இதெல்லாம் அரசியல் கட்சிகள் கைக்கு எப்படி கிடைக்கிறது?... ஒரே போடாய் போட்ட உயர் நீதிமன்றம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 24, 2021, 8:07 PM IST
Highlights

புதுச்சேரியில் வாக்காளர்களின் மொபைல் எண்களைப் பெற்று பாஜக பிரச்சாரம் செய்வதாக அளித்த புகார் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள புதுச்சேரியில், பா.ஜ. கட்சி சார்பில் தொகுதி வாரியாக வாட்ஸ் ஆப் குரூப்கள் ஆரம்பித்து பிரச்சாரம் செய்யப்படுவதாகவும்,வாக்காளர் பட்டியலில் பெயர் மற்றும் முகவரி மட்டும் இடம் பெற்றிருக்கும் எனவும், மொபைல் எண் இடம் பெறாது என்பதால், ஆதார் ஆணையத்தில் இருந்து வாக்காளர்களின் மொபைல் எண்களைப் பெற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் ஆனந்த் தாக்கல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

அரசியல் கட்சிகள் குறுந்தகவல் மூலம் வாட்ஸ் ஆப் குரூப்பில் இணையக் கோரி பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும், ஆதார் விவரங்களைப் பெற்று பிரச்சாரம் செய்வது குறித்து சிறப்பு புலன் விசாரணை குழுவை நியமித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.  இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில்  விசாரணைக்கு வந்தபோது, இதுசம்பந்தமாக மனுதாரர் அளித்த புகார் சைபர் குற்றப் பிரிவு விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அரசியல் கட்சி எப்படி வாக்காளர்களின் மொபைல் எண்களை பெற முடிந்தது எனவும், அதை எப்படி பயன்படுத்தலாம் எனக் கேள்வி எழுப்பினர். மேலும், நடவடிக்கை எடுக்க அனைத்து அதிகாரமும் உள்ள தேர்தல் ஆணையம், ஆளுங்கட்சி என்பதால் அமைதி காக்கிறதா எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுசம்பந்தமாக மார்ச் 26ம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை தள்ளிவைத்தனர்.

click me!