மாயாவதியின் அரசியல் வாரிசான மருமகன் ஆகாஷ் ஆனந்திற்கு ஒய்-ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது
உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஒருகாலத்தில் மிகவும் வலிமையாக இருந்தது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால், தற்போது அம்மாநிலத்தில் அக்கட்சியின் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதாகவும், வாக்கு சதவீதமும் குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தலைவர் மாயாவதி தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்தார். மக்களவை தேர்தலுக்கான பணிகளை ஆகாஷ் ஆனந்த் தொடங்கியுள்ள நிலையில், அதிக அச்சுறுத்தல் இருக்கும் நபர்களுக்கு வழங்கப்படும் ஒய்-ப்ளஸ் பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் நாட்டில் பல்வேறு தலைவர்களுக்கு மத்தியப் படை பாதுகாப்பை வாபஸ் பெற்றது. மிகவும் முக்கியமான நபர்களுக்கு மட்டுமே இதுபோன்ற பாதுகாப்பு வழங்கப்படுகிறது. பாஜகவுடன் மாயாவதி நெருக்கமாக இருப்பதாக விமர்சிக்கப்படும் நிலையில், அரசியல் வாரிசான மருமகன் ஆகாஷ் ஆனந்திற்கு ஒய்-ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆகாஷ் ஆனந்துக்கு ‘ஒய்’ பிரிவின் கீழ் அதிகபட்சம் 2 கமாண்டோக்களுடன் 11 காவலர்களின் பாதுகாப்பு கிடைத்துள்ளது. இதில் ஆறு தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் 24 மணி நேரமும் மூன்று ஷிப்டுகளில் பணியாற்றுவர். மேலும் ஐந்து ஆயுதமேந்திய காவலர்கள் அவரது வீட்டில் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற மத்திய பாதுகாப்பு உத்தரப்பிரதேசத்தில் அரசியல் அந்தஸ்தாகக் கருதப்படுகிறது.
மதுரை ரயில்வே விளையாட்டு மைதானம் மீட்பு - சு.வெங்கடேசன் எம்.பி. பெருமிதம்!
மாயாவதிக்கு இசெட் ப்ளஸ் மற்றும் NSG பாதுகாப்பு உள்ளது. அக்கட்சியில் இன்னும் சில மூத்த தலைவர்களுக்கு இசட் மற்றும் எக்ஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஆகாஷ் ஆனந்துக்கு ‘ஒய்’ பிரிவு வழங்கப்பட்டுள்ள நேரம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், கவனம் ஈர்த்துள்ளது.
கடந்த 2019 மக்களவை தேர்தலின் மாயாவதியின் பிரசாரத்தின் போது, முக்கிய முகமாக பார்க்கப்பட்ட ஆகாஷ் ஆனந்த் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக உள்ளார். 28 வயதான ஆகாஷ் ஆனந்த், கடந்த 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக அரசியலில் நுழைந்தார். லண்டனில் எம்.பி.ஏ படித்துள்ள ஆகாஷ், மாயாவதியின் சகோதரர் ஆனந்தின் மகன் ஆவார்.