
என் மாநிலத்தை நான் சுத்தம் செய்யாமல் யார் செய்வது என்று துடைப்பம் ஏந்தி நகரத்தின் முக்கிய தெருக்களில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத், 2018ம் ஆண்டுக்குள் மாநிலத்தின் 30 மாவட்டங்கள் திறந்த வெளிக்கழிப்பிடம் இல்லாததாக மாற்றப்படும், சுத்தமான நகரங்கள் பட்டியலிலும் இடம் பெறும் என உறுதியளித்தார்.
முதல்வர் ஆதித்யநாத்தோடு, அமைச்சர் சுரேஷ் கண்ணா, அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கையில் துடைப்பம் ஏந்தி, லக்னோ நகரின் மிகவும் பரபரப்பாக இருக்கும் பாலூ அதார் பகுதியில் உள்ள ராம் மோகன் தெருவை நேற்று சுத்தப்படுத்தினர்.
சமீபத்தில் மத்திய அரசு சுத்தமான நகரங்கள் தரவரிசைப்பட்டியலை வெளியிட்டது. அதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாரணாசி மட்டுமே முதல் 100 நகரங்களில் இடம் பெற்று இருந்தது. மற்ற எந்த நகரமும் இடம் பெறவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் வருத்தம் தெரிவித்த ஆதித்யநாத், அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள் ஏராளமான நகரங்கள் ஸ்வாச் சுர்வேக்சான் பட்டியலில் இடம் பெற வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், மாநிலத்தின் தலைநகர் லக்னோ, மீரட், கான்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மிகவும் மோசமாக பராமரிக்கப்படுவது குறித்து அதிகாரிகளிடம் கவலை தெரிவித்து, அதை சுத்தமாக பராமரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும், மக்களுக்கு விழிப்பு உண்டாக்கவும் அதிகாரிகளுக்குஆதித்யநாத் உத்தரவிட்டார்.
இதையடுத்து, தானே துடைப்பத்துடன் களத்தில் இறங்கிய ஆதித்யநாத், லக்னோவின் முக்கியமான பகுதியான பாலூ அதாரில் உள்ள ராம் மோகன் தெருவை சுத்தப்படுத்தினார்.
அப்போது நிருபர்களிடம் முதல்வர் ஆதித்யநாத் பேசுகையில், “ என் மாநிலத்தை நான் சுத்தமாக வைத்துக்கொள்ளாமல் யார் வைத்துக்கொள்வார்கள். அதனால்,தான் நானே களத்தில் இறங்கினேன். நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன் எடுக்கப்பட்ட ஆய்வு என்பதால், வாரணாசி மட்டும் சுத்தமான நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள் 30 நகரங்களில் திறந்தவெளிக்கழிப்பிடம் ஒழிக்கப்படும், சுத்தமான நகரங்கள் பட்டியலிலும் இடம்பெறும். மிகவும் மோசமான , சுத்தமில்லாத நகரங்கள் பட்டியலில் இருக்கும் உ.பி. நகரங்கள் படிப்படியாக நீக்கப்படும்.
அடுத்த ஆண்டு முதல் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் உ.பி. நகரங்கள் இடம் பெறும். அதற்கான அனைத்துப் பணிகளிலும் இறங்கிவிட்டோம். சாலையில் குப்பைகளை போடக்கூடாது, எச்சில் துப்பக்கூடாது உள்ளிட்ட சுகாதாரமற்ற விஷயங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.