காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை: ராகுல் காந்தி உறுதி!

By Manikanda Prabu  |  First Published Mar 3, 2024, 12:11 PM IST

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டப்பூர்வமாக வழங்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்


காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டப்பூர்வமாக வழங்கப்படும் எனவும், சாதி வாரிக் கணக்கெடுப்பு என்பது இந்தியா கூட்டணியின் முதல் பணி எனவும் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இது இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பாஜக தலைமையிலான மத்திய அரசு பெரிய தொழிலதிபர்களுக்காக உழைத்து வருவதாகவும், விவசாயிகளின் நலன்களைப் புறக்கணிப்பதாகவும் ராகுல் குற்றம் சாட்டினார். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை ராஜஸ்தானின் இருந்து மத்தியப்பிரதேச மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. அம்மாநிலத்தின் மொரேனாவில் பேசிய அவர், சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். நாட்டின் 73 சதவீத மக்கள் பொருளாதாரத்தின் பெரும்பாலான துறைகளிலும் முதலிடத்தில் இல்லை; அதிகாரத்துவத்தின் மேல் நிலைகளிலும் இல்லை என ராகுல் காந்தி சுட்டிக்காட்டினார்.

Latest Videos

undefined

பின்னர், குவாலியரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய கூட்டணி அரசு மேற்கொள்ளும் முதல் பணியாக சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என உறுதியளித்தார். சாதி பிரச்சனைக்காக பிரதமர் நரேந்திர மோடியை அவர் சாடினார்.

மத்திய பாஜக அரசு பத்து முதல் பதினைந்து தொழிலதிபர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்துள்ளது, ஆனால், அது விவசாயிகளுக்கு (சட்டரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட) குறைந்த பட்ச ஆதரவு விலையை மறுக்கிறது என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாய அமைப்புகள் தற்போது பயிர்களுக்கு சட்டப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட குறைந்த பட்ச ஆதரவு விலையை கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.

விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கும், உழைப்புக்கும் உரிய விலையை மட்டுமே கேட்கிறார்கள், ஆனால் பயிர்கள் அறுவடைக்குத் தயாராகும் போது, மத்திய அரசு விவசாயப் பொருட்களின் விலையைக் குறைக்க இறக்குமதி-ஏற்றுமதிக் கொள்கையை மாற்றுகிறது என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். “இந்த மாற்றம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை குறைந்த விலையில் விற்கும்படி விவசாயிகளை கட்டாயப்படுத்துகிறது, பின்னர், கொள்கையை மாற்றுவதன் மூதம் அரசாங்கம் மீண்டும் விலைகளை அதிகரிக்கிறது.” என ராகுல் காந்தி சுட்டிக்காட்டினார்.

முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் சிட்டிங் எம்.பி.க்கள் 33 பேருக்கு சான்ஸ் தராத பாஜக!

பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆகிய அமைப்புகள் வெறுப்பை பரப்புவதாக குற்றம் சாட்டிய ராகுல்காந்தி, பாரத் ஜோடோ யாத்திரை மூலம் மக்களை அன்புடன் ஒன்றிணைக்க தனது கட்சி முயற்சிப்பதாக கூறினார். நாட்டில் உள்ள 22 பணக்காரர்களுக்குச் சமமான செல்வம் மக்கள்தொகையில் பாதி பேருக்குச் சொந்தமானது என்றும், ஐந்து சதவீத பணக்காரர்களிடம் 60 சதவீதப் பணம் உள்ளது என்றும் ராகுல் காந்தி கூறினார்.

வேலையில்லாத் திண்டாட்டம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது என்று கூறிய ராகுல்காந்தி, நாட்டில் வேலையின்மை விகிதம் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தை விட இரட்டிப்பாக உள்ளது என்றும் கூறினார்.

click me!