இன்றைய நவீன உலக வாழ்க்கையில், மேற்கத்திய உணவு கலாச்சாரம், உடற்பயிற்சி இல்லாமை, அதிகப்படியான வேலை பளு, போன்றவை பெண்களின் உடல் நிலையை மோசமாக பாதிக்கிறது.
இன்றைய நவீன உலக வாழ்க்கையில், மேற்கத்திய உணவு கலாச்சாரம், உடற்பயிற்சி இல்லாமை, அதிகப்படியான வேலை பளு, போன்றவை பெண்களின் உடல் நிலையை மோசமாக பாதிக்கிறது. இவை டீன் ஏஜ் பருவத்திலேயே பெண்களுக்கு மார்பக வலி போன்றவற்றை பரிசாக அளிக்கிறது. உலகளவில் 70 சதவீத பெண்கள் இந்த மார்பு வலி பிரச்சனையை தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது சந்திக்கிறார்கள். இதிலும் சில குறிப்பிட்ட சதவீதத்தினர் மீண்டும் மீண்டும் மார்பகவலியை உணர்வதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஹார்மோன் பிரச்சனைதான் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இந்த மார்பக வலி பெண்களை உடல் ரீதியாக மட்டுமின்றி, மனரீதியாகவும் பாதிப்புக்குள்ளாக்குகிறது என்ப தால் பெண்கள் இதை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகுவது நல்லதாகும்.
பெண்களின் மார்பகங்கள் இந்த 7 காரணங்களுக்காக வலியை உணரலாம். அவை, என்ன என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
1. மாதவிடாய் நெருங்கும்போது வலி ஏற்படலாம்:
மாதவிடாய் காலம் நெருங்கும்போது மார்பகப் பகுதியில் வலி ஏற்படுவது இயல்பான ஒன்றாகும். ஹார்மோன் அளவு அதிகரிப்பதால் மார்பகங்கள் விரிவடைவதால் இந்த வலி ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். மாதவிடாய் காலம் முடிந்ததும் இந்த வலி மறைகிறதா எனப் பாருங்கள். தொடர்ச்சியாக வலி இருப்பில் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.
2. உள்ளாடையில் கவனம் தேவை:
நம்மில் பலரும் செய்யும் மிக முக்கியமான தவறு எது தெரியுமா? சரியான அளவில் உள்ளாடையை அணியாமல் இருப்பது. இது நமது உடலமைப்பை கெடுப்பதுடன், உடலுக்கு அசெளகரியத்தையும் தரக்கூடியதாகும். மட்டுமின்றி, நமக்கு அதிகமான உடல் ரீதியான உபாதைகளை தரக்கூடியது. சரியான அளவில் உங்கள் மார்பகங்களை தாங்கும் உள்ளாடையை அணிவது, தடிப்புகள் முதல் பிற உடல் நலப்பிரச்சனைகள் வரை வராமல் தடுக்கும்.
3. மார்பகங்களில் சிறு கட்டிகள்:
பெரும்பாலும் நகரக்கூடிய மிகச்சிறு கட்டிகள் ஆபத்தில்லாதவையாகவே இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால், சிறு கட்டிகளோ, அல்லது நீர் அல்லது திரவம் போன்ற வெளியேற்றம் இருந்தாலோ, உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.
4. மார்பகக் காயங்கள்
அதிர்வான வேலைகளாலோ, மோதல்களாலோ காயங்கள் ஏற்படலாம். சில சமயம் அது வெளியில் தெரியலாம். உட்காயமாகவும் வலிக்கலாம். மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று சிகிச்சை பெறுங்கள்.
5. பாலூட்டும் பெண்களுக்கு வரும் தொற்று:
பாலூட்டும் தாய்மார்களுக்கு மார்பகங்களில் வலி ஏற்படலாம். ஆனால், அதை தவிர்த்து சிகப்பாக இருப்பினும், அல்லது காம்புகள் காயமாக இருப்பினும் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.
6. இணை நோய் மருந்துகளை உட்கொள்கிறீர்களா?
ரத்த அழுத்தத்துக்கான மருந்துகளை உட்கொள்கிறீர்களா? ஸ்டீராய்டுகளை உட்கொள்கிறீர்களா? கர்ப்பத் தடுப்பு மாத்திரைகள், மனநலத்துக்கான மாத்திரைகள் அல்லது குழந்தையின்மைக்கான சிகிச்சையில் மருந்துகளை உட்கொள்கிறீர்களா? இதுவும் ஒரு குறிப்பிட்ட அளவில் மார்பக வலியைத் தரக்கூடும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
7. புற்றுநோய் அறிகுறிகள்:
மார்பகப் புற்றுநோயில் எல்லா நேரங்களிலும் அறிகுறிகள் வெளிப்படையானதாக இருப்பதில்லை. எனவே, 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பக சுய பரிசோதனை செய்துகொள்ளுதல் அவசியம். சிறு கட்டிகள், அல்லது உருண்டைபோன்றவை தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். பதற்றப்படாமல் இவற்றை கையாளுங்கள்.பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்பதை உணர்ந்து ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.