வீட்டு செலவை மிச்சப்படுத்தி காங்கிரஸ் வேட்பாளரின் தேர்தல் செலவுக்கு பெண்கள் நன்கொடை அளித்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விரைவில் நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அந்த வகையில், மொத்தம் 42 தொகுதிகளை கொண்ட மேற்குவங்க மாநிலத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான 56 வேட்பாளர்களைக் கொண்ட மூன்றாவது பட்டியலை காங்கிரஸ் கட்சி கடந்த மாதம் 21ஆம் தேதி வெளியிட்டது. இதையடுத்து, வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான அதிர் ரஞ்சன் சவுத்ரி மேற்கு வங்க மாநிலம் பெர்ஹாம்பூரில் இருந்து போட்டியிடவுள்ளார்.
அந்த தொகுதியில் 1999ஆம் ஆண்டு முதல் போட்டியிட்டு தொடர்ந்து அவர் வெற்றி பெற்று வருகிறார். இதனால், தொகுதி மக்களுடன் மிகவும் இணக்கமாக பிணைப்புடன் இருப்பவர். இந்த நிலையில், தங்களது வீட்டு செலவை மிச்சப்படுத்தி காங்கிரஸ் வேட்பாளர் அதிர் ரஞ்சன் சவுத்ரியின் தேர்தல் செலவுக்கு பெண்கள் நன்கொடை அளித்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் பெஹ்ராம்பூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு ஆதரவாக முர்ஷிதாபாத் ராணா கிராமத்தில் வசிக்கும் 11 பெண்கள் இணைந்து ரூ.11,000 நன்கொடை வழங்கியுள்ளனர். அவரது தேர்தல் பிரசார செலவுகளுக்காக தங்களது வீட்டு செலவை மிச்சப்படுத்தி இந்த நன்கொடையை அப்பெண்கள் வழங்கியுள்ளனர்.
வீட்டு செலவுக்கு ஒதுக்கிய பணம், விவசாயம், ஆடு வளர்ப்பு மூலம் கிடைக்கப்பெற்ற பணம், அவர்களது கணவர்கள் சம்பாதித்த ஒரு நாள் கூலி ஆகியவற்றை சேர்த்து அதிர் ரஞ்சன் சவுத்ரியின் தேர்தல் செலவுக்கு அப்பெண்கள் நன்கொடை அளித்துள்ளனர்.
மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 22 தொகுதிகளிலும், பாஜக 18 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.