தூக்கம் தொலைத்த இந்தியர்கள்! மாரடைப்பின் ஆரம்பமா? ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

By manimegalai aFirst Published Jan 4, 2022, 7:13 PM IST
Highlights

உறக்கமின்மை குறைபாடு காரணமாக இந்தியாவில் மாரடைப்பு அதிகரிப்பதாக சமீபத்திய ஆய்வின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது. 

 இன்றைய  கால கட்டத்தில், பெரும்பாலான மக்கள் இரவும் பகலும் கால வரையின்றி உழைத்து வருகின்றன. குறிப்பாக, கடந்த இரண்டு வருடங்களாக வீட்டில் இருந்து வேலை செய்யும் நிலை அதிகரித்து காணப்படுவதால் மக்கள் இரவு வேலையில் அதிக அளவு விழித்திருப்பதாக ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. பொதுவாக முன்பெல்லாம் அலுவலகங்களுக்கு சென்று வேலை செய்யபவர்கள் 8 மணி நேர வேலை என்ற கணக்கில் தனது பணிகளை செய்து முடிப்பார். தற்போது, அதன் நேரம் '' WORK FROM HOME" என்ற வகையில் அதிகரித்து காணப்படுகிறது.  மேலும், பெரும்பாலானோருக்கு கரோனா காலத்தில் ஏற்பட்ட கடன் சுமை, தனிமை, வறுமை, தொழில் நஷ்ட்டம், வேலை இழப்பு போன்ற காரணங்கள் மனதளவில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. மேற்கத்திய உணவு பழக்கமும்,  சமூக வலை தளங்களும் இன்றைய இளம் தலைமுறையினரை அதிகம் கட்டி போட்டுள்ளது. எனவே, அண்மை காலமாகவே, உறக்கமின்மை என்பது ஆபத்தான உடல் நல பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. உடல் எடை அதிகரிப்பு என்பது ரத்த கொலஸ்ட்ராலை கூட்டி மாரடைப்பை தூண்டுகிறது.

முன்பெல்லாம் உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம், நீரழிவு, புகைப்பழக்கம், உடல் எடை அதிகரிப்பு போன்றவை மாரடைப்புக்கான பொதுவான காரணங்களாகும். ஆனால், தற்போது போதிய உறக்கமின்மை காரணமாக மாரடைப்பு அதிகரிப்பது நாம் அனைவரும் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். இது தொடர்பாக சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனம் மூலம் எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவில், இந்தியாவில் 51% சதவிகிதம்  பேர் தினமும் 4 முதல் 6 மணி நேரம் மட்டுமே உறங்குவதாக தெரிவித்துள்ளனர். 10 சதவிகிதம் பேர் 4 மணி நேரத்திற்கும் குறைவாக உறங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, அண்மையில் அமெரிக்கா பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், உறக்கம் குறைந்தவர்களுக்கு லெப்டின், கிரிலின், எனும் இரண்டு ஹார்மோன்கள் பாதிக்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது. இவை இரண்டும் பசியை தூண்டுவதும், வயிறு நிரம்பியதை உணரச் செய்வதும் ஆகும். ஒருவர் நாள்தோறும் தினமும் 6 மணி நேரம் கட்டாயம் உறங்க வேண்டும். அதிகபட்சமாக 8 மணி நேரம் உறங்குவது நல்லது.

தூக்கம் வரும்வரைக்கும் மெல்லிய இசைகளைக் கேட்பது, புத்தகம் வாசிப்பது சிறந்தது. மேற்கத்திய கலாச்சார உணவுகள் இரவில் உண்பது தூக்கத்தைக் கெடுக்கும். தூங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னால், ஜீரணிக்க சுலபமான உணவுகள், தூக்கத்தை வரவழைக்கிற அமினோ அமிலம் இருக்கிற பால் அல்லது வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது. கனவுகளுடன் வருகிற தூக்கமும் ஆழ்ந்த தூக்கம்தான். தூக்கத்தில் அடிக்கடி பயந்து எழுந்தால் மனநல சிகிச்சை தொடர்பான மருத்துவரை அணுகுவது நல்லது. இப்படிப்பட்டவர்கள் இரவுகளில் சண்டைப்படம், திகில் படம் பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக, இன்றைய இளம் தலைமுறையினர் வருங்கால தூண்கள் என்பதை உணர்ந்து காலம் அறிந்து செயல்படுவது அவசியம்.

click me!