாம். உதாரணமாக ஒவ்வொரு எண்ணெயிலும் 100 மில்லி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெய்களை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஒன்றாக கலக்க வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து மிகக் குறைவான தீயில் பத்து நிமிடங்கள் மட்டும் காய்ச்ச வேண்டும். எண்ணெய்கள் ஒன்றோடு ஒன்று கலப்பதற்காக மட்டுமே காட்சிகிறோமே தவிர கெட்டியாகவோ அல்லது கொதித்து குறுகவோ தேவையில்லை. எண்ணெய் கொதி நிலைக்கு வருவதற்கு முன்பே அடுப்பை அணைத்து விட வேண்டும்.
காய்ச்சப்பட்ட எண்ணெயை நன்கு ஆறவைத்து கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம். வாதம் சம்பந்தமான பிரச்சனைகள், வயதானவர்களுக்கு கை கால்களில் ஏற்படும் வலி, மூட்டு தேய்மானத்தால் ஏற்படும் வலி, தோல் நோய்களான சொரியாசிஸ், சிரங்கு, சொறி, கரப்பான், தலையில் ஏற்படும் ஸ்கால்ப் சொரியாசிஸ் ஆகிய அனைத்து வியாதிகளுக்கும் இந்த எண்ணெயை வெளிப்பூச்சாக பயன்படுத்தலாம். இந்த நேரத்தில் தான் பயன்படுத்த வேண்டும் என்கிற கால அளவு எதுவும் இல்லை. எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த எண்ணெய் உடல் சூட்டை தணிக்க உதவுகிறது. உடல் அசதியை குறைக்கவும், கண்களுக்கு குளிர்ச்சியும் தருகிறது. எண்ணெய் குளியல் செய்யும் பொழுது நல்லெண்ணெய் பயன்படுத்தாமல், இந்த எண்ணெயை உடல் முழுவதும் தேய்த்து ஊற வைத்து பின்னர் குளிக்கலாம். குளிக்கும் நீரில் 20 மில்லி அளவிற்கு ஐங்கூட்டு எண்ணெயை கலந்து அதன் பின்னர் குளித்தால் உடல் புத்துணர்வு அடையும். அசதி குறையும். கண் எரிச்சல் நீங்கும். இந்த எண்ணெய் பார்ப்பதற்கு எளிய தீர்வாக தோன்றினாலும் வெளிப்பூச்சாக தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் தோல் ஆரோக்கியம் மேம்படுவதை கண்கூடாக காண முடியும். குதிகால் வலி, மூட்டு வலி பிரச்சனை இருப்பவர்கள் தினமும் பயன்படுத்துவதற்கு முன்பு லேசாக சூடு படுத்தி மிதமான சூட்டில் தடவினால் சிறந்த பலன்கள் கிடைக்கும்.
இந்த எண்ணெயை அனைத்து விதமான வாத நோய்களுக்கும் பயன்படுத்தலாம். குறிப்பாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஒரு கை செயலிழந்தவர்கள், ஒரு கால் மட்டும் செயல் இழந்தவர்கள், உடலில் ஒரு பகுதி மட்டும் செயலிழந்தவர்கள் அல்லது சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்கள் என அனைவரும் இந்த எண்ணெயை பயன்படுத்தலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.