உலகிலேயே இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவிலும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் காவலர்கள் தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இரவு பகல் பாராமல் தன்னலமற்று, கொரோனாவால் பாதித்த மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் சேவையில் ஈடுபட்டுள்ள அனைவரும் நம் கண் முன்னே தெரியும் கடவுள் எனலாம்.
கடந்த 100 நாட்களில் இந்த உலகையே புரட்டிபோட்டு எடுக்கும் வைரஸ் கொரோனா. மனித குலத்திற்கு பெரும் இன்னலாக வந்து நிற்கும் கொரோனாவிடம் போராடி எப்படி வெல்லப்போகிறோமோ என்ற பயம் அனைவர் மத்தியிலும் உள்ளது. உலக நாடுகளில் பெரும் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்காவும் தற்போது இந்தியாவிடம் உதவி கேட்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இப்படியொரு நிலையில், உலகிலேயே இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவிலும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் காவலர்கள் தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர். எந்த ஒரு விடுமுறையும் இல்லாமல், பணி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இதை எல்லாம் தாண்டி கோடை வெயில் தாக்கம் எப்படிஉள்ளது என நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தானே....
இந்த ஒரு காலகட்டத்தில் கடினமாக இருக்கக்கூடிய காக்கி உடையில் உச்சி வெயிலில்.. மக்களோடு போராடி வருகின்றனர் காவலர்கள். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதன் படி மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளிவர முடியும்
அதிலும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வெளியே வர முடியும் என தெரிவித்து இருந்தாலும், ஒரு சிலர் எதனையும் பொருட்படுத்தாமல் ஜாலியாக ஊர் சுற்றி வெளியில் வருகின்றனர். இவர்களுக்கு காவலர்கள் எவ்வளவு எச்சரிக்கை விடுத்தாலும், வழக்கு பதிவு செய்தாலும், வண்டியை கையகப்படுத்தினாலும் வெளியில் வந்துக்கொண்டே தான் இருக்கின்றனர்.
இதில் கொரோனா வைரஸ் போன்று தலையில் மாட்டிக்கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், அன்பாகவும் சொல்லி வருகின்றனர். கோபமாகவும் குறிப்பிடுகின்றனர். இதை எல்லாம் மீறி மேலதிகாரிகளுக்கு பல விஷயங்களுக்கு பதில் சொல்லி ஆக வேண்டிய நிலை வேறு.
ஆக மொத்தத்தில் ஓய்வு இல்லாமல் அனைத்தையும் பொறுத்துக்கொண்டு மக்கள் பணியாற்றவும் காவலர்களுக்கு ஆரத்தி எடுத்து வாழ்த்து தெரிவித்து உள்ளார் ஓர் மூதாட்டி.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வரும் காவலர்கள் மற்றும் ஊர்காவல் படையினருக்கு, அதே பகுதியில் காய்கறி விற்று வரும் ராஜம்மாள் என்ற மூதாட்டி ஆரத்தி எடுத்து அனைவரும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என வாழ்த்தினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. எனவே நமக்காக தன்னலமற்று வேலை செய்து வரும் காவலர்கள் உண்மையான ஹீரோக்கள் ஹீரோயின்கள் தான்.