Amit Shah : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியாவில் போதைப்பொருள் கடத்தலுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று ஜூலை 18ம் தேதி வியாழனன்று நடந்த கூட்டத்தில் பேசியபோது, இந்தியா ஒரு கிராம் போதைப்பொருளை கூட நாட்டிற்குள் நுழைய அனுமதிக்காது என்று உறுதியளித்தார். போதைப்பொருள் எதிர்ப்பு நிறுவனம், அதன் விநியோகச் சங்கிலிகளை உடைத்தெறிய 'இரக்கமற்ற' அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்திய தலைநகர் டெல்லியில் நடந்த NCORDன் 7வது உச்ச நிலைக் கூட்டத்தில் மத்திய மற்றும் மாநில போதைப்பொருள் தடுப்பு முகமைகளின் மூத்த அதிகாரிகளிடம் அவர் உரையாற்றினார். இந்த நிகழ்வின் போது, போதைப்பொருள் கடத்தல் குறித்து நாட்டின் குடிமக்கள், போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்திற்கு (NCB) புகாரளிக்க, MANAS ஹெல்ப்லைன் எண் (1933) மற்றும் info.ncbmanas@gov.in என்ற மின்னஞ்சல் ஐடியையும் அமித்ஷா அறிமுகப்படுத்தினார்.
undefined
போதைப்பொருள் வர்த்தகமானது, போதைப்பொருள்-பயங்கரவாதத்துடன் சிக்கலான முறையில் பிணைக்கப்பட்டுள்ளது. மேலும் அவை தேசிய பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார். இந்தியாவில் விரிவான சீர்திருத்தங்கள் மூலம் போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கான நரேந்திர மோடி அரசாங்கத்தின் கடந்த ஐந்தாண்டு முயற்சிகளை உள்துறை அமைச்சர் எடுத்துரைத்தார்.
நாட்டு மக்களும், அரசோடு இணைந்து போரிட்டால் இந்த போதைப்பொருளை இந்தியாவில் இருந்து முற்றிலுமாக ஒழிக்க முடியும் என்றார் அவர். போதைப்பொருள் கடத்தின் கும்பல்களின் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க அனைத்துவிதமான முயற்சிகளை, சீராக எடுக்க அவர் அந்த துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.