அப்போல்லாம் டெங்கு கொசுவ எப்படி சாகடிச்சாங்க தெரியுமா..? இதப் படிங்க... காரணம் யார்னு தெரியும்!

First Published Nov 16, 2017, 10:01 AM IST
Highlights
ancient times how our people handled to control dengue mosquitoes


அண்மைக் காலமாக இந்தியா முழுவதும் பரவலாகவே டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்தது. தலைநகர் தில்லியில் துவங்கி, கோல்கத்தாவில் மம்தா பானர்ஜியின் கோட்டையில் கலந்து, கேரளத்தின் பிணரயி விஜயனைக் கடித்து, கர்நாடக சித்தராமையாவைக் கலக்கி, இன்னும் இந்தியா முழுக்க சுற்றி, தமிழ்நாட்டில் தஞ்சமடைந்து... பலமாக பதம் பார்த்துவிட்டது... டெங்கு கொசு. 

டெங்கு பாதிப்பு மறைந்து மழை வெள்ளம் சேர்ந்து கொண்டதால், இப்போதைக்கு டெங்கு பற்றிய பேச்சு இருக்காதுதான். இருந்தாலும், கிராமங்களில், நகர்ப்புறங்களில் சுகாதார அதிகாரிகள், பணியாளர்கள் இன்னமும் மருந்தைக் கையில்கொண்டு வந்து, உங்க வீட்ல பிரிட்ஜ் திறந்திருக்கா, பின்னாடி தண்ணி சேர்ந்திருக்கா... மூடப்படாத தொட்டி இருக்கா... தண்ணி தொட்டி எப்படி இருக்கு... எங்கயாவது உடைந்த பொருள்கள் அது இதுன்னு வெச்சிருக்கீங்களா... என்றெல்லாம் கதவைத் தட்டி கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு வகையில் பாராட்டப் பட வேண்டிய பணிதான்.

ஆனால் அந்தக் காலத்தில் டெங்கு கொசு இல்லாமலா இருந்திருக்கும். சில வருடங்கள் முன் வரை இப்படியெல்லாம் நாம் பயந்தது இல்லையே. அப்போது எப்படிக் கையாண்டார்கள்? அதுவும் இந்த நவீன காலத்தில் மருந்துகள் பல கண்டறியப்பட்டு, டெங்குவை ஒழிக்க இவ்வளவு நுட்பங்கள் இருக்கும் இந்தக் காலத்திலேயே நம்மால் அதை கையாள முடியவில்லையே... எதுவும் இல்லாமல் அப்போது என்ன செய்திருப்பார்கள்...? இந்தக் கேள்வி நம்முள் எழுகிறது அல்லவா? ஆனால், வினையே இந்த மருந்துகள், ரசாயனங்கள் தான் என்கிறார் ஒருவர். 

இது குறித்த  ஒரு செய்தி அண்மைக் காலமாக வாட்ஸ் அப் மூலம் பரவி வருகிறது. பலரின் கவனத்தை அது கடந்தும் சென்றிருக்கலாம். அல்லது, இப்படி கூட இருக்குமா என்றும் எண்ண வைத்திருக்கலாம். அட என்னங்க இப்படி கிச்சுகிச்சு மூட்டறீங்க என்றும் கூட நீங்கள் நினைக்கலாம். பரவாயில்லை... என்ன என்றுதான் தெரிந்துகொள்வோமே!

திருப்பூரைச் சேர்ந்த சட்டையணியா சாமியப்பன் என்பவர் கூறியதாவது : 

ஒரு மனிதன் ஒரு நாளைக்கு பத்து லிட்டர் தண்ணீரில் குளித்தானேயானால் அந்த பத்து லிட்டர் தண்ணீரும் மரம், செடி, கொடிகளுக்கு பயன்படும். ஆனால் சோப்பும், ஷாம்பும் பயன்படுத்தி குளிக்கும் பொழுது தண்ணீர் அத்தனையும் கழிவுநீர் ஆகிவிடுகிறது. 

துணி துவைக்க வேப்பங்கொட்டையில் செய்த சோப்பை பயன்படுத்தினால் தண்ணீரில் உள்ள மீன்கள் எல்லாம் வந்து சோப்பு அழுக்கை தின்னும். சீயக்காய், அரப்பு போன்ற இயற்கைப் பொருட்களை பயன்படுத்தி தலைக்குக் குளிக்கும் பொழுது அந்த அழுக்கை உண்ண மீன்கள் ஓடிவரும். 

பாத்திரம் கழுவ இலுப்பைத் தூள் பயன்படுத்திய காலத்தில் சாக்கடையில் தவளைகள் வாழ்ந்தன. ஆயிரக்கணக்கில் உருவாகும் கொசு முட்டைகளை அந்த தவளைகள் உண்டு மனிதனை காய்ச்சல் போன்ற நோய் நொடிகளிலிருந்து காப்பாற்றின .

ஒரு தட்டான்பூச்சி நாள் ஒன்றுக்கு ஆயிரம் கொசு முட்டைகளை தின்றுவிடும் . இப்பொழுது தவளையும் இல்லை தட்டானும் இல்லை. அதனால் தான் டெங்கு காய்ச்சல் மனிதனைக் கொல்கிறது.

முடிந்தவரை இயற்கையான பொருட்களை பயன்படுத்த வேண்டும். நம்மால் இயற்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற வகையில் செயல்பட வேண்டும்.

- என்ன படித்து விட்டீர்களா? இயற்கையோடு இயைந்த வாழ்வு என்றெல்லாம் நாமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். நகரமயமாக்கலிலும் நாகரிக வாழ்க்கையிலும் இயற்கையாவது ஒன்னாவது என்று செயல்படும்போது, டெங்கு நம்மை டொங்கென்று படுக்கையில் தள்ளிவிடுகிறதே! 

click me!