கீழடி நாகரிகம்... உரிமை மீட்டு தமிழர்களை பெருமை பெறச் செய்த தன்மானத் தமிழச்சி கனிமொழி..!

By Thiraviaraj RMFirst Published Sep 27, 2019, 2:29 PM IST
Highlights

கீழடி நாகரிகம் பற்றியும் தமிழர்களின் பெருமை பற்றியும் இன்று  உலகமே வியந்துபோய்க்கிடக்கிறது. இதற்கு முக்கியக் காரணங்களில் ஒருவர் தன்மானத் தமிழச்சி கனிமொழி மதி. 

யாரந்த கனிமொழி மதி..? 
திண்டுக்கல்லுக்கு அருகிலுள்ள தேவத்தூர் கிரமத்தை சேர்ந்தவர் கனிமொழி மதி. எட்டாம் வகுப்பு வரை அதே கிராமத்தில் பயின்றுவிட்டு, 12ம் வகுப்பு வரை திண்டுக்கல்லில் கல்வி கற்றுள்ளார். திருச்சியில் ஹோலி கிராஸ் கல்லூரியில் வரலாறு படித்து விட்டு, சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றுள்ளார். மூத்த வழக்கறிஞர்களோடு எட்டு ஆண்டு காலம் பணிபுரிந்துவிட்டு, 2009ம் ஆண்டு தனியாக வழக்குகளை எடுத்து வாதிட தொடங்கியுள்ளார்.

அப்படி என்ன செய்து விட்டார் இந்த கனிமொழி மதி..? 

கீழடியில்,  இந்திய அரசின் தொல்லியல் துறையால் முதலில் செய்யப்பட்ட ஆய்வுகளின் அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது. கீழடி ஆய்வு அறிக்கையை வெளியிடவும், அங்கு தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படவும், அங்குள்ள தொல்பொருட்களை அங்கேயே வைத்து பாதுாக்கவும் நீதிமன்ற வழிகாட்டுதல்கள் கிடைக்க வழி செய்தவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் கனிமொழி மதி.

இந்தியத் தொல்லியல் துறை நடத்தி வந்த கீழடி அகழ்வாய்வை, தமிழக அரசே நடத்தவும், அங்கு கிடைத்த பொருட்களை அங்கேயே அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க இடம் ஒதுக்கப்படவும் கனிமொழி மதி, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தொடுத்த பொதுநல வழக்கும் முக்கிய பங்காற்றியது.

இதுகுறித்து அவர் கூறுகையில், ’’கீழடியில் இரண்டாவது கட்ட ஆய்வுகள் நடைபெற்று கொண்டிருந்தபோதுதான், அங்கு நடந்த அகழ்வாராய்ச்சிகள் பற்றி வெளிவந்த செய்திகளை பார்த்து வியப்படைந்தேன். கீழடியில் கட்டட சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று கேள்விப்பட்டபோது  இன்னும் ஆர்வம் அதிகமானது.  கிணறு அமைப்பு, குழாய் மூலம் தண்ணீர் எடுத்து வருவது, கொண்டு செல்வது போன்றவை எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அங்கு சென்று பார்த்தேன். 

இதற்குப் பிறகு நடக்கும் தொல்லியல் ஆய்வுகளில் இன்னும் அதிகமானவை கண்டுபிடிக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அகழ்வாய்வு தொடராமல் இருந்ததும், கீழடியில் கிடைத்த பொருட்களை அங்கேயே காட்சிக்கு வைக்காமல் எடுத்து செல்ல முற்பட்டதையும் பார்த்து ஆதங்கம் ஏற்பட்டது. பிறகு தான் இதுகுறித்து பொதுநல வழக்கு தொடர முடிவு செய்தேன். கல்லூரி நாட்களில் அருட்காட்சியகங்கள் மற்றும் தொல்பொருட்களை பற்றி அறிந்து வைத்திருப்பதால், இந்த பொருட்களை இன்னொரு இடத்திற்கு கொண்டு சென்று விட்டால், அவற்றை திருப்பி கொண்டுவர மிகவும் கடினம் என எனக்கு புரிந்தது. எனவே, பொருட்களை எடுத்து செல்வதை தடுத்து, உள்ளூரில் வைத்து காக்க ஏற்பாடு செய்யும் நொக்கத்தோடு இந்த பொதுநல வழக்கை தொடுத்தேன். 

தமிழர்களின் பெருமை என்ன..? 

கீழடி நாகரிகம் 2,600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அப்போதைய மக்கள் படிப்பறிவோடு வாழ்ந்து வந்துள்ளனர் என்கிற முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளதை பார்த்து பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

அக்கால மக்கள் எதார்த்தமாக, சாதாரணமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பது நமக்கு தெரிய வந்துள்ளது. ஆனால், நாம் கடைபிடிக்கும் சில மூடநம்பிக்கைகளால் எதார்த்தமான வாழ்க்கையை தொலைத்துவிட்டோமோ எண்ண தோன்றுகிறது . அறிவியல் கருத்துகளை எதார்த்தமாக உள்வாங்கி கொண்டு வாழ்ந்த சமூகமாக 2,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த சமூகத்தின் அடிப்படை இருந்திருக்கிறது என்றால், இந்த காலத்திற்கு பின்னர் வாழ்ந்தவர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை அறிய, இந்த கீழடி கண்டுபிடிப்பு ஒரு தூண்டுதலாக இருக்கும்’ எனத் தெரிவித்தார்.

click me!