இன்னும் எத்தனை பிரச்னைதான்யா வரும்... ஆண்களை கலங்கடிக்கும் ஆய்வு முடிவு!

By manimegalai aFirst Published Jan 4, 2022, 4:23 PM IST
Highlights

முடி உதிர்வதைத் தடுக்கும் முயற்சியில் பெண்களை விட ஆண்கள் மரபணு ரீதியாகவும், ஹார்மோன் ரீதியாகவும், கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 

 ஆண்கள், பெண்கள் இருவருக்கும் முடி உதிர்தல் பிரச்சனை பெரும் மன உளைச்சலை தருகின்றது. நடைமுறை வாழ்வில் எப்போதும் முடி உதிர்தலை தவிர்ப்பதில் பெண்களை விட ஆண்களுக்குதான் அக்கறை அதிகம். இன்றைய ஆண்களுக்கு 30 வயதிலேயே வழுக்கை ஏற்படும் அளவில் முடி அதிக அளவில் கொட்டுகிறது. காரணம், பெண்களுக்கு கொட்டும் முடிக்கு இணையாக பெரும்பாலும் வளர்ந்துவிடுகிறது. ஆனால் ஆண்களுக்கு அப்படியல்ல. 'போனால் போகட்டும் போடா' என்றும் இருக்க முடிவதில்லை. திருமணத்தின் போது முடி இல்லாத, முடி குறைவாக உள்ள ஆண்கள் வயது முதிர்ந்த தோற்றம் அளிப்பர். அவ்வளவு ஏன், ஒரு சில சமயங்களில் ஆண்களின் திருமணம் தடை ஆவதற்குக் கூட முடி உதிர்வு மிக முக்கிய காரணமாக அமைகிறது. ஆண்களின் முடி உதிர்விற்கு பெரும்பாலும் மரபணுக்கள் மற்றும் மன அழுத்தம் முக்கிய காரணமாக அமைகின்றது. சில சமயங்களில் தொப்பி அல்லது ஹெல்மெட் அணிவது மேலை நாட்டு உணவு பழக்கவழக்கம் போன்றவை குறிப்பிடத்தகுந்தவை.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான ஆய்வின் முடிவில், முடி உதிர்வதைத் தடுக்கும் முயற்சியில் பெண்களை விட ஆண்கள் மரபணு ரீதியாகவும், ஹார்மோன் ரீதியாகவும், கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பெண்களை விட ஆண்களுக்கு, மன அழுத்தம் அல்லது மனதில் ஏதேனும் குழப்பம் இருந்தாலே, ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு, முடி கொட்ட ஆரம்பிக்கும். குறிப்பாக, 50 வயதிற்குள், 50% ஆண்களும்,  25% பெண்களும், முடி உதிர்தலால் பாதிக்கப்படுகின்றனர் என்று ஆய்வின் முடிவில் மதிப்பிடப்பட்டுள்ளது. பெண்களை ஒப்பிடும் போது, ஆண்களுக்கு அதிக அளவு முடி உதிர்வு ஏற்படுகிறது என்பதை சமீபத்திய ஆய்வு தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, இது போன்ற ஆய்வின் முடிவுகளால், ஆண்கள் மிகுந்த கவலைப்பட வேண்டாம். ஏனெனில் அதிகம் கவலைபட்டாலும் முடி கொட்டுமாம் பாஸ்!

இவற்றை சரி செய்ய முயற்சிப்பதற்கு சில வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

முடி உதிர்வை கட்டுப்படுத்த புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவு வகைகள் உட்கொள்வது அவசியம். புரோட்டீன் அதிகம் நிறைந்த முட்டை, பருப்பு வகைகள், சிக்கன், இறைச்சிகள் உடல் ஆரோக்கியத்தை அதிகரித்து முடி உதிர்வை குறைக்கும். அதுமட்டுமின்றி, நெல்லிக்காய், வெந்தயம் மற்றும் குளிர்ச்சி தரும் பழம் வகைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். ஏனெனில், அதிகப்படியான உடல் சூடு முடி உதிர்வை அதிகரிக்கும். கோடை காலத்தில் வாரத்தில் நான்கு நாட்கள் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது உடல் சூட்டை குறைத்து முடி உதிர்வை கட்டுப்படுத்தும்.  மேலும், முளைகட்டிய பயிறு வகைகளை உண்பது அதிக அளவு புரத சத்து கிடைக்கிறது. அதேபோன்று, பால் சார்ந்த உணவு பொருட்களும் அதிக அளவு புரோட்டீன் சத்துக்களை வழங்குகிறது.

கிராமங்களில் பொதுவாக பெரும்பாலான ஆண்களுக்கு முடி அடர்த்தியாகவும், வலிமையாகவும் மற்றும் கறுப்பாகவும் இருக்கும். அவர்கள் பெரும்பாலும், வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் குளிக்கும் தன்மை கொண்டவர்கள். முடி உதிர்வு இருக்கும் போது புகைப்பழக்கமும், மதுப்பழக்கமும் கொண்டிருந்தால் நீங்கள் அதை தவிர்ப்பதே நல்லது. ஏனெனில், இவைகள் உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை குறைக்க செய்யும். இது முடி வளர்ச்சியில் பாதிப்பை உண்டாக்கி முடி உதிர்வை அதிகரிக்கிறது.

இஞ்சி மற்றும்  பூண்டு ஆகியவற்றில் ஒன்றின் சாற்றினை 15 நிமிடம் ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், நல்ல மாற்றத்தை நீங்களே காண்பீர்கள்.
 
முடி உதிர்வுக்கு மன அழுத்தம் முக்கிய காரணமாக அமைகின்றது. கவலை, கோபம் மற்றும் பதற்றம் ஆகியவைதான் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைத்து மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன. யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவற்றைத் தொடர்ந்து செய்வதாலும் மன அழுத்தம் குறைந்து ஹார்மோன் சமநிலை அடைகிறது.
 

click me!