பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?... மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிபுணர் விளக்கம்!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 9, 2021, 7:52 PM IST
Highlights

பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசியை எவ்வித தயக்கமும் இன்றி  போட்டுக்கொள்ளலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தொற்றுநோயியல் மற்றும் தொற்று நோய்கள் பிரிவு தலைவர் சமிரன் பாண்டா தெரிவித்துள்ளார். 

கொரோனா 2வது அலைக்கு எதிராக போராடி வரும் இந்தியா அதற்கான பேராயுதமான தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு தடையின்றி தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட வரும் நிலையில், சமீபத்தில் கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய சுகாதாரத்துறை அனுமதி அளித்தது. 

இதனைத் தொடர்ந்து பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுத்து வருகின்றன. இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தொற்றுநோயியல் மற்றும் தொற்று நோய்கள் பிரிவு தலைவர் டாக்டர் சமிரன் பாண்டா கூறியுள்ளதாவது: பாலூட்டும் தாய்மார்கள் எந்த தயக்கமும் இல்லாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போடுவதன் காரணமாக தாய்க்கு உருவாகும் எதிர் பொருள், தாய்பாலூட்டும் போது குழந்தைக்கும் சென்று பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்துள்ளார். 

ஆஸ்த்துமா, தூசி அலர்ஜி, மகரந்த துகள் அலர்ஜி உள்ளவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என டாக்டர் சமிரன் பாண்டா தெளிவுப்படுத்தியுள்ளார். இணை நோய் உள்ளவர்களும், நிலையாக இருந்தால், தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். நீரிழிவு நோய் உள்ளவர்களும், இதர பிரச்சினைகள் உள்ளவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது. ஏனென்றால் அவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் என தெரிவித்துள்ளார்.

புதிய வகை கொரோனாக்கள் பரவும் நிலையில் ஏற்கனவே கூறப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சையில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்த அவர், ஏற்கனவே உள்ள கொரோனா வகையாக இருந்தாலும், புதிய வகை கொரோனாவாக இருந்தாலும், அனைத்து வகைகளும், பரவும் விதம் ஒரே மாதிரியானதுதான் என தெரிவித்துள்ளார். எனவே முகக்கவசம் அணிவது, கூட்டம் உள்ள இடங்களை தவிர்ப்பது, கிருமிநாசினி ஆகியவை இன்னும் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் திறமையான நடவடிக்கைகளாக இருக்கும் என அறிவுறுத்தியுள்ளார்.

click me!