இன்று உலக சுற்றுசூழல் தினம்..பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும்! மத்திய அரசு கடிதம்.!

By Raghupati RFirst Published Jun 5, 2022, 9:06 AM IST
Highlights

World Environment Day 2022 : பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் செயல்களை ஊக்குவிக்கவும், ஆண்டு தோறும் ஜூன் 5ம்தேதியான இன்று உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படுகிறது. 

1974ம் ஆண்டு முதல் ஐக்கியநாடுகள் சபை சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நீர்நிலைகள், காடுகள், மலைகள், அதிலுள்ள அரிய உயிரினங்கள், பறவைகள், தாவரங்கள், கடற்கரைகள் என்று அனைத்தும் இயற்கை அன்னை நமக்கு தாரை வார்த்து கொடுத்த இணையற்ற பொக்கிஷங்கள். குறிப்பாக நிலத்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பிரித்தனர். அங்கு வாழும் மக்களுக்கு ஏற்ற கலாச்சாரங்களையும், தொழில்களையும் உருவாக்கினர். நம்மை சுற்றியிருக்கும் நிலத்தையும், நீரையும், காற்றையும் வாழ்வின் உயரிய அங்கமாக கருதி  போற்றி வழிபட்டனர். 

இதனால் இயற்கையை மாசுபடுத்தாமல் போற்றி பாதுகாக்க வேண்டும் என்ற எண்ண ஓட்டம், இயல்பிலேயே இருந்துள்ளது. அதுவே எழில்மிகு பூமியை நம்மிடம் விட்டுச்செல்ல வழி வகுத்தது. ஆனால், இன்றைய நவீன அறிவியலின் வளர்ச்சியால் வெளிப்படும் ரசாயன கழிவுகளும், புகைமண்டலங்களும் இனிய சுற்றுச்சூழலை அடியோடு  சிதைத்து வருகிறது. நம்மால் சுற்றுச்சூழல் சீரழியும் நேரத்தில், அதன் சீற்றங்களையும் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்பது எழுதப்படாத விதி. ஆண்டுதோறும் அதிகரிக்கும் கத்திரி வெயிலின் தாக்கமும், திடீரென்று பெய்யும் பேய் மழையும் இயற்கையில் ஒரு ஒழுங்கற்ற தன்மை உருவாகிக் கொண்டிருப்பதை நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கும் அபாய சாட்சியங்கள். 

வெப்பமயமாதல் பிரச்னையால் பனிப்பாறைகள் உருகி, கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. அதே நேரத்தில், நிலத்தடி நீர்மட்டமோ அதலபாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது. இது மனித குலத்தோடு அனைத்து உயிரினங்களுக்கும் ஆபத்தை  விளைவிக்கும் என்பது நிதர்சனம். இந்த பூமிப்பந்தில் பயிரினங்கள், கால்நடைகள், விலங்கினங்கள், பறவைகளோடு  ஒப்பிடுகையில், மனிதன் கோடியில் ஒரு துளி. ஆனால், இந்த துளிகளின் செயல்பாடுகளே இயற்கையை மலடாக்கி கொண்டிருக்கிறது. எனவே, இதை தவிர்க்க வேண்டும், தடுக்க வேண்டும் என்ற எண்ண ஓட்டம் ஒவ்வொருவர் மூளைக்குள்ளும் உருவாக வேண்டும்.

கரியமில வாயுவின் உயர்வு, குப்பைகளினால் கெட்டுப்போன நிலங்களின் பரப்பளவு அதிகரித்தல், உலகின் சராசரி வெப்பநிலை அதிகரித்தல், வாழ்வதற்கு தகுதியில்லாத நிலங்கள் உருவாதல், பாலைவனப்பரப்பு அதிகரித்தல், கடல்நீர் மட்டம் உயர்தல், அடிக்கடி காட்டுத்தீ ஏற்படுதல், புதிய வகையான நோய் உருவாதல், பருவநிலை மாற்றத்தினால் அதிக அளவு மழை/அதிக அளவு வெப்பம் நிலவுதல் என ஒரு புத்தகம் எழுதும் அளவிற்கு பல இன்னல்களை ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வருடமும் நாம் எதிர்கொண்டு வருகிறோம். 

இந்த ஒரு ஆபத்தான சூழ்நிலையில் இருந்து இந்த உலகத்தினையும், மக்களையும், பிற உயிரினங்களையும் காப்பாற்றுவதற்கு ஒவொரு நாட்டின் அரசாங்கம் மட்டுமல்லாது, ஒவ்வொரு தனி மனிதனும் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலைமைகளின் முக்கியத்துவத்தினை உணரவேண்டியுள்ளது. ஒட்டுமொத்த மனித இனமும் சேர்ந்து உழைக்க வேண்டிய இந்த நேரத்தில் உலகத்தின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் நிகழ்வான இந்த சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட உள்ளது.

 சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் கழிவுகளை அகற்றுதல், மரக்கன்றுகள் நடுதல்,யோகா பயிற்சி என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒடிஷா மாநிலம், பூரி கடற்கரையில் உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு மணல் சிற்பிகள் மணலில் வரைந்த சிற்ப ஓவியங்கள் பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறது.

இதையும் படிங்க :AIADMK : அமமுக முக்கிய புள்ளிகள் அதிமுகவுக்கு தாவினர்..டிடிவி தினகரன் அதிர்ச்சி !

இதையும் படிங்க :ஸ்டாலின் ஆட்சி நம்பர் 1.. அப்போ கலைஞர் ஆட்சி நல்லா இல்லையா ? உதயநிதிக்கு சவால் விட்ட அண்ணாமலை

click me!