பாஜக வெளியிட்டுள்ள முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் சிட்டிங் எம்.பி.க்கள் 33 பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே டெல்லியில் பட்டியலை வெளியிட்டார்.
அதன்படி, 195 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் 51, மேற்குவங்கத்தில் 20, மத்திய பிரதேசத்தில் 24, குஜராத்தில் 15, ராஜஸ்தானில் 15, கேரளாவில் 12, சத்தீஸ்கரில் 11, தெலங்கானாவில் 9, அசாமில் 11, டெல்லியில் 5, ஜம்மு காஷ்மீரில் 2, உத்தராகண்டில் 3, அருணாச்சலப் பிரதேசத்தில் 2, கோவாவில் 1, திரிபுராவில் 1, அந்தமானில் 1, டையூ-டாமனில் 1 தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 28 பேர் பெண்கள், 47 பேர் இளைஞர்கள், 27 பேர் எஸ்சி, 18 பேர் எஸ்டி, 57 பேர் ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
அதேசமயம், பாஜக வெளியிட்டுள்ள முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் சிட்டிங் எம்.பி.க்கள் 33 பேருக்கு பதிலாக புதிய முகங்கங்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். அசாமில் உள்ள 11 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. அவர்களில், ஆறு வேட்பாளர்கள் சிட்டிங் எம்.பி.க்கள், மற்ற ஐந்து பேர் புதிய முகங்கள். 2019 பொதுத் தேர்தலில் ராஜ்தீப் ராய் வெற்றி பெற்ற சில்சார் மக்களவைத் தொகுதியில் பரிமல் சுக்லபைத்யாவை நிறுத்தப்பட்டுள்ளார்.
பிஜூலி கலிதா மேதி ராணி ஓஜாவின் கௌஹாட்டி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். 2019 இல் பல்லப் லோச்சன் தாஸ் வெற்றி பெற்ற தேஜ்பூர் மக்களவைத் தொகுதியில் ரஞ்சித் தத்தா போட்டியிடுகிறார். பாஜக எம்.பி. ஹோரன் சிங் பேவின் தொகுதியில் அக்கட்சி வேட்பாளராக அமர் சிங் டிசோ போட்டியிடுகிறார். திப்ருகர் தொகுதியில் தற்போதைய எம்பி ராமேஸ்வர் டெலிக்கு பதிலாக மத்திய அமைச்சர் சர்பானந்த் சோனோவாலை வேட்பாளராக பாஜக நியமித்துள்ளது.
3வது முறை சேவை செய்ய காத்திருக்கிறேன்.. பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு..
சத்தீஸ்கரில் 11 இடங்களுக்கான பாஜக வேட்பாளர்கள் பட்டியலில், நான்கு பேர் புதிய முகங்கள். டெல்லி ஐந்து மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. அவர்களில் நான்கு பேர் புதிய முகங்கள். இரண்டு முறை எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஹர்ஷ் வர்தனுக்கு பதிலாக சாந்தனி சௌக் மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக பிரவீன் கண்டேல்வாலை பாஜக அறிவித்துள்ளது. மேற்கு டெல்லி தொகுதிக்கு இரண்டு முறை எம்பியாக இருந்த பர்வேஷ் சாஹிப் சிங் வர்மாவுக்கு பதிலாக கமல்ஜீத் செஹ்ராவத் நிறுத்தப்பட்டுள்ளார்.
தற்போது மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி வசம் உள்ள புது டெல்லி மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக மறைந்த பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். தெற்கு டெல்லியில் இருந்து ரமேஷ் பிதுரிக்கு பதிலாக ராம்வீர் சிங் பிதுரியை பாஜக வேட்பாளராக நியமித்துள்ளது.
குஜராத்தில் உள்ள 15 மக்களவை தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதில், ஐந்து சிட்டிங் எம்.பி.க்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் சிட்டிங் எம்.பி.க்கள் 7 பேருக்கு பதிலாக புதியவர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.