வரிசையில் வர சொன்ன வாக்காளரை வேட்பாளரான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. சரமாரியாக தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சில மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. அந்த வகையில், மொத்தம் 175 சட்டமன்றத் தொகுதிகள், 25 மக்களவைத் தொகுதிகளை கொண்ட ஆந்திர மாநிலத்துக்கு ஒரே கட்டமாக மே 13ஆம் தேதி (இன்று) வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் - ஜனசேனா - பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து களம் காண்கின்றன. காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்து களம் காண்கின்றன. இதனால், அம்மாநிலத்தில் மும்முனைப் போட்டி நிலவி வருகிறது.
பங்குச்சந்தை வீழ்ச்சி: அமித் ஷா சொன்ன பரிந்துரை!
ஆந்திராவில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. காலை முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி 20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில், வரிசையில் வர சொன்ன வாக்காளரை வேட்பாளரான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. சரமாரியாக தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்காளர்காள் வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர். அப்போது, அங்கு வங்க ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளரும், சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான சிவக்குமார் வரிசையில் நிற்காமல் நேரடியாக வாக்குச்சாவடி மையத்துக்குள் சென்றார். இதனை கண்ட வரிசையில் நின்ற வாக்காளர் ஒருவர் எம்.எல்.ஏ. சிவக்குமார் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த சிவக்குமார், அந்த வாக்களரை சரமாரியாக தாக்கினார். அவருடன் வந்தவர்களும் அந்த வாக்காளரை தாக்கினர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.