தற்போது வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 4 சிங்கங்களுக்கு டெல்டா வகை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி 10 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் நீலா என்ற சிங்கம் இறந்தது. இதையடுத்து சிறப்பு மருத்துவர்கள் குழு பிற சிங்கங்களுக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு 12 வயதான பத்மநாபன் என்ற சிங்கமும் உயிரிழந்தது. தற்போது மற்ற 8 சிங்கங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 4 சிங்கங்களுக்கு டெல்டா வகை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 24.05.2021 அன்று 4 சிங்கங்களும் மற்றும் 29.05.2021 அன்று 7 சிங்கங்களும் ஆக மொத்தம் 11 சிங்கங்களின் மாதிரிகள் SARS CoV-2 சோதனைக்காக தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் பகுப்பாய்வு நிறுவனத்திற்கு (ICAR) அனுப்பியிருந்தது. போபாலில் உள்ள NISHAD நிறுவனம், நம் நாட்டில் விலங்குகளில் புதியதாக உருவாகும் நோய்க்கிருமிகளைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்ளும் நிறுவனமாகும்.
மேலும் SARS - COV-2க்கான பூங்கா விலங்கு மாதிரிகளை பரிசோதிக்க நம் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட நான்கு நிறுவனங்களில் ஒன்றாகும். போபாலின் NIHSAD நிறுவனம் 03.06.2021 அன்று தெரிவித்த அறிக்கையின்படி, 9 சிங்கங்களின் மாதிரிகள் SARS CoV-2 தொற்று உறுதியானதை அடுத்து அன்றிலிருந்து விலங்குகள் தீவிர சிகிச்சையில் உள்ளன.
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு தொற்று ஏற்படுத்திய SARS CoV-2 வைரஸின் மரபணு வரிசைப்படுத்துதலின் முடிவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு உயிரியல் பூங்கா அதிகாரிகள் அந்நிறுவனத்திடம் கோரியிருந்தனர்.
இந்த சூழலில் இயக்குநர் ICAR-NIHSAD இப்போது பின்வருமாறு தனது முடிவை அறிவித்துள்ளார் . "4 சிங்க மாதிரிகளின் மரபணு வரிசைப்படுத்தல் ஆய்வு போபாலில் உள்ள NIHSAD நிறுவனத்தில் செய்யப்பட்டது. மரபணு வரிசைப்படுத்துதல் பகுப்பாய்வில் 4 சிங்கங்களின் மாதிரிகள் பாங்கோலின் பரம்பரை B.1.617.2 வகையைச்சேர்ந்தவை என்பதையும் அவை உலக சுகாதார நிறுவனம் (WHO) வகைப்படுத்தப்பட்ட படி டெல்டா வகையைச் சார்ந்தது என்றும் கூறியுள்ளது"
11.05.2021 அன்று உலக சுகாதார அமைப்பு (WHO) B.1.617.2 மரபணு பரம்பரையை வரிசைப்படுத்துதலில் இது மாறுபட்ட (VOC) வகையாக கூறி வகைப்படுத்தியுள்ளது. இவ்வகை வேகமாக பரவும் தன்மை கொண்டதோடு நடுநிலைத்தன்மைக்கு குறைவானது எனவும் கூறியுள்ளது.