தவான் அதிரடி அரைசதம்.. ஸ்டோய்னிஸ், ஹெட்மயர் அபாரம்..! சன்ரைசர்ஸூக்கு கடின இலக்கை நிர்ணயித்த டெல்லி கேபிடள்ஸ்

By karthikeyan VFirst Published Nov 8, 2020, 9:41 PM IST
Highlights

2வது தகுதிச்சுற்று போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு 189 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்தது டெல்லி கேபிடள்ஸ் அணி.
 

ஐபிஎல் 13வது சீசனின் 2வது தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் ஆடிவருகின்றன. டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

டெல்லி கேபிடள்ஸ் அணியில் தொடக்க வீரர் பிரித்வி ஷா ஆடாததால், தவானுடன் ரஹானே தான் தொடக்க வீரராக இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தவானுடன் யாருமே எதிர்பார்த்திராத விதமாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் தொடக்க வீரராக இறக்கிவிடப்பட்டார்.

டெல்லி கேபிடள்ஸின் இந்த சோதனை முயற்சி நல்ல பலனை தந்தது. மார்கஸ் ஸ்டோய்னிஸ் பவுண்டரிகளை விளாசி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். பவர்ப்ளேயில் அதிரடியாக ஆடினார். சந்தீப் ஷர்மா வீசிய 3வது ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்த ஸ்டோய்னிஸ், ஹோல்டர் வீசிய 4வது ஓவரில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாச, அந்த ஓவரில் மட்டும் 18 ரன்கள் கிடைத்தது. அதன்பின்னர் தவான் அடித்து ஆட தொடங்கினார்.

ஐந்தாவது ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்த தவான், அடுத்த ஓவரில் ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் விளாசினார். பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் அடித்தது டெல்லி அணி.  முதல் விக்கெட்டுக்கு ஸ்டோய்னிஸும் தவானும் இணைந்து 8.2 ஓவரில் 86 ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடி தனது பணியை செவ்வனே செய்த ஸ்டோய்னிஸ் 27 பந்தில் 38 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிய தவான் அரைசதம் அடித்தார். 

10வது ஓவரிலேயே 100 ரன்களை குவித்துவிட்டது டெல்லி அணி. தவானுடன் இணைந்த ஷ்ரேயாஸ் ஐயர், நிதானமாக தொடங்கினார். ஆனால் பெரிய இன்னிங்ஸ் ஆடுவதற்கு முன்பாகவே 20 பந்தில் ஒரேயொரு பவுண்டரியுடன் 21 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் தவானும் அடித்து ஆட, மறுமுனையில் ஹெட்மயரும் அடித்து ஆடினார். 50 பந்தில் ஆறு பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸருடன் 78 ரன்கள் அடித்த தவான், 19வது ஓவரின் 3வது பந்திலேயே ஆட்டமிழந்தார்.

அதிரடியாக ஆடிய ஹெட்மயர், 22 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 42 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 189 ரன்களை குவித்த டெல்லி அணி, 190 ரன்கள் என்ற கடின இலக்கை சன்ரைசர்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
 

click me!