பிரதமர் மோடிக்காக செய்த பாதுகாப்பு ஏற்பாடு... சாலையின் குறுக்கே கட்டிய கயிறால் இளைஞர் பரிதாப பலி!

By SG BalanFirst Published Apr 16, 2024, 4:33 PM IST
Highlights

கேரளாவில் பிரதமர் மோடியின் வருகையையொட்டி, பாதுகாப்புக்காக சாலையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி மனோஜ் (28) என்ற இளைஞர் உயிரிழந்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு கேரளாவின் வலஞ்சம்பலத்தில் சாலையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. காவல்துறையினர் கவனக்குறைவாக சாலை தடுப்பு அமைத்ததால்தான் இந்த உயிரிழப்பு நடந்தது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சகோதரன் அய்யப்பன் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.45 மணியளவில் நடந்த இந்த விபத்தில் மனோஜ் உன்னி என்பவர் உயிரிழந்தார். 28 வயதான இவர் வடுதாலா பகுதியைச் சேர்ந்தவர். கொச்சி மாநகராட்சியில் ஒப்பந்த தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தார்.

ஞாயிற்றுக்கிழமை கேரளா சென்ற பிரதமர் இரவு எர்ணாகுளம் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். மறுநாள் திங்கள்கிழமை காலை தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக குன்னங்குளத்துக்குச் செல்ல இருந்தார். இதனால், இரவு 9 மணி முதல் 11 மணி வரை எம்ஜி சாலையில் வாகனங்கள் நுழையாமல் இருக்க எஸ்ஏ சாலையின் குறுக்கே போலீசார் கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தினர்.

டீப்ஃபேக் ஆபாசப் படங்களை உருவாக்குவது கிரிமினல் குற்றம்! பிரிட்டனில் அதிரடி சட்டம்!

அப்போது, தாய்க்கு மருந்து வாங்கிக் கொடுத்துவிட்டு ரவிபுரத்தில் உள்ள வீட்டிற்குச் வேகமாக பைக்கில் சென்றுகொண்டிருந்த மனோஜ், குறுக்கே கட்டியிருந்த கயிற்றில் சிக்கினார். இதனால் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

கேரளாவில் பிரதமர் மோடியின் வருகையையொட்டி, பாதுகாப்புக்காக சாலையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி மனோஜ் (28) என்ற இளைஞர் உயிரிழந்தார். pic.twitter.com/5x9lTafgDD

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் மனோஜை உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். திங்கட்கிழமை மாலையில் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையில், மனோஜ் குடிபோதையில் பைக்கில் வேகமாக வந்ததாக வெளியான செய்தியை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். அவருக்குக் குடிப்பழக்கமே கிடையாது என்று அவரது சகோதரி சிப்பி கூறுகிறார்.

“என் சகோதரர் மது அருந்தியதில்லை. அந்தப் பழக்கமே அவருக்குக் கிடையாது. மருத்துவர்களும் அவரது ரத்தத்தில் ஆல்கஹால் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்” என்று சிப்பி சொல்கிறார். தனது சகோதரர் மரணத்திற்கு முறையற்ற சாலைத் தடுப்புகளை அமைத்த காவல்துறையினர்தான் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார்..

கொச்சி கமிஷனர் எஸ். சியாம்சுந்தர், காவல்துறை எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறுகிறார். அதிவேகமாக பைக்கில் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது என்றும் விளக்கியுள்ளார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தியை ரேடியோவில் அறிவித்த நடிகர்... யாரு தெரியுமா?

click me!