சற்று வித்தியாசமாகவும் ஆரோக்கியமாகவும் ஒரு உணவை இன்று காலை நீங்கள் சாப்பிட விரும்பினால் உங்களுக்கான ஒரு சூப்பரான ரெசிபியை கொண்டு வந்துள்ளோம்.
பொதுவாக ஒவ்வொரு இந்திய வீட்டிலும் காலை மற்றும் இரவு உணவாக இட்லி தோசை தான் இருக்கும் அந்தவகையில், இன்னைக்கும் காலையிலும் உங்களது வீட்டில் இட்லி தோசையா..?
இன்னும் சொல்லப்போனால் தினமும் இப்படி இட்லி தோசையே சாப்பிடுவதால உங்களுக்கும் சரி.. உங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தாருக்கும் சரி கண்டிப்பாக போரடிச்சியிருக்கும். எனவே, சற்று வித்தியாசமாகவும் ஆரோக்கியமாகவும் ஒரு உணவை இன்று காலை நீங்கள் சாப்பிட விரும்பினால் உங்களுக்கான ஒரு சூப்பரான ரெசிபியை கொண்டு வந்துள்ளோம். அது வேற ஏதுமில்லங்க 'தக்காளி பன்னீர் ஸ்டப்டு பராத்தா' தான்.
இந்த பராத்தா ஆரோக்கியமாகவும் சாப்பிடுவதற்கு அட்டகாசமான சுவையிலும் இருக்கும். உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் இந்த உணவை விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இந்த பராத்தா செய்வது மிகவும் சுலபம். சரி வாங்க இப்போது தக்காளி மற்றும் பன்னீர் வைத்து இந்த ஸ்டப்டு பராத்தா எப்படி செய்வது என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
தக்காளி பன்னீர் ஸ்டப்டு பராத்தா செய்ய தேவையான பொருட்கள்:
பராத்தா மாவிற்கு..
கோதுமை மாவு - 2 கப்
தக்காளி - 8
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
ஸ்டப்டு செய்ய..
சோம்பு - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பன்னீர் - 100 கிராம்
கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை -
சிறிதளவு
துருவிய சீஸ் - சிறிதளவு
வெண்ணெய் - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
தக்காளி பன்னீர் ஸ்டப்டு பராத்தா செய்ய முதலில், ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும், அதில் தக்காளியை லேசாக கீறிவிட்டு, பிறகு 2 நிமிடம் மூடி வையுங்கள். தக்காளி நல்ல வெந்ததும் அதை ஆற வையுங்கள். சிறிது நேரம் கழித்து தக்காளியை நன்கு மசித்து அதிலிருந்து அதன் சாற்றை மட்டும் தனியாக எடுத்து அதை ஒரு பாத்திரத்தில் வைத்து, அதனுடன் கொஞ்சமாக உப்பு, சிறிதளவு கொத்தமல்லி மற்றும் எடுத்து வைத்த கோதுமை மாவை சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளுங்கள். பிறகு மாவின் மேல் கொஞ்சம் எண்ணெய் தடவி அதை மூடி வைத்து15 நிமிடம் ஊற வையுங்கள்.
இதனை அடுத்து, ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும், அதில் சோம்பு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளியுங்கள். பிறகு இதில் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும், இதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பிறகு, அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள். பிறகு பொடியாக நறுக்கிய பன்னீரை இப்போது அதில் சேர்த்து 2 நிமிடம் கிளறி விட்டு, கொத்தமல்லியைத் தூவி இறக்கி விடுங்கள்.
இப்போது ஏற்கனவே, பிசைந்த மாவை சிறிதளவு எடுத்து அதை சப்பாத்தி போல மெல்லிசாக தேய்த்து, அதன் நடுவே தயாரித்து வைத்துள்ள பன்னீர் மாசாலாவை கொஞ்சமாக வையுங்கள். இதனுடன் துருவிய சீஸையும் வையுங்கள்.
இப்போது ஸ்டப்டு பராத்தா சுட்டு எடுக்க ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அது சூடானதும், அதில் சிறிதளவு வெண்ணெய் தடவி, தயாரித்து வைத்த பராத்தாவை வைத்து, முன்னும் பின்னும் பொன்னிறமாக வரும் வரை வேக வைத்து எடுங்கள். அவ்வளவு தான் அட்டகாசமான சுவையில் தக்காளி பன்னீர் பராத்தா ரெடி!! இந்த ரெசிபியை உங்களது வீட்டில் கண்டிப்பாக செய்து பார்த்து உங்களது பதிலை எங்களுக்கு தெரிவியுங்கள்..