பெங்களூருவில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் இந்திய வானிலை மையம் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெங்களூருவில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் இந்திய வானிலை மையம் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் விடியவிடிய வெளுத்து வாங்கிய மழையினால் நகரம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. சாலைகள், குடியிருப்புகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. குடியிருப்புகள் நீரில் மூழ்கின. வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆள் உயரத்திற்கு மழைநீர் தேங்கியதால், பேருந்துகள், கார்கள், லாரிகள் நீரில் மூழ்கின. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இதை அடுத்து மாநகராட்சி அதிகாரிகளும், மீட்பு படையினரும் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மழையால் எங்களுக்கு ரூ.225 கோடி நஷ்டம்… குமறும் கர்நாடகா ஐடி நிறுவனங்கள்… முதல்வருக்கு கடிதம்!!
இதனிடையே கடந்த 30ம் தேதி பெங்களூருவில் பெய்த கனமழையால் பெங்களூரு புறநகர் சாலை (ஓ.ஆர்.ஆர்.) வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் உண்டாகி அந்த சாலையில் அமைந்துள்ள மென்பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஊழியர்கள் பணிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக ஐ.டி. நிறுவனங்கள் அரசு மீது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தின. ஊழியர்கள் பணிக்கு வராததால் ரூ.250 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், வெள்ளம் ஏற்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தங்கள் நிறுவனங்களை வேறு இடத்திற்கு மாற்றிவிடுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடகத்தில் இன்று முதல் வருகிற 10ம் தேதி வரை மேலும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் பெங்களூரு நகர் மற்றும் புறநகரில் 3 நாட்கள் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெங்களூரு வெள்ளம்:கர்நாடகாவில் மழை கொட்டித் தீர்க்க காரணம் என்ன?
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கர்நாடகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும். அதாவது கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, வட கர்நாடகத்தில் பாகல்கோட்டை, பெலகாவி, பீதர், தார்வார், கதக், ஹாவேரி, கலபுரகி, கொப்பல், ராய்ச்சூர், விஜயாப்புரா, யாதகிரி, தென்மாவட்டங்களில் பல்லாரி, பெங்களூரு புறநகர், பெங்களூரு நகர், சாம்ராஜ்நகர், சிக்பள்ளாப்புரா, சிக்கமகளூரு, சித்ரதுர்கா, தாவணகெரே, ஹாசன், குடகு, கோலார், மண்டியா, மைசூரு, ராமநகர், துமகூரு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும். லேசானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.