டெங்கு மிரட்டுகிறதா..? இதையெல்லாம் செய்தால் விரட்டியக்கலாம்..!

Published : Dec 22, 2018, 05:43 PM IST
டெங்கு மிரட்டுகிறதா..? இதையெல்லாம் செய்தால் விரட்டியக்கலாம்..!

சுருக்கம்

தமிழ்நாட்டில் பல இடங்களில் பரவி, நடுங்கவைத்துக்கொண்டிருக்கிறது டெங்கு! இந்த டெங்குவை விரட்டியடிப்பது எப்படி..?

மழைக்காலத்தில் டெங்குக் காய்ச்சல் பரவுவதும், பல உயிர்களைக் காவு வாங்குவதும் வழக்கமான ஒன்றாகவே ஆகிவிட்டது. 19-ம் நூற்றாண்டில் பரவ ஆரம்பித்த டெங்கு, இன்று 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பல அரசுகளை அலறவைக்கும் முக்கியமான நோய். இந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாட்டில் பல இடங்களில் பரவி, நடுங்கவைத்துக்கொண்டிருக்கிறது டெங்கு! இந்த டெங்குவை விரட்டியடிப்பது எப்படி..?

டெங்கு என்பது ஒரு வகையான வைரஸ் கிருமி. 'ஏடிஸ் எஜிப்டி’ (Aedes aegypti) என்ற பிரிவைச் சேர்ந்த பெண் கொசுவால் இது பரவுகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கடித்த கொசு, பாதிப்பு இல்லாத மற்றொருவரைக் கடிக்கும்போது, அவருக்கும் டெங்கு பரவும். மற்றபடி தண்ணீர், காற்று, எச்சில், இருமல், தும்மல் மற்றும் தொடுதல் மூலம் இந்தக் கிருமி பரவுவது கிடையாது. முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால், இந்த காய்ச்சல் மனிதனிடம் இருந்து மனிதனுக்கு இது நேரடியாகப் பரவுவதும் இல்லை.

காய்ச்சலின் அளவு 104 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். உடல் சோர்வு, தீவிர தலைவலி, உடல் வலி, கண் வலி, தசைகள் மற்றும் மூட்டு வலி, வாந்தி, உடலில் சிவப்பு தழும்பு, எலும்பு உடைவது போன்று கடுமையான வலி இருக்கும். டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் இல்லாமல் கூட உங்களுக்கு டெங்கு காய்ச்சல் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. டெங்கு கொசு கடித்து 5ல் இருந்து 7 நாட்கள் வரை எந்த அறிகுறிகளும் அந்த நபருக்கு இருக்காது. மனித உடலில் பல்கிப் பெருகும், அதன் பிறகே அறிகுறிகள் தென்படும்.

உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று ரத்தப் பரிசோதனை செய்யவும். டெங்கு பாதிப்பை கண்டறிய டெங்கு ஐ.ஜி.எம். எலிசா, பி.சி.ஆர். ஆகிய பரிசோதனைகள் உங்களுக்கு செய்யப்படும். உங்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டால், முதலில் பதற்றம் அடைய வேண்டாம். மருத்துவர்கள் கூறும் வழிமுறைகளை பின்பற்றுங்கள். வேலைக்கு செல்லாமல், வீட்டிலே ஓய்வு எடுங்கள்.

உடலில் நீர்ச் சத்து குறையும் என்பதால், அதிக அளவில் நீர்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். உங்களுக்கு கடும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல் நிலை மோசமாக தொடங்கினால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதியாகவும். சரியான மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டால் ஏழு நாட்களில் காய்ச்சல் சரியாகிவிடும். உடல் வலி மற்றும் சோர்வு போன்ற இதன் பாதிப்புகள் இரண்டு வாரங்களில் சரியாகி விடும். டெங்குவைத் தவிர்க்க அந்த கொசுவை ஒழிப்பதே ஒரே வழி. டெங்கு பரப்பும் கொசுக்கள் நல்ல தண்ணீரில் தான் முட்டையிடும். இதனால் வீட்டில் சுற்றி இருக்கும் குட்டைகளில் தண்ணீர் தேங்குவது, தேங்காய் மூடியில் தேங்கும் தண்ணீர், வீட்டு தண்ணீர் டேங்குகளில் தேங்கும் தண்ணீரில் தான் இந்த வகை கொசுக்கள் முட்டையிட்டு வளரும். நல்ல தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும்.

வீட்டுக்குள் கொசு வர முடியாதபடி ஜன்னல்களில் கொசு வலை பொருத்தலாம். கொசுவத்தி, கொசு விரட்டி போன்றவற்றை பயன்படுத்தலாம். வீட்டுச் சுவர்கள் மீது 'டி.டி.டி.’ மருந்தைத் பயன்படுத்தினால் கொசுக்கள் ஒழியும். வீட்டைச் சுற்றியும், தெருவோரச் சாக்கடையிலும் 'டெல்டாமெத்திரின்’ என்ற மருந்தைத் தெளிப்பதால் பலன் உண்டாக வாய்ப்புள்ளது. கை, கால் முழுக்க மறைக்கும் பருத்தி ஆடைகளை அணியுங்கள். இந்த வகை கொசு பொதுவாக பகல் நேரத்தில் தான் கடிக்கும். இரவில் கடிக்காது. எனவே உஷாராக இருக்க வேண்டும். விழிப்புணர்வே முக்கியம்.
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

75+ Happy Father's Day Wishes in Tamil: கண்கலங்க வைக்கும் 75+ தந்தையர் தின வாழ்த்துகள்..!
75+ Happy International Yoga Day Wishes in Tamil: WhatsApp முதல் Facebook வரை கலக்கும் 75+ தமிழ் வாழ்த்துகள்