
உத்தரப்பிரதேச மாநில முதல்வர் ‘யோகி ஆதித்யநாத் பெயரை துதிபாடுங்கள் இல்லாவிட்டால் உ.பி.யை விட்டு வெளியேறுங்கள்’ என்று மீரட் நகரில் பல இடங்களில் வைக்கப்பட்ட பதாகைகளால் பெரிய சர்சசை உருவாகியுள்ளது.
ஆதித்யநாத்தின் அமைப்பான இந்து யுவ வாகினி அமைப்பினர் இதை வைத்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த பதாகைகளால் சர்ச்சை உருவானதையடுத்து, அவற்றை போலீசார் அகற்றினர்.
இந்த பதாகைககளில் “உத்தரப்பிரதேச மாநிலத்தில் வசிக்க வேண்டுமானால் யோகி யோகி என்று துதிபாடுங்கள்” என்ற வாசகங்கள் இருந்தன.மேலும், முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடி, மற்றும் இந்து யுவவாஹினிதலைவர் நீரஜ் சர்மா பஞ்சாலி ஆகியோரின் புகைப்படங்களும் இருந்தன.
போலீஸ் துறையின் முக்கிய அதிகாரிகள், போலீஸ் ஆணையர் ஆகியோரின் வீடுகளுக்கு அருகே இந்த பதாகைகளை வைக்கப்பட்டு இருந்ததால், பெரும் பரபரப்பு நிலவியது.
மீரட் நகர போலீஸ் எஸ்.பி. ரவீந்தர் கவுர் கூறுகையில், “ இந்த பதாகைகள் வைக்கப்பட்ட விவகாரத்தில், தீவிர விசாரணைக்கும், விரிவான அறிக்கைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை கிடைத்த பின்பு தான்நடவடிக்கை எடுக்க முடியும். மாநிலத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சக்திகளை மாநில அரசு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது’’ என்றார்.
இந்து யுவ வாகனி அமைப்பின் உறுப்பினர் நாகேந்திர பிரதாப் சிங்கிடம் இது குறித்து நிருபர்கள் கேட்டபோது, “ மாவட்டப் பொறுப்பில் இருந்து பாஞ்சாலிஎன்பவர் கடந்த மாதம் நீக்கப்பட்டார். அவர் இந்த அமைப்புக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் செய்து இருக்கலாம்’’ என்றார்.