
தற்போது பெரும்பாலான வீடுகளில் குளிர்காலத்தில் ரூம் ஹீட்டர்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஹீட்டர் தூங்கும் அறையை சூடாக வைத்திருப்பதால் பலர் இரவு தூங்கும் போது கூட குளிர்ச்சியை தடுக்க ரூம் ஹீட்டரை போட்டு தூங்குகிறார்கள்.
இரவு முழுவதும் ஹீட்டரை போட்டு தூங்குவது குளிருக்கு இதமாக இருந்தாலும் அப்படி பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து யாருக்கும் தெரிவதில்லை. ஆம், ரூம் ஹீட்டர் பயன்படுத்தி தூங்குவதால் தூங்கும்போது இறந்த சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன. ரூம் ஹீட்டர் வைத்துக் கொண்டு தூங்குவதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னவென்று இங்கு பார்க்கலாம்.
இரவு முழுவதும் ஹீட்டர் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள் :
1. ஹீட்டர் அறையை சூடாக்கும். ஆனால் ஆக்ஸிஜன் அளவை குறைக்கும். இரவு முழுவதும் பூட்டிய அறையில் ஹீட்டரை வைத்தால் மூளைக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல் போகும். இதன் விளைவாக தலைவலி, தலை சுற்றல், காலையில் அதிகப்படியான சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
2. ரூம் ஹீட்டர் பயன்படுத்துவது சருமம் மற்றும் கண்களை பாதிக்கும். அதாவது அறையில் இருக்கும் வெப்பமான காற்று சருமத்தில் வறட்சி, அரிப்பு, எரிச்சல், ஒவ்வாமையை ஏற்படுத்தும். நீண்ட காலத்திற்கு இப்படி பயன்படுத்தினால் இளம் வயதிலேயே தோல் சுருங்கிவிடும். மேலும் கண்களில் வறட்சியை ஏற்படுத்தும்.
3. அறையின் வறண்ட காற்றானது தொண்டையை எரிச்சலூட்டும். மேலும் இருமல், சளி, சைனஸ் போன்ற பிரச்சனைகளும் வரும்.
4. ரூம் ஹீட்டர் காற்றில் தூசி மற்றும் பாக்டீரியாக்களை வெளியிடுகின்றன. எனவே அந்த காற்றை ஆஸ்துமா நோயாளிகள் சுவாசித்தால் சுவாச பிரச்சனைகளை இன்னும் மோசமாக்கும்.
5. ரூம் ஹீட்டர் பயன்படுத்தினால் நீரிழப்பு பிரச்சனை ஏற்படும். எப்படியெனில் இரவு முழுவதும் வெப்பமூட்டும் காற்றில் உடல் இருப்பதால் அது உடலில் இருந்து தண்ணீரை ஆவி ஆக்குகிறது. பிறகு காலையில் வறண்ட வாய், தலை சுற்றில் ஏற்படும்.
6. ரூம் ஹீட்டர் உடல் வெப்பநிலையை அதிகரிக்க செய்யும். இதனால் இரவு உங்களால் சரியாக தூங்க முடியாமல் போகும். பிறகு காலையில் நீங்கள் சோர்வாகவும், எரிச்சலாகவும் உணர்வீர்கள்.
7. இரவு முழுவதும் ஹீட்டர் பயன்படுத்துவதால் அறையில் கார்பன் மோனாக்சைடு அதிகமாக இருக்கும். அது மரணத்தை ஏற்படுத்தும். அதாவது அது மூளைக்கு இரத்த விநியோகத்தை சீர்குலைத்து விடும் அல்லது மூளையில் இரத்த கசிவு போன்ற கடுமையான பிரச்சனை ஏற்படுத்தும். இது இதய நோயாளிகளுக்கு இன்னும் ஆபத்தானது கூட. அதுபோல தூங்கு மறையில் கேஸ் ஹீட்டரை பயன்படுத்துவது தூக்கத்திலேயே மூச்சு திணறி மரணம் கூட நிகழும்.
ரூம் ஹீட்டரை பயன்படுத்த சரியான வழிமுறைகள் ;
நீங்கள் ரூம் ஹீட்டரை பயன்படுத்த விரும்பினால் நீங்கள் தூங்கும் அருகில் கண்டிப்பாக ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்திருக்கவும். ஏனெனில் அது காற்றை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும். இதனால் உங்களது தோல் மற்றும் கண்கள் பாதிக்கப்படாது. இல்லையெனில் அறையில் காற்றோட்டமாக இருக்கும்படி ஏற்பாடுகள் செய்யவும். இதனால் ரூம் ஹீட்டர் பயன்படுத்தினாலும் உங்களுக்கு பாதிப்புகள் ஏதும் ஏற்படாது.
நினைவில் கொள் :
- நீங்கள் ரூம் ஹீட்டர் பயன்படுத்தும் போது உங்களுக்கு தலைவலி, குமட்டல், வாந்தி, வயிற்று வலி, தலை சுற்றல், அசெளகரியம் போன்ற அறிகுறிகள் வந்தால் உடனே அறையை விட்டு வெளியே வந்து இயற்கை காற்று சுவாசிக்கவும். பிறகு ரூம் ஹீட்டரை அணைத்துவிட்டு அறையின் ஜன்னலை திறந்து விடுங்கள்.
- ரூம் ஹீட்டருக்கு அருகில் காகிதம், படுக்கை, ஆடை அல்லது எரியக்கூடிய எந்தவொரு பொருட்களையும் ஒருபோதும் வைக்காதீர்கள். இவை தீ விபத்தை ஏற்படுத்தும். அதுபோல குழந்தைகள் மற்றும் செல்ல பிராணிகளை ஹீட்டரில் இருந்து விலக்கி வைப்பது நல்லது. நீங்கள் அறையை விட்டு வெளியே சென்றால் உடனே ஹீட்டர் அணைத்துவிட்டு அதன் இணைப்பையும் துண்டித்து விட்டு செல்லுங்கள். இதனால் கார்பன் மோனாக்சைடு அபாயத்தை தவிர்க்க முடியும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.