
என் ஆட்சியில் தலையில் குல்லா அணிந்த முஸ்லிம்களுக்கும், நெற்றியில் திலகம் இட்ட இந்துக்களுக்கும் வேறுபாடு கிடையாது. யாரையும் பாகுபாடு காட்டி நான் நடத்த மாட்டேன் என்று உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் மக்களுக்கு உறுதி அளித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் 15ஆண்டுகளுக்குபின் பா.ஜனதா ஆட்சியைக் கைப்பற்றி, கோரக்பூர் மடாதிபதியும், எம்.பி.யுமான ஆதித்யநாத் முதல்வராக பதவி ஏற்றுள்ளார். இவர் பதவி ஏற்றதில் இருந்து எடுத்துவரும் பல நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பையும், சில விஷயங்கள் சிறுபான்மையினர் மத்தியில் அதிருப்தியையும் பெற்றுள்ளது. விவசாய கடன் தள்ளுபடி, பெண்கள் பாதுகாப்புக்கு தனிப்படை, மின்கட்டணத்தில் சலுகை,அரசு அலுவலகர்களுக்கு ஒழுக்க நெறிகள் மக்களிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில், சட்டவிரோத இறைச்சிக்கடைகளை மூடிய விவகாரம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு முதல்வர் ஆதித்யநாத் நேற்று பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது-
என் தலைமையான அரசு, மாநிலத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கும். அதேசமயம், சட்டத்தை கையில் எடுப்பவர்களைப் பார்த்து சும்மா இருக்காது. தவறு செய்பவர்களையும் தண்டிக்காமல் விடாது. குறிப்பாக இந்துயுவ வாகனி அமைப்பினர் பெயரில் சிலர் செய்யும் சட்டவிரோத செயல்கள், அமைப்புக்கும், ஆட்சிக்கும் அவப்பெயரை உண்டாக்குகிறது. அவர்களை கண்டுபிடித்து தண்டிக்காமல் விடோமாட்டோம்.
என் ஆட்சியில் சட்டம் ஒழுங்குக்கு முக்கியத்துவம் தரப்படும். இன்னும் சில இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடக்கின்றன. 100 நாள் நிறைவு செய்யும் போது, நான் அளிக்கும் “ரிப்போர்ட் கார்டில்” இதுபோன்ற சம்பவங்கள் இருக்காது.
மாநிலத்தில் உள்ள வர்த்தகரின் மனைவியும், மகளும், சகோதரியும் பாதுகாப்புடன் இருப்பார்கள். நெற்றியில் குங்குமம் வைத்தவர்களையும், தலையில் குல்லா அணிந்த முஸ்லிம்களையும் வேறுபடுத்தி நான் நடத்தமாட்டேன். அனைவருக்கும் சரிசமமான வாய்ப்புகள் வழங்கப்படும்.
மாநிலத்தில் ஏராளமான நகரங்கள் முந்தைய அரசின் கீழ் மோசமாக பராமரிக்கப்பட்டு, சுத்தமான நகரங்கள் பட்டியலுக்குள் வரவில்லை. அடுத்த ஆண்டுக்குள் முதல் 100 இடங்களில் உ.பி.யில் உள்ள 50 நகரங்களை இடம் பெற வைப்பேன்.
நான் ஆட்சிக்கு வந்ததில் இருந்து எந்த அதிகாரியையும் தேவையில்லாமல் மாற்றவில்லை. எந்த இடத்தில் யார் பணி செய்தால், நன்றாக இருக்குமோ அவர்களைத்தான் இடம்மாற்றினேன். மாற்றதுத்துக்கு தயாரானவர்கள் மாறி இருக்கிறார்கள்.
மாநிலத்தில் கடந்த 12 முதல் 15 ஆண்டுகளாக அதிகாரிகள் இடம் மாற்றம் செய்வது லாபம் கொழிக்கும் தொழில்போல நடந்துள்ளது. அதுமாற்றப்பட்டு, விரைவில் அதிகாரிகள் மாற்றத்துக்கான கொள்கை உருவாக்கப்படும். அனைத்து அமைச்சர்களும் குறிப்பிட்ட துறை அதிகாரிகளை மாற்றும்போது, ஏன் மாற்ற வேண்டும், எதற்காக மாற்ற வேண்டும், இதனால் மக்களுக்கு என்ன நன்மை என்பது குறித்து அறிக்கையை என்னிடம் அளிக்க வேண்டும். அதன்பின்புதான் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள்.
பிரதமர் மோடி கூறியிருப்பதைப் போல விவசாயிகள் வருமானம் 2022ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கப்படும். என் நோக்கமும் அதுதான், விவசாயிகளின் நலனுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். அதில் முதல்கட்டமாக விவசாய பயிர்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது
இவ்வாறு அவர் தெரிவித்தார்.