மிசோரமில் ஆட்சியமைக்கும் ஜோரம் மக்கள் இயக்கம்!

By Manikanda Prabu  |  First Published Dec 4, 2023, 2:14 PM IST

மிசோரம் மாநிலத்தில் ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது


மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 7ஆம் தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில், மிசோரம் மாநிலம் தவிர மற்ற 4 மாநிலங்களில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், மிசோரம் மாநிலத்தில் மட்டும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 4ஆம் தேதிக்கு (இன்று) தள்ளி வைக்கப்பட்டது.

அதன்படி, மொத்தம் 40 தொகுதிகளை மிசோரம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, ஜோரம் மக்கள் இயக்கம் 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 7 இடங்களில் அக்கட்சி முன்னிலை வகித்து வருகிறது. அம்மாநிலத்தில் ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 21 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், தற்போதைய நிலவரப்படி, ஜோரம் மக்கள் இயக்கம் அம்மாநிலத்தில் ஆட்சியமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

Tap to resize

Latest Videos

அதேபோல், மிசோ தேசிய முன்னணி 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது; 3 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 1 இடத்தில் முன்னிலை வகித்து வருகிறது.

மிக்ஜாம் புயல்: நிரம்பும் ஏரிகள்; வெள்ள அபாய எச்சரிக்கை - பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி!

மிசோரம் பொறுத்தவரை மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ், ஜோரம் மக்கள் இயக்கம், பாஜக ஆகிய கட்சிகள் முக்கியமாக இயங்கி வருகின்றன. இருந்தாலும், 1987ஆம் ஆண்டு மிசோரம் மாநில அந்தஸ்து பெற்றது முதல் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் மிசோ தேசிய முன்னணி அல்லது காங்கிரஸ் ஆகிய கட்சிகளே மாறி மாறி வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2018ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மிசோ தேசிய முன்னணி வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளது. சோரம்தங்கா மாநில முதல்வராக உள்ளார்.

இந்த முறை மிசோ தேசிய முன்னணி, ஜோரம் மக்கள் இயக்கம் இடையே இருமுனை போட்டி நிலவி வந்த நிலையில், எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அக்கட்சித் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

click me!